கெதலியாவுடன் எரேமியா

1எருசலேமினின்றும் யூதாவினின்றும் விலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்டோராய்ப் பாபிலோனுக்குச் சென்று கொண்டிருந்த மக்களிடையே எரேமியாவும் விலங்கிடப்பட்டிருந்ததைக் கண்ட மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் அவரை இராமாவில் விடுதலை செய்தார். அதன்பின் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.
2மெய்க்காப்பாளரின் தலைவர், எரேமியாவைத் தம்மிடம் அழைத்து, “உம் கடவுளாகிய ஆண்டவர் இந்த இடத்தின்மீது இத்தீங்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
3அவர் சொன்னவாறே எல்லாம் நிகழவும் செய்துள்ளார். ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்துள்ளீர்கள். அவருடைய குரலுக்கு நீங்கள் செவிசாய்க்கவில்லை. ஆகவே தான் இத்துன்பம் உங்களுக்கு நேர்ந்துள்ளது.
4இதோ, நான் கைவிலங்கினின்று உம்மை இன்று விடுவிக்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உமக்கு விருப்பமானால் வாரும்; நான் உம்மை நன்கு கவனித்துக் கொள்வேன். என்னோடு வர உமக்கு விருப்பமில்லை எனில், நீர் இங்கேயே இருந்து கொள்ளும். நாடு முழுவதும் உம் கண்முன் உள்ளது; எங்குச் செல்வது நல்லது என்றும் வசதியானது என்றும் உமக்குப் படுகிறதோ அங்கே நீர் செல்லும்.
5நீர் இங்கேயே தங்க விரும்பினால், யூதாவின் நகர்களுக்கு ஆளுநராய்ப் பாபிலோனிய மன்னன் ஏற்படுத்தியிருக்கும் சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவிடம் போய், அவனோடு மக்களிடையே வாழும். இல்லையெனில் எங்குப் போக உனக்கு விருப்பமோ, அங்கேயே செல்லும்” என்று கூறினார். பின்னர் மெய்க்காப்பாளரின் தலைவர் உணவுப் பொருள்களும் அன்பளிப்பும் எரேமியாவுக்கு அளித்து, அவரை அனுப்பிவைத்தார்.
6எரேமியா மிஸ்பாவுக்குச் சென்று, நாட்டில் எஞ்சியிருந்த மக்களிடையே அகிக்காமின் மகன் கெதலியாவுடன் வாழ்ந்துவந்தார்.

யூதாவின் ஆளுநன் கெதலியா
(2 அர 25:22-24)

7அகிக்காம் மகன் கெதலியாவைப் பாபிலோனிய மன்னன் ஆளுநராக ஏற்படுத்தியிருக்கிறான் என்றும், பாபிலோனுக்கு நாடு கடத்தப்படாத ஏழைகளான ஆண், பெண், சிறுவர்களை அவரது பொறுப்பில் விட்டுள்ளான் என்றும் நாட்டில் ஆங்காங்கே இருந்த படைத்தலைவர்கள் எல்லாரும் அவர்களுடைய ஆள்களும் கேள்வியுற்றனர்.
8அவர்களுள் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், காரயாகின் புதல்வர் யோகனானும் யோனத்தானும், தன்குமேத்தின் மகன் செராயாவும், நெற்றோபாவைச் சார்ந்த ஏப்பாயின் புதல்வரும், மாக்காவின் மகன் யாசனியாவும், அவர்களுடைய ஆள்களும் மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சென்றார்கள்.
9அவர்களிடமும் அவர்களுடைய ஆள்களிடமும் சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியா ஆணையிட்டு, “கல்தேயருக்கு அடிபணிய நீங்கள் தயங்க வேண்டாம். இந்நாட்டில் தங்கி வாழுங்கள்; பாபிலோனிய மன்னனுக்குப் பணிந்திருங்கள்; அது உங்களுக்கு நலம் பயக்கும்.
10நானோ மிஸ்பாவில் தங்கியிருப்பேன்; நம்மிடம் வரவிருக்கும் கல்தேயர்முன் உங்கள் பிரதிநிதியாய் இருப்பேன்; நீங்கள் போய்த் திராட்சை இரசம், பழங்கள், எண்ணெய் முதலியவற்றைச் சேகரித்துப் பாத்திரங்களில் வையுங்கள். நீங்கள் கைப்பற்றியுள்ள நகர்களில் குடியிருங்கள்” என்று சொன்னார்.
11இதே போன்று மோவாபிலும் அம்மோனியரிடையிலும் ஏதோமிலும் மற்ற நகர்களிலும் வாழ்ந்து வந்த யூதா நாட்டினர் அனைவரும், பாபிலோனிய மன்னன் யூதாவில் சிலரை விட்டுவைத்துள்ளான் என்றும், சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவை அவர்களின் ஆளுநராக ஏற்படுத்தியுள்ளான் என்றும் அறிய வந்தார்கள்.
12அப்பொழுது யூதா நாட்டினர் அனைவரும் தாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த எல்லா இடங்களினின்றும் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிவந்து, மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சேர்ந்து கொண்டார்கள். அங்குத் திராட்சை இரசமும் பழங்களும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்.

கெதலியா கொலைசெய்யப்படல்
(2 அர 25:25-26)

13காரயாகின் மகன் யோகனானும் நாட்டில் ஆங்காங்கே இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சென்று,
14“அம்மோனியரின் மன்னனாகிய பகலீசு உம்மைக் கொல்லும் பொருட்டு நெத்தனியாவின் மகன் இஸ்மயேலை அனுப்பி வைத்துள்ளான் என்று உறுதியாய் உமக்குத் தெரியுமன்றோ!” என்று கூறினர். ஆனால் அகிக்காமின் மகன் கெதலியா அவர்களை நம்பவில்லை.
15பின்னர் காரயாகின் மகன் யோகனான் மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகச் சென்று, “நான் போய், நெத்தனியாவின் மகன் இஸ்மயேலைக் கொல்ல எனக்கு அனுமதி கொடும். அது யாருக்கும் தெரியவராது. உம்மை ஏன் அவன் கொலைசெய்யவேண்டும்? அதனால் உம் பொறுப்பில் கூடி வாழும் யூதா நாட்டினர் அனைவரும் சிதறிப் போவார்கள்; யூதாவின் எஞ்சினோரும் அழிவார்களே!” என்று சொன்னான்.
16அகிக்காமின் மகன் கெதலியாவோ காரயாகின் மகன் யோகனானை நோக்கி, “நீ இச்செயலைச் செய்யாதே. ஏனெனில் இஸ்மயேலைப் பற்றி நீ கூறுவது பொய்” என்றார்.

40:7-9 2 அர 25:22-24.