2. யூதித்து வழியாகக் கிடைத்த வெற்றி

கைம்பெண் யூதித்து

1அக்காலத்தில் யூதித்து இதைப்பற்றிக் கேள்விப்பட்டார். யூதித்து மெராரியின் மகள்; மெராரி ஓசின் மகன்; ஓசு யோசேப்பின் மகன்; யோசேப்பு ஓசியேலின் மகன்; ஓசியேல் எல்க்கியாவின் மகன்; எல்க்கியா அனனியாவின் மகன்; அனனியா கிதியோனின் மகன்; கிதியோன் ரெபாயிம் மகன்; ரெபாயிம் அகித்தூபின் மகன்; அகித்தூபு எலியாவின் மகன்; எலியா இல்க்கியாவின் மகன்; இல்க்கியா எலியாபின் மகன்; எலியாபு நத்தனியேலின் மகன்; நத்தனியேல் சலாமியேலின் மகன்; சலாமியேல் சரசதாயின் மகன்; சரசதாய் இஸ்ரயேலின் மகன்.
2யூதித்தின் கணவர் மனாசே. அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் மனாசே இறந்துபோனார்.
3அவர் தம் வயலில் கதிர்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்டபொழுது, கடும் வெயில் அவரது தலையைத் தாக்கவே, அவர் படுத்த படுக்கையானார்; பின் தம் நகரான பெத்தூலியாவில் உயிர் துறந்தார்; தோத்தானுக்கும் பால்மோனுக்கும் இடையில் இருந்த வயலில் தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
4யூதித்து கைம்பெண் ஆனார்; மூன்று ஆண்டு நான்கு மாதமாய்த் தம் இல்லத்திலேயே இருந்தார்.
5தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காகக் கூடாரம் ஒன்று அமைத்துக்கொண்டார்; இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்; கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்திருந்தார்;
6தம் கைம்மைக் காலத்தில் ஓய்வுநாளுக்கு முந்தினநாளும் ஓய்வுநாள் அன்றும், அமாவாசைக்கு முந்தின நாளும் அமாவாசை அன்றும், இஸ்ரயேல் இனத்தாருக்குரிய திருநாள்கள், மகிழ்ச்சியின் நாள்கள்தவிர மற்ற நாள்களில் நோன்பிருந்துவந்தார்.
7அவர் பார்வைக்கு அழகானவர்; தோற்றத்தில் எழில் மிக்கவர். ஆண் பெண் பணியாளர்களோடு பொன், வெள்ளி, கால்நடைகள், வயல்கள் ஆகியவற்றை அவர் கணவர் மனாசே அவருக்கு விட்டுச்சென்றிருந்தார். இவையெல்லாம் யூதித்தின் உடைமையாயின.
8யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார். அவரைப்பற்றி யாரும் தவறாகப் பேசியதில்லை.

