இனியவை மூன்று; இன்னா மூன்று

1என் மனத்திற்குப்

பிடித்தவை மூன்று;

அவை ஆண்டவர் முன்னும்

மனிதர்முன்னும் அழகுள்ளவை.

அவை; உடன்பிறப்புகளிடையே

காணப்படும் ஒற்றுமை,

அடுத்திருப்பாரோடு ஏற்படும்

நட்பு, தங்களுக்குள்

ஒன்றி வாழும் கணவன் மனைவியர்.

2மூன்று வகை மனிதரை

நான் வெறுக்கிறேன்;

அவர்களின் வாழ்வை

நான் பெரிதும்

அருவருக்கிறேன்.

அவர்கள்; இறுமாப்புக்

கொண்ட ஏழைகள்,

பொய் சொல்லும் செல்வர்,

கூடா ஒழுக்கத்தில் ஈடுபடும்

அறிவற்ற முதியவர்.

முதியோர்

3உன் இளமையில் நீ எதையும்

சேமித்து வைக்காவிடில்

முதுமையில் எதைக் காண்பாய்?

4தீர்ப்பு வழங்குவது

நரை திரை விழுந்தோருக்கு

ஏற்றது; அறிவுரை

கூறுவது பெரியவர்களுக்குத்

தக்கது.

5முதியோருக்கு ஞானமும்,

மாண்புடையோருக்குச்

சிந்தனையும் அறிவுரையும்

எத்துணைச் சிறந்தவை.

6பரந்த பட்டறிவே முதியோருக்கு

மணிமுடி; ஆண்டவருக்கு

அஞ்சுவதே அவர்களுக்கு மாட்சி.

பேறுபெற்றோர்

7பேறுபெற்றோர் என நான்

கருதுவோர் ஒன்பது வகைப்படுவர்;

பத்தாம் வகையினரைப்பற்றியும்

என் நாவால் எடுத்துரைப்பேன்.

அவர்கள்; தங்கள் பிள்ளைகளில்

மகிழ்ச்சியுறும் பெற்றோர்,

தங்கள் பகைவரின் வீழ்ச்சியைக்

காண வாழ்வோர்,

8அறிவுக்கூர்மை கொண்ட

மனைவியருடன் வாழும்

கணவர்கள்*, நாவால் தவறாதோர்,

தங்களைவிடத் தாழ்ந்தோருக்குப்

பணிவிடை செய்யாதோர்,

9அறிவுத்திறனைக் கண்டடைந்தோர்,

செவிசாய்ப்போரிடம் பேசுவோர்,

10ஞானத்தைக் கண்டு

கொண்டோர் எத்துணை

மேலானவர்கள்! ஆயினும்

ஆண்டவருக்கு அஞ்சுவோரை

விடச் சிறந்தவர்கள் எவருமில்லை.

11ஆண்டவருக்கு அஞ்சுதல்

எல்லாவற்றையும்விட மேலானது.

அதனைப் பெற்றவருக்கு

ஈடு இணை ஏது?

12*[ஆண்டவருக்கு அஞ்சுதலே

அவரை அன்புசெய்வதன்

தொடக்கம்; பற்றுறுதியே

அவரைப் பற்றிக் கொள்வதன்

தொடக்கம்.]

பெண்கள்

13வருத்தங்களிலெல்லாம்

கொடிது மனவருத்தமே;

தீமைகளிலெல்லாம் கொடிது

பெண்ணிடமிருந்து வரும் தீமையே.

14துன்பங்களிலெல்லாம் கொடிது

நம்மை வெறுப்பவரிடமிருந்து

வரும் துன்பமே;

பழிகளிலெல்லாம் கொடிது

நம் பகைவரிடமிருந்து வரும் பழியே.

15தலைகளிலெல்லாம் கொடிது

பாம்பின் தலையே;

சீற்றத்திலெல்லாம் கொடிது

பகைவரின் சீற்றமே.

16கெட்ட மனைவியுடன்

வாழ்வதைவிடச் சிங்கத்துடனும்

அரக்கப் பாம்புடனும் வாழ்வது மேல்.

17பெண்ணின் கெட்ட நடத்தை

அவளது தோற்றத்தை

மாற்றுகிறது; கரடியின்

முகத்தைப்போன்று அவளது

முகத்தை வேறுபடுத்துகிறது.

18அவளுடைய கணவர்

அடுத்தவர்களுடன் அமரும்போது

அவர்கள் சொல்வதைக் கேட்டுக்

கடுமையாகப் பெருமூச்சுவிடுவார்.

19பெண்ணின் தீச்செயலுக்கு

முன் மற்ற எல்லாமே சிறிது.

பாவிகளுடைய கேட்டுக்கு

அவள் ஆளாகட்டும்.

20மணல்மேட்டில் முதியவரால்

ஏறமுடியாது; வாயாடி

மனைவியுடன் அமைதியான

கணவர் வாழ முடியாது.

21மங்கையரின் அழகினில்

மயங்கி விடாதே; பெண்கள்மீது

இச்சை கொள்ளாதே.

22தன் மனைவியின் ஆதரவில்

வாழ்க்கை நடத்தும் கணவர்

அவளுடைய சினத்துக்கும்

செருக்குக்கும் ஆளாகிப்

பெரும் இகழ்ச்சி அடைவார்.

23சோர்வுற்ற மனம், வாட்டமான முகம்,

உடைந்த உள்ளம் ஆகியவை

கெட்ட மனைவியினால் வருகின்றன.

தன் கணவரை மகிழ்விக்காத

மனைவி நலிவுற்ற கைகளையும்

வலிமையற்ற முழங்கால்களையும்

போன்றவள்.

24பெண்ணாலேயே பாவம்

தோன்றியது. அவளை

முன்னிட்டே நாம்

அனைவரும் இறக்கிறோம்.

25தொட்டியிலிருந்து தண்ணீர்

ஒழுகியோடவிடாதே;

கெட்ட பெண்ணை

அவளுடைய விருப்பம்

போலப் பேசவிடாதே.

26உன் விருப்பப்படி

உன் மனைவி

நடக்கவில்லையெனில்

உன்னிடமிருந்து அவளை

விலக்கிவை.


25:4 யோபு 32:7. 25:6 நீமொ 16:31. 25:7 நீமொ 23:24. 25:9 நீமொ 3:13. 25:24 தொநூ 3:6; 1 திமொ 2:14.
25:8 எபிரேய, சிரியாக்குச் சுவடிகளில் ‘காளையையும் கழுதையையும் பிணைத்து உழாதோர்’ என்னும் பாடம் காணப்படுகிறது. கிரேக்கத்தில் இது விடப்பட்டுள்ளது. (காண் இச 22:10). 25:12 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.