யூதித்து ஒலோபெரினிடம் செல்லுதல்

1இஸ்ரயேலின் கடவுளை நோக்கி யூதித்து கூக்குரலிடுவதை நிறுத்தி, தம் மன்றாட்டை முடித்துக்கொண்டார்.
2தாம் விழுந்துகிடந்த இடத்திலிருந்து எழுந்தார்; தம் பணிப்பெண்ணை அழைத்தார்; தாம் ஓய்வுநாள்களிலும் திருநாள்களிலும் தங்கிவந்த வீட்டுக்கு இறங்கிச் சென்றார்.
3தாம் அணிந்திருந்த சாக்கு உடையை அகற்றினார்; கைம் பெண்ணுக்குரிய ஆடைகளை களைந்தார்; நீராடி, விலையுயர்ந்த நறுமண எண்ணெய் பூசி, வாரி முடித்துத் தலைமீது மணிமுடியை வைத்துக் கொண்டார்; தம் கனவர் மனாசே இருந்தபோது தாம் உடுத்தியிருந்த பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார்.
4தம்மைக் காணும் ஆண்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் காலில் மிதியடி அணிந்தார்; சிலம்பு, கைவளை, மோதிரம், காதணி போன்ற தம் அணிகலன்கள் அனைத்தையும் அணிந்து தம்மைப் பெரிதும் அழகுபடுத்திக் கொண்டார்.
5தம் பணிப்பெண்ணிடம் திராட்சை இரசம் நிறைந்த தோல்பையையும் எண்ணெய் அடங்கிய குப்பியையும் கொடுத்தார்; வறுத்த தானியம், உலர்ந்த பழங்கள், நல்ல அப்பங்கள் ஆகியவற்றை ஒரு பையிலிட்டு நிறைத்தார். அவை அனைத்தையும் சேர்த்துக் கட்டி, தூக்கிக் கொண்டு வருமாறு அவளிடம் கொடுத்தார்.
6அவர்கள் இருவரும் பெத்தூலியா நகர வாயிலை நோக்கிச் சென்றார்கள்; அங்கு ஊசியாவும் நகர மூப்பர்களான காபிரியும் கார்மியும் நின்று கொண்டிருக்கக் கண்டார்கள்.
7இவர்கள் யூதித்தின் முகத் தோற்றம் வேறுபட்டியிருப்பதையும், வழக்கத்திற்கு மாறாக ஆடை அணிந்திருப்பதையும் கண்டார்கள். அவரது அழகைக் கண்டு மிகவும் வியந்து,
8“எங்கள் மூதாதையரின் கடவுள் உன்மீது அருள் பொழிவாராக; இஸ்ரயேல் மக்களின் மாட்சியும் எருசலேமின் மேன்மையும் விளங்க, உன் திட்டங்களை நிறைவேற்றுவாராக” என்று வாழ்த்தினார்கள்.
9யூதித்து கடவுளைத் தொழுதபின் அவர்களிடம், “நகர வாயிலை எனக்குத் திறந்துவிடுமாறு கட்டளையிடுங்கள். நீங்கள் என்னிடம் கூறியவற்றை நிறைவேற்ற நான் வெளியே செல்வேன்” என்று வேண்டினார். அவர் கேட்டுக் கொண்டபடி அவருக்கு வாயிலைத் திறந்துவிடுமாறு மூப்பர்கள் இளைஞர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
10இளைஞர்களும் அவ்வாறே செய்தார்கள். யூதித்து வெளியே செல்ல, அவருடைய பணிப்பெண்ணும் அவரோடு சென்றாள். மலையிலிருந்து கீழே இறங்கிப் பள்ளத்தாக்கைக் கடக்கும் வரை நகர மாந்தர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின் அவரை அவர்களால் காண முடியவில்லை.
11பெண்கள் இருவரும் பள்ளத்தாக்கில் நேரே சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அசீரியர்களின் சுற்றுக்காவல் படை யூதித்தை எதிர் கொண்டது.
12அவர்கள் யூதித்தைப் பிடித்து, “நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்? எங்கிருந்து வருகிறாய்? எங்குச் செல்கிறாய்?” என வினவினார்கள். அதற்கு அவர், “நான் ஓர் எபிரேயப் பெண், ஆனால் எபிரேயர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறேன்; எனெனில், அவர்கள் உங்களுக்கு இரையாகப் போகிறார்கள்.