யூதித்தும் நகரின் மூப்பர்களும்

9தண்ணீர்ப் பஞ்சத்தால் மக்கள் மிகவும் சோர்வுற்று, ஆளுநருக்கு எதிராகக் கூறியிருந்த கடுஞ் சொற்களையும், ஐந்து நாள்களுக்குப்பின் நகரை அசீரியரிடம் கையளிக்கப் போவதாக ஊசியா ஆணையிட்டுக் கூறியிருந்த அனைத்தையும் யூதித்து கேள்வியுற்றார்.
10உடனே தம் நகரின் மூப்பர்களை ஊசியா, காபிரி, கார்மி ஆகியோரை அழைத்து வருமாறு, தன் உடைமைகளையெல்லாம் கண்காணித்துவந்த தம் பணிப்பெண்ணை அனுப்பிவைத்தார்.
11மூப்பர்கள் வந்தபோது யூதித்து “பெத்தூலியாவில் வாழும் மக்களின் ஆளுநர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; இன்று மக்களிடம் நீங்கள் கூறிய சொற்கள் முறையற்றவை. ஆண்டவர் தம் மனத்தை மாற்றி, குறித்த நாளுக்குள் நமக்கு உதவி அளிக்காவிடில் இந்த நகரை நம் எதிரிகளிடம் ஒப்புவிக்கப்போவதாக நீங்கள் உறுதி அளித்துக் கடவுள்மேல் ஆணையிட்டிருக்கிறீர்கள்.
12இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்? மனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக உங்களையே உயர்த்திக் கொள்ள நீங்கள் யார்?
13இப்போது, எல்லாம்வல்ல ஆண்டவரைச் சோதிக்கின்றீர்கள்; ஆனால் நீங்கள் எதையும் என்றுமே அறிந்து கொள்ளப்போவதில்லை.
14மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது; மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது. அவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை எவ்வாறு உங்களால் தேடி அறிய முடியும்? அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்த கொள்ள முடியும்? அவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்? சகோதரர்களே, நம் கடவுளாகிய ஆண்டவரின் சினத்தைத் தூண்டி விடாதீர்கள்.
15இந்த ஐந்து நாள்களில் நமக்கு உதவிபுரிய அவருக்கு விருப்ப மில்லை என்றாலும், அவருக்கு விருப்பமான எந்த நேரத்திலும் நம்மைப் பாதுகாக்கவோ நம் பகைவர்கள் காண நம்மை அழித்து விடவோ அவருக்கு ஆற்றல் உண்டு.
16நம் கடவுளாகிய ஆண்டவரின் திட்டங்களுக்கு நிபந்தனை விதிக்காதீர்கள்; ஏனெனில், மனிதரை அச்சுறுத்துவதுபோலக் கடவுளை அச்சுறுத்த முடியாது; மானிடரை மன்றாட்டினால் மாற்றுவதுபோல் ஆண்டவரையும் மாற்ற முடியாது.
17எனவே, அவரிடமிருந்து மீட்பை எதிர்பார்ப்பவர்களாய், நமக்கு உதவி செய்ய அவரை மன்றாடுவோம். அவருக்கு விருப்பமானால் அவர் நமது மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பார்.
18“முற்காலத்தில் நடந்ததுபோல, நம் தலைமுறையில் நாம் வாழும் இக்காலத்தில், நம்மில் எந்தக் குலமோ குடும்பமோ நாடோ நகரமோ கையால் உருவாக்கப்பட்ட சிலைகளைத் தெய்வங்களாக வணங்கியதில்லை.
19அவ்வாறு வணங்கியதால்தான் நம் மூதாதையர்கள் வாளுக்கிரையாகி, சூறையாடப்பட்டு, நம் எதிரிகளின் முன்னிலையில் அறவே அழிந்தார்கள்.
20நாம் ஆண்டவரைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை. அதனால் அவர் நம்மையோ நம் இனத்தாருள் எவரையுமோ வெறுத்து ஒதுக்கமாட்டார் என நம்புகிறோம்.
21நாம் பிடிபட்டால் யூதேயா முழுவதுமே பிடிபடும்; நம் திருவிடம் கொள்ளையடிக்கப்படும். அதன் தூய்மைக்கேட்டுக்குக் கழுவாயாக நாம் குருதி சிந்த வேண்டியிருக்கும்.
