பெத்தூலியாமீது முற்றுகை

1மறுநாள் ஒலோபெரின் தன் படை முழுவதற்கும், தன்னுடன் சேர்ந்து போரிட வந்திருந்த எல்லா வீரர்களுக்கும் கட்டளையிட்டு, பெத்தூலியாவை எதிர்த்துப் படையெடுத்துச் சென்று, மலைப்பாதைகளைக் கைப்பற்றவும், இஸ்ரயேலருக்கு எதிராய்ப் போர்தொடுக்கவும் கூறினான்.
2அன்றே படைவீரர் யாவரும் அணிவகுத்துச் சென்றனர்; அவர்களின் எண்ணிக்கை வருமாறு; காலாட் படையினர் ஓர் இலட்சத்து எழுபதாயிரம்; குதிரைப் படையினர் பன்னிரண்டாயிரம்; மற்றும் தேவையான பொருள்களைக் கால்நடையாய் எடுத்துச் சென்றோர் மாபெரும் தொகையினர்.
3அவர்கள் பெத்தூலியாவுக்கு அருகே பள்ளத்தாக்கில் நீருற்றையொட்டிப் பாசறை அமைத்தார்கள்; அகல அளவில் தோத்தானிலிருந்து பெல்பாயிம்வரையும், நீள அளவில் பெத்தூலியாவிலிருந்து எஸ்திரலோனுக்கு எதிரே இருந்த கியமோன்வரையும் பரவியிருந்தார்கள்.
4இஸ்ரயேலர், பெருந்திரளாய் வந்த பகைவர்களைக் கண்டு மிகவும் நடுங்கினர். “இவர்கள், நாடு முழுவதையும் இப்போது விழுங்கப்போகிறார்கள். உயர்ந்த மலைகளோ பள்ளத்தாக்குகளோ குன்றுகளோ அவர்களின் பளுவைத் தாங்கா” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
5எனினும் அவர்கள் ஒவ்வொருவரும் படைக்கலம் தாங்கியவராய், தங்கள் காவல்மாடங்களில் தீமூட்டி அன்று இரவு முழுவதும் காவல் புரிந்தார்கள்.
6இரண்டாம் நாள் ஒலோபெரின் தன் குதிரைப்படை முழுவதையும் பெத்தூலியாவில் இருந்த இஸ்ரயேலர் காணும்படி அணிவகுத்துச் செல்லுமாறு செய்தான்;
7இஸ்ரயேலருடைய நகருக்குச் செல்லும் வழிகளை மேற்பார்வையிட்டான்; நீரூற்றுகளைத் தேடிப்பார்த்துக் கைப்பற்றி, படைவீரர்களை அவற்றுக்குக் காவலாக நிறுத்தினான்; பிறகு தன் படையிடம் திரும்பினான்.
8ஏதோமிய மக்களுடைய ஆளுநர்கள் அனைவரும், மோவாபிய மக்களின் தலைவர்கள் அனைவரும், கடலோரப் பகுதிகளின் படைத்தலைவர்களும் அவனிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்;
9“எங்கள் தலைவரே, உமது படைக்குத் தோல்வி ஏற்படாமலிருக்க நாங்கள் சொல்வதைக் கேளும்.
10இந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஈட்டிகளையல்ல தாங்கள் வாழும் உயர்ந்த மலைகளையே நம்பியிருக்கிறார்கள்; ஏனென்றால், அவர்களுடைய மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்வது எளிதன்று.
11ஆகவே, தலைவரே, வழக்கமான அணிவகுப்பு முறையை மாற்றியமைத்துப் போர் புரிந்தால், உம் ஆள்களுள் ஒருவர்கூட அழியமாட்டார்.
12உமது கூடாரத்திலேயே நீர் தங்கியிரும்; உம்முடைய படைவீரர்கள் எல்லாரும் தங்களது இடத்திலேயே இருக்கட்டும். ஆனால், உம் பணியாளர்கள் மலையடிவாரத்திலிருந்து சுரக்கும் நீரூற்றைக் கைப்பற்றிக்கொள்ளட்டும்.
13ஏனெனில், பெத்தூலியாவில் வாழ்பவர்கள் யாவரும் இதிலிருந்துதான் தண்ணீர் எடுக்கின்றனர். இதனால் தாகமே அவர்களைக் கொன்றுவிடும். அவர்கள் தங்களது நகரைக் கையளித்து விடுவார்கள். இதற்கிடையில் நாங்களும் எங்கள் ஆள்களும் அருகில் உள்ள மலையுச்சிகளுக்கு ஏறிச்சென்று, அங்குப் பாசறை அமைத்து, ஒருவரும் நகரைவிட்டு வெளியேறாதவாறு பார்த்துக்கொள்வோம்.
14அவர்களும் அவர்களின் மனைவியரும் மக்களும் பசியால் நலிவுறுவார்கள்; வாளுக்கு இரையாகுமுன்பே தாங்கள் வாழும் நகரின் தெருக்களில் அவர்கள் மடிந்துகிடப்பார்கள்.
15அவர்கள் உம்மை அமைதியாய் ஏற்றுக்கொள்ளாமல் கிளர்ச்சி செய்ததற்குத் தண்டனையாக அவர்களுக்கு இவ்வாறு தீங்கிழைப்பீர்.”
16அவர்களுடைய கூற்று ஒலோபெரினுக்கும் அவனுடைய பணியாளர்கள் யாவருக்கும் ஏற்றதாய் இருந்தது. ஆகையால், அவர்கள் சொன்னபடியே செய்ய அவன் கட்டளையிட்டான்.
