1துணிவுள்ள மனைவியை

அடைந்த கணவன் பேறுபெற்றவன்.

அவனுடைய வாழ்நாளின்

எண்ணிக்கை இரு மடங்காகும்.

2பற்றுள்ள மனைவி தன் கணவரை

மகிழ்விக்கிறாள்;

அவன் தன் வாழ்நாள் முழுவதும்

அமைதியாகக் கழிப்பான்.

3நல்ல மனைவியை ஒருவனுக்குக்

கிடைக்கும் நல்ல சொத்து.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர்

பெறும் செல்வங்களுள் ஒன்றாக

அவளும் அருளப்படுவாள்.

4செல்வனாகவோ ஏழையாகவோ

இருந்தாலும் அத்தகையவன்

உள்ளம் மகிழ்ந்திருக்கும்;

எக்காலத்திலும் அவனது

முகம் மலர்ந்திருக்கும்.

5மூன்றைப்பற்றி என் உள்ளம்

அஞ்சுகிறது;

நான்காவது என்னை

அச்சுறுத்துகிறது. அவை: நகரத்தின் அவதூறு,

மக்கள் கும்பல்,

தவறான குற்றச்சாட்டு — .

இவை மூன்றும் சாவினும் கொடியவை.

6ஒரு பெண் மற்றொரு

பெண்மேல் பொறாமைப்படுவது

உள்ளத்துக்குத் துன்பமும்

துயரமும் தருகிறது.

வெடுக்கென்று பேசும் நாவைக்

கொண்டவளை எல்லோரும்

உணர்ந்து கொள்வர்.

7கெட்ட மனைவி எருதுகள்

பூட்டிய பொருந்தா நுகத்தடி

போன்றவள்; அவளை

அடக்குகிறவன் தேளைப்

பிடித்தவன் போன்றவன்.

8குடிவெறியில் உள்ள மனைவி

கடுஞ்சினத்தைத் தூண்டிவிடுவாள்;

அவள் தன் வெட்கத்தை

மறைக்க மாட்டாள்.

9கற்பு இழந்த பெண்ணை

அவளுடைய கண்வெட்டுகளாலும்

கண் இமைகளாலும்

அறிந்துகொள்ளலாம்.

10அடக்கமற்ற மகளைக்

கண்டிப்புக்குள் வைத்திரு;

இல்லையேல் அவள் கண்டிப்புத்

தளர்ந்த நிலையை உணர்ந்து

அதைத் தனக்கெனப் பயன்படுத்திக்கொள்வாள்.

11நாணமற்ற அவளுடைய

கண்களைப்பற்றி

எச்சரிக்கையாய் இரு;

இல்லையேல், அவள்

உன்னை இழிவுபடுத்தும்போது

வியப்படையாதே.

12தாகம் கொண்ட

வழிப்போக்கனைப்போன்று

அவள் தன் வாயைத் திறப்பாள்;

தனக்கு அருகில் இருக்கும்

எந்தத் தண்ணீரையும் பருகுவாள்;

ஒவ்வொரு கூடாரத்தின்

முளைக்குச்சிக்கு முன்னும் அமர்வாள்;

எல்லா அம்புகளுக்கும்

தன் தூணியைத் திறப்பாள்.

13ஒரு மனைவியிடம் விளங்கும்

நன்னயம் அவள் கணவனை

மகிழ்விக்கும்;

அவளிடம் காணப்படும்

அறிவாற்றல் அவன் எலும்புகளுக்கு

வலுவூட்டும்.

14அமைதியான மனைவி ஆண்டவர்

அளித்த கொடை; நற்பயிற்சி

பெற்றவளுக்கு ஈடானது ஏதுமில்லை.

15அடக்கமுள்ள மனைவியின்

அழகே அழகு! கற்புள்ளவளுக்கு

ஈடு இணை எதுவுமில்லை.

16ஒழுங்கமைதி உடைய இல்லத்தில்

விளங்கும் நல்ல மனைவியின்

அழகு ஆண்டவர் உறையும்

உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.