22நம் சகோதரர்களின் படுகொலை, நாட்டின் சிறைப்பட்ட நிலை, நமது உரிமைச் சொத்தின் பாழ்நிலை ஆகியவற்றுக்கெல்லாம், நாம் அடிமைகளாய் இருக்கும் இடமெங்கும் வேற்றினத்தார் நடுவே நாம் பொறுப்பு ஏற்கச்செய்வார். நம்மை அடிமைப்படுத்தியோர் முன்னிலையில் ஏளனப் பேச்சுக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாவோம்.
23நம்முடைய அடிமை நிலை நமக்குச் சாதகமாய் அமையாது; நம் கடவுளாகிய ஆண்டவர் அதை நமக்கு இகழ்ச்சியாக மாற்றுவார்.
24உடன்பிறப்புகளே, இவ்வேளையில் நம் சகோதரர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்குவோம். ஏனென்றால், அவர்கள் உயிர் நம் கையில் உள்ளது. அவ்வாறே திருவிடமும் கோவிலும் பலிபீடமும் நம் பொறுப்பில் உள்ளன.
25எனினும் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்; ஏனெனில், நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல நம்மையும் சோதிக்கிறார்.
26அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்பதையும், ஈசாக்கை எவ்வாறு சோதித்தார் என்பதையும், யாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை வட மெசப்பொத்தாமியாவில்* மேய்ந்துக்கொண்டிருந்த போது அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.
27ஆண்டவர் இவ்வாறு அவர்களின் உள்ளங்களைச் சோதித்தறியும் பொருட்டு அவர்களை நெருப்பில் புடமிட்டதுபோல நம்மைப் புடமிடவில்லை; நம்மைப் பழிவாங்கவுமில்லை. ஆனால், தமக்கு நெருக்கமாய் உள்ளோரை எச்சரிக்கும்படி தண்டிக்கிறார்.”
28பின் ஊசியா யூதித்திடம் மறுமொழியாக, “நீ சொன்னதெல்லாம் உண்மையே. உன் சொற்களை மறுத்துப் பேசுவார் யாருமில்லை.
29உனது ஞானம் முதன் முறையாக இன்று வெளிப்படவில்லை; உன் இளமைமுதலே உன் அறிவுக்கூர்மையை மக்கள் யாவரும் அறிவர். நீ நல்ல உள்ளம் கொண்டவள்.
30ஆனால், மக்கள் கடுந்தாகங் கொள்ளவே, நாங்கள் முன்பு உறுதி கூறியவாறு செயலாற்றவும் அதை மீறாதவாறு ஆணையிடவும் எங்களைக் கட்டாயப்படுத்தினார்கள்.
31நீ இறைப்பற்றுள்ள பெண். ஆகையால், இப்போது நமக்காக இறைவனிடம் மன்றாடினால் ஆண்டவர் மழை பொழியச் செய்து, நம் நீர்த்தொட்டிகளை நிரப்புவார். நாம் இனியும் தாகத்தால் சோர்வு அடைய மாட்டோம்” என்றார்.
32அதற்கு யூதித்து அவர்களிடம், “நான் சொல்வதைக் கேளுங்கள். நான் செய்யப்போகும் செயல் நம் வழிமுறையினர் நடுவே தலைமுறை தலைமுறையாய் நினைவுகூரப்படும்.
33நீங்கள் இன்று இரவு நகர வாயில் அருகே வந்து நில்லுங்கள். அப்போது நான் என் பணிப்பெண்ணுடன் வெளியே செல்வேன். நீங்கள் நகரை நம் பகைவர்களிடம் கையளிக்கப்போவதாக உறுதியளித்த அந்த நாளுக்குள் ஆண்டவர் என் வழியாக இஸ்ரயேலை விடுவிப்பார்.
34நான் செய்யப்போவதுபற்றி நீங்கள் ஒன்றும் என்னிடம் கேட்காதீர்கள். நான் அதைச் செய்து முடிக்கும்வரை எதுவும் சொல்லமாட்டேன்” என்றார்.
35அதற்கு ஊசியாவும் ஆளுநர்களும் அவரிடம், “நலமே சென்றுவா; கடவுளாகிய ஆண்டவர் நம் பகைவர்களைப் பழிவாங்க உன்னை வழி நடத்தட்டும்” என்றார்கள்.
36பிறகு அவர்கள் அவரது கூடாரத்தை விட்டுத் தாங்கள் காவல்புரியவேண்டிய இடங்களுக்குத் திரும்பினார்கள்.

8:26 தொநூ 22:1-18; 25:21; 29:13-31:6.
8:26 ‘சிரியா நாட்டைச் சார்ந்த மெசப்பொத்தாமியாவில்’ என்பது கிரேக்க பாடம்.