17எனவே, அம்மோனியப் படைவீரர்கள் அசீரியப் படைவீரர்கள் ஐயாயிரம் பேருடன் சேர்ந்து முன்னேறிச் சென்று, பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, இஸ்ரயேலருக்குத் தண்ணீர் கிடைக்காதவாறு அவர்களின் நீரூற்றுகளைக் கைப்பற்றினார்கள்.
18ஏசாவின் மக்களும் அம்மோனியரும் ஏறிச்சென்று மலை நாட்டில் தோத்தானுக்கு எதிரே பாசறை அமைத்தார்கள்; தங்களுள் சிலரைத் தென் கிழக்கில் எக்ரபேலுக்கு எதிரில் அனுப்பினார்கள். இது மொக்மூர் என்ற ஓடை ஓரத்தில் அமைந்திருந்த கூசு என்ற இடத்துக்கு அருகே இருந்தது. அசீரியரின் எஞ்சிய வீரர்கள் சமவெளியில் பாசறை அமைத்து நாடு முழுவதையும் நிரப்பினார்கள். அவர்களுடைய கூடாரங்களும் பொருள்களும் பெரியதொரு பாசறையாக அமைந்து நெடுந்தொலை பரவியிருந்தன.
19உள்ளம் தளர்ந்துபோன இஸ்ரயேலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர்; ஏனெனில், அவர்களைச் சூழ்ந்துகொண்ட பகைவர்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை.
20காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை அடங்கிய அசீரியரின் படைத்திரள் முழுவதும் முப்பத்துநான்கு நாள் இஸ்ரயேலரைச் சூழ்ந்து கொள்ள, பெத்தூலியாவில் வாழ்ந்தவர்கள் அனைவருடைய தண்ணீர்க் கலன்களும் வெறுமையாயின.
21நீர்த்தொட்டிகள் வறண்டுகொண்டிருந்தன. ஒரு நாளாவது தாகம் தீரக் குடிக்கப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை; அவர்களுக்குக் குடிநீர் அளவோடு தான் கொடுக்கப்பட்டது.
22அவர்களின் குழந்தைகள் சோர்வுற்றார்கள்; பெண்களும் இளைஞர்களும் தாகத்தால் மயக்கமடைந்து நகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள்; ஏனெனில், அவர்களிடம் வலுவே இல்லை.
23இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லாரும் ஊசியாவிடமும் நகரின் பெரியோர்களிடமும் கூட்டமாய்ச் சென்று உரத்த குரல் எழுப்பினார்கள்; மூப்பர்கள் அனைவர் முன்னும் பின்வருமாறு கூறினார்கள்:
24“நமக்கிடையே கடவுள் தீர்ப்பு வழங்கட்டும். அசீரியருடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளாததால், நமக்குப் பெரும் அநீதி இழைத்திருக்கிறீர்கள்.
25இப்போது நமக்கு உதவி செய்வார் யாரும் இல்லை. நாம் தாகத்தாலும் பேரழிவாலும் அவர்கள்முன் தலைகுனியும்படி கடவுள் நம்மை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
26உடனே அவர்களை அழையுங்கள்; நகர் முழுவதையும் சூறையாடும்படி ஒலோபெரினின் வீரர்களிடமும் அவனுடைய படைகளிடமும் கையளியுங்கள்.
27ஏனெனில், அவர்களால் சிறைப்பிடிக்கப்படுவது நமக்கு மேலானது. அதனால் நாம் அவர்களுக்கு அடிமைகளாவோம்; ஆனால் நமது உயிர் காப்பாற்றப்படும். மேலும் நம் கண்முன்னேயே நம் குழந்தைகள் சாவதையும், நம் மனைவி மக்கள் உயிர்விடுவதையும் காணமாட்டோம்.
28விண்ணையும் மண்ணையும், நம் கடவுளையும் நம் மூதாதையரின் ஆண்டவரையும் உங்களுக்கு எதிர்ச் சாட்சிகளாக அழைக்கிறோம்; அவர் நம் பாவங்களுக்கு ஏற்பவும், நம் மூதாதையரின் பாவங்களுக்கு ஏற்பவும் நம்மைத் தண்டிப்பவர். நாங்கள் சொன்னவாறு கடவுள் இன்று நிகழாமல் பார்த்துக்கொள்வாராக.”
29அப்பொழுது மக்கள் கூட்டத்திலிருந்து ஒருமித்த பெரும் புலம்பல் எழுந்தது. அவர்கள் எல்லாரும் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் மன்றாடினார்கள்.
30ஊசியா அவர்களை நோக்கி, “சகோதரர்களே, துணிவு கொள்ளுங்கள்; மேலும் ஐந்து நாளுக்குப் பொறுத்துக் கொள்வோம். அதற்குள் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு இரக்கங் காட்டுவார்; அவர் நம்மை முற்றிலும் புறக்கணித்துவிடமாட்டார்.
31ஐந்து நாள் கடந்த பின்னும் நமக்கு உதவி ஏதும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சொன்னவாறே செய்கிறேன்” என்று கூறினார்.
32பிறகு மக்கள் கலைந்து தாங்கள் காவல்புரிய வேண்டிய இடங்களுக்கு அவர் போகச் செய்தார். அவர்கள் நகரின் மதில்களுக்கும் கோட்டைகளுக்கும் சென்றார்கள்; பெண்களும் பிள்ளைகளும் அவரவர் தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்; நகரெங்கும் மக்கள் பெரிதும் சோர்வுற்றிருந்தார்கள்.