யூதித்தின் மன்றாட்டு

1யூதித்து குப்புற விழுந்தார்; தலையில் சாம்பலைத் தூவிக்கொண்டார்; தாம் அணிந்திருந்த சாக்கு உடையைக் களைந்தார். எருசலேமில் கடவுளின் இல்லத்தில் அன்றைய மாலைத் தூப வழிபாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில், ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்;
2“என் மூதாதையான சிமியோனின் கடவுளாகிய ஆண்டவரே, அயல்நாட்டாரைப் பழிவாங்குமாறு அவரது கையில் ஒரு வாளைக் கொடுத்தீர். அவர்கள் ஒரு கன்னிப் பெண்ணைக் கறைப்படுத்துவதற்காக அவளது இடைக் கச்சையைத் தளர்த்தினார்கள்; அவளை இழிவுபடுத்துவதற்காக அவளது ஆடையைக் கிழித்தார்கள்; அவளைப் பழிக்குள்ளாக்குவதற்காக அவளது கருப்பையைத் தீட்டுப்படுத்தினார்கள். ‘இவ்வாறு செய்யலாகாது’ என்று நீர் உரைத்திருந்தும் அதற்கு மாறாக அவர்கள் செயல்பட்டார்கள்.
3எனவே, அவர்களின் ஆளுநர்கள் கொல்லப்பட ஒப்புவித்தீர். வஞ்சனையால் கறைபட்ட அவர்களது படுக்கை, குருதி தோய்ந்திருக்கச் செய்தீர்; அடிமைகளை அவர்களுடைய தலைவர்களோடும், தலைவர்களை அவர்களுடைய அரியணைகளோடும் அடித்து நொறுக்கினீர்.
4மேலும், அவர்களுடைய மனைவியர் கவர்ந்து செல்லப்படவும், புதல்வியர் சிறைப்படுத்தப்படவும், கொள்ளைப் பொருள்கள் அனைத்தும் உம் அன்பான மக்களால் பகிர்ந்துகொள்ளப்படவும் நீர் ஒப்புவித்தீர். உம் மக்கள் உம்மீது பற்றார்வம் கொண்டு, தங்கள் குருதியால் ஏற்பட்ட தீட்டை அருவருத்து, நீர் உதவி அளிக்கும்படி உம்மை மன்றாடினார்கள். கடவுளே, என் கடவுளே, கைம்பெண்ணாகிய எனக்கும் செவிசாய்த்தருளும்.
5“அப்போது நடந்தவை, அதற்கு முன்னும் பின்னும் நடந்தவை ஆகிய அனைத்தையும் செய்தவர் நீரே; இப்போது நிகழ்வனவற்றையும் இனி நிகழ விருப்பனவற்றையும் நீரே திட்டமிட்டுள்ளீர். நீர் திட்டமிட்டவையெல்லாம் நிறைவேறின.
6நீர் திட்டமிட்டவை அனைத்தும் உம்முன் நின்று, ‘இதோ உள்ளோம்’ என்றன; உம் வழிகளெல்லாம் ஆயத்தமாய் உள்ளன; உம் தீர்ப்பு முன்னறிவு மிக்கது.
7இப்போது அசீரியர்கள் பெருந்திரளான படையோடு வந்திருக்கிறார்கள்; தங்கள் குதிரைகளின் பொருட்டும் குதிரை வீரர்களின் பொருட்டும் இறுமாப்புக் கொண்டுள்ளார்கள்; தங்கள் காலாட்களின் வலிமையால் செருக்குக் கொண்டுள்ளார்கள்; கேடயம், ஈட்டி, வில், கவண் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால், போர்களை முறியடிக்கும் ஆண்டவர் நீர் என்பதை அவர்கள் அறியார்கள்.
8ஆண்டவர் என்பது உமது பெயர். உமது ஆற்றலால் அவர்களது வலிமையை அடக்கிவிடும்; உமது சினத்தால் அவர்களின் திறத்தை அழித்துவிடும்; ஏனெனில், உமது திருவிடத்தைக் கறைப்படுத்தவும், உமது மாட்சிமிகு பெயர் விளங்கும் பேழையைத் தீட்டுப்படுத்தவும் உமது பலிபீடத்தின் கொம்புகளை வாளால் நொறுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
9அவர்களுடைய இறுமாப்பை உற்றுநோக்கும்; அவர்கள் தலைமேல் உமது சினத்தைக் கொட்டும்; எனது திட்டத்தைச் செயல்படுத்தக் கைம்பெண்ணாகிய எனக்கு வலிமை தாரும்.
10என் உதடுகளின் வஞ்சனையால் அடிமையை அவனுடைய ஆளுநனோடும், ஆளுநனை அவனுடைய பணியாளனோடும் தாக்கி வீழ்த்தும்; அவர்களது செருக்கை ஒரு பெண்ணின் கைவன்மையால் நொறுக்கிவிடும்.
11“உமது வலிமை ஆள் எண்ணக்கையைப் பொறுத்ததன்று; உமது ஆற்றல் வலிமைவாய்ந்தோரைப் பொருத்ததன்று. நீர் தாழ்ந்தோரின் கடவுள்; ஒடுக்கப்பட்டோரின் துணைவர்; நலிவுற்றோரின் ஆதரவாளர்; கைவிடப்பட்டோரின் காவலர்; நம்பிக்கையற்றோரின் மீட்பர்.
12என் மூதாதையின் கடவுளே, என் வேண்டுதலைக் கனிவோடு கேளும்; இஸ்ரயேலின் உரிமைச்சொத்தாகிய இறைவா, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, நீரூற்றுகளைப் படைத்தவரே, படைப்புகளுக்கெல்லாம் மன்னரே, என் மன்றாட்டுக்குப் பரிவோடு செவிசாயும்.
13உமது உடன்படிக்கைக்கும் உமது தூய இல்லத்துக்கும் சீயோன் மலைக்கும் உம் மக்கள் உரிமையாக்கிக் கொண்ட இல்லங்களுக்கும் எதிராகக் கொடியவற்றைத் திட்டமிட்டுள்ளோரை என் வஞ்சகச் சொற்கள் காயப்படுத்திக் கொல்லச் செய்யும்.
14நீரே கடவுள் என்றும், எல்லா ஆற்றலும் வலிமையும் கொண்ட கடவுள் என்றும், இஸ்ரயேல் இனத்தைப் பாதுகாப்பவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் உம் மக்களினம் முழுவதும், அதன் எல்லாக் குலங்களும் அறியச் செய்யும்.”

9:1 விப 30:7-8; திபா 141:2. 9:2 தொநூ 34:1-29. 9:6 யோபு 38:35; பாரூ 3:35.