13நானோ உங்கள் படைத் தலைவர் ஒலோபெரினைப் பார்த்து அவரிடம் உண்மை நிலையை எடுத்துரைக்கச் சென்று கொண்டிருக்கிறேன். அவர் மலைப்பகுதி முழுவதையும் கைப்பற்றக்கூடிய வழியை அவருக்குக் காட்டுவேன். அவருடைய வீரர்களுள் யாரும் உயிரிழக்கமாட்டார்கள். அவர்களின் உடலுக்கோ உயிருக்கோ எவ்வகைத் தீங்கும் நேராது” என்றார்.
14வீரர்கள் அவருடைய சொற்களைக் கேட்டு, அவரை உற்றுநோக்க, அவருடைய முகம் எழில்மிக்கதாய் அவர்களுக்குத் தோன்றியது. அப்பொழுது அவர்கள்,
15“எங்கள் தலைவரைக் காண விரைவாகக் கீழே இறங்கி வந்ததால் நீ உயிர் பிழைத்தாய். நீ இப்போது அவரது கூடாரத்துக்குச் செல். எங்களுள் சிலர் உன்னை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படைப்பர்.
16நீ அவர்முன் நிற்கும்போது அஞ்சாதே. நீ எங்களிடம் சொன்னதையே அவரிடம் தெரிவி. அவர் உன்னை நல்ல முறையில் நடத்துவார்” என்றார்கள்.
17யூதித்தையும் அவருடைய பணிப்பெண்ணையும் ஒலோபெரினிடம் அழைத்துச்செல்லத் தங்களுள் நூறு வீரர்களைத் தெரிந்தெடுத்தார்கள். இவர்கள் பெண்கள் இருவரையும் ஒலோபெரினுடைய கூடாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
18யூதித்தின் வருகைப்பற்றிய செய்தி பாளையம் முழுவதும் பரவியதால், எங்கும் ஒரே பரபரப்பாய் இருந்தது. வீரர்கள் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் ஒலோபெரினின் கூடாரத்துக்கு வெளியே காத்திருந்தார். அவரைப் பற்றி அவனிடம் தெரிவித்தார்கள்.
19அவர்கள் அவரது அழகைக் கண்டு வியந்தார்கள். அவரை முன்னிட்டு இஸ்ரயேல் மக்களைப்பற்றியும் வியந்தார்கள். “இத்தகைய பெண்களைத் தங்களிடையே கொண்டிருக்கும் இந்த மக்களை யாரே இழிவாகக் கருதுவர்! இவர்களுள் ஓர் ஆணைக்கூட உயிரோடு விட்டுவைப்பது நல்லதன்று. அவர்களை விட்டுவைத்தால், உலகம் முழுவதையும் வஞ்சித்துவிட இவர்களால் முடியும்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

யூதித்து-ஒலோபெரின் சந்திப்பு

20பிறகு ஒலோபெரினின் காவலர்களும் பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து யூதித்தைக் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றார்கள்.
21அப்போது, பொன், மரகதம், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கருஞ்சிவப்புத் துணியாலான மேற்கவிகையின்கீழ்த் தன் படுக்கையில் ஒலோபெரின் ஓய்வு கொண்டிருந்தான்.
22அவன் யூதித்தைப்பற்றி அறிந்ததும், வெள்ளி விளக்குகள் முன்செல்லத் தன் கூடாரத்துக்குமுன் வந்து நின்றான்.
23அவன் முன்னும் அவனுடைய பணியாளர்கள் முன்னும் யூதித்து வந்தபோது, அவரது முக அழகைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். அவரோ ஒலோபெரின் முன்னிலையில் குப்புற விழந்து வணங்கினார். அவனுடைய பணியாளர்கள் அவரைத் தூக்கிவிட்டார்கள்.