எருசலேமின் வீழ்ச்சி

1யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதத்தில், பாபிலோனிய மன்னன் நெபுகதனேசர் அவனுடைய எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்.
2செதேக்கியாவின் பதினொன்றாம் ஆண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது.
3நேர்கல் சரேட்சர், சம்கூர் நெபோ, சர்செக்கிம் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பாபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் உள்ளே புகுந்து, நடுவாயிலில் அமர்ந்தார்கள்.
4யூதாவின் அரசன் செதேக்கியாவும் போர் வீரர் அனைவரும் அவர்களைக் கண்டவுடன் அரச பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர்.
5ஆனால் கல்தேயப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் செதேக்கியாவைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் ரிப்லாவில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
6பாபிலோனிய மன்னன் ரிப்லாவில் செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண்முன்னே கொன்றான். மேலும் யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான்.
7அவன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான்.
8அரச மாளிகையையும் மக்களின் வீடுகளையும் கல்தேயர் தீக்கிரையாக்கினர்; எருசலேம் மதில்களையும் தகர்த்தெறிந்தனர்.
9மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான், நகரில் எஞ்சியிருந்த மக்களையும் தம்மிடம் சரணடைந்திருந்தவர்களையும் பாபிலோனுக்கு நாடுகடத்தினார்.
10ஆனால் யாதுமற்ற ஏழைகளை மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் யூதா நாட்டில் விட்டுவைத்ததோடு திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் அவர்களுக்கு வழங்கினார்.

எரேமியாவின் விடுதலை

11பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் எரேமியாவைக் குறித்து மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதானுக்குக் கொடுத்த கட்டளை:
12“இவரைக் கூட்டிக்கொண்டு போய் நன்கு கவனித்துக் கொள்; தீங்கு எதுவும் அவருக்குச் செய்யாதே; அவர் விருப்பப்படியே அவரை நடத்து.”
13மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான், அரசவையோர் தலைவன் நெபுசஸ்பான் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பாபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் ஆளனுப்பி,
14காவல் கூடத்தினின்று எரேமியாவைக் கூட்டி வந்தனர். வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்லும்படி சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவிடம் அவரை ஒப்படைத்தனர். எனவே அவர் மக்களிடையே வாழ்ந்துவந்தார்.

எபேதுமெலேக்கு

15எரேமியா காவல்கூடத்தில் இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது;
16நீ போய், எத்தியோப்பியரான எபேதுமெலேக்கிடம் சொல்; இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இந்நகருக்கு எதிராக நான் கூறியிருந்தவற்றை நிறைவேற்றுவேன்; நன்மையை அல்ல, தீமையையே வருவிப்பேன். அந்நாளில் இவை உன் கண் முன்பாகவே நிகழும்.
17ஆயினும், அந்நாளில் நான் உன்னை விடுவிப்பேன், என்கிறார் ஆண்டவர். நீ யாரைக் குறித்து அஞ்சுகிறாயோ அம்மனிதர்களிடம் நீ கையளிக்கப்பட மாட்டாய்.
18நான் உறுதியாக உன்னை உயிரோடு காப்பாற்றுவேன். நீ வாளால் மடிய மாட்டாய். உன் உயிரே உனது கொள்ளைப்பொருளாய் அமையும்; ஏனெனில், நீ என்னில் நம்பிக்கை வைத்துள்ளாய், என்கிறார் ஆண்டவர்.