17தக்க பருவத்தில் மிளிரும்

அவளது அழகிய முகம்

தூய விளக்குத் தண்டின்மேல்

ஒளிரும் விளக்குப் போன்றது.

18உறுதியான அடிகளின்மேல்

அமைந்த அவளுடைய அழகான

கால்கள் வெள்ளித் தளத்தின்மேல்

நிற்கும் பொன் தூண்களைப்

போன்றவை.

19*[குழந்தாய், உன் இளமைப்

பொலிவைத் தீங்கின்றிக்

காப்பாற்று; உன் வலிமையை

அன்னியரிடம் வீணாக்காதே.

20சமவெளியெங்கும் வளமான

வயலைத் தேடு;

உன் நல்ல வழிமரபில்

நம்பிக்கை வைத்து,

உன் விதையை அங்கே விதை.

21இவ்வாறு உன் வழிமரபினர்

வலிமையுறுவர்;

நல்ல வழிமரபில்

நம்பிக்கை கொண்டவர்களாய்

உயர்வு பெறுவர்.

22விலைமாது எச்சில்

போன்று கருதப்படுவாள்;

மணமுடித்த பெண்

தன் கள்ளக்காதலர்களுக்குச்

சாவுக்கூடமாய் அமைவாள்.

23இறைப்பற்றில்லா மனைவி,

சட்டத்தைக் கடைப்பிடிக்காதவனுக்குக்

கொடுக்கப்படும் உடைமை;

இறைப்பற்றுள்ள மனைவி

ஆண்டவர்பால் அச்சம் கொள்வோனுக்குக்

கொடுக்கப்படும் கொடை.

24நாணமற்ற மனைவி

தன் இகழ்ச்சியில்

மகிழ்ச்சி அடைகிறாள்;

நாணமுள்ள பெண் தன்

கணவன் முன்கூட

அடக்கமாய் இருப்பாள்.

25அடக்கமற்ற மனைவி

நாய் எனக் கருதப்படுவாள்;

நாணமுள்ளவள்

ஆண்டவருக்கு அஞ்சுவாள்.

26தன் கணவனை மதிக்கும்

மனைவியை ஞானி என

அனைவரும் கண்டுகொள்வர்;

தன் கணவனை மதிக்காத,

செருக்குற்ற மனைவியை

இறைப்பற்றில்லாதவள் என

அனைவரும் அறிந்து கொள்வர்.

நல்ல மனைவியை அடைந்த

கணவன் பேறுபெற்றவன்;

அவனுடைய வாழ்நாளின்

எண்ணிக்கை இருமடங்காகும்.

27கூச்சலிட்டு வம்பளக்கும்

மனைவி போருக்கு அழைக்கும்

எக்காளம் போன்றவள்;

இத்தகைய மனைவியை

அடைந்தவன் போர்க் குழப்பத்தின்

நடுவே தன் வாழ்நாளைக் கழிப்பான்.]

வருத்தும் காட்சிகள்

28இரண்டு வகையினரைப் பற்றி

என் உள்ளம் வருந்தியது;

மூன்றாம் வகையினர்

என் சீற்றத்தைக் கிளறினர்.

அவர்கள்:

வறுமையில் வாடும் போர்வீரர்,

இகழப்படும் அறிவாளிகள்,

நன்னெறியை விட்டுப்

பாவத்துக்குத் திரும்புவோர்.

மேற்கூரியோரை வீழ்த்தும்படி

ஆண்டவர் வாளை ஏற்பாடு செய்வார்.

வாணிகம்

29தவறுகளைத் தவிர்ப்பது

வணிகருக்கு அரிது;

விற்பனையாளருக்கும்

பாவங்களை விலக்குவது அரிது.


26:1 நீமொ 31:10-31. 26:9 நீமொ 6:25. 26:10-12 சீஞா 7:24-25; 42:9-11. 26:17 லேவி 24:2-4.
26:19-27 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 26:27 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.