பாழ்ங்கிணற்றில் எரேமியா

1மாத்தானின் மகன் செபற்றியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூக்கால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர், மக்கள் எல்லாருக்கும் எரேமியா அறிவித்துக் கொண்டிருந்த கீழ்க்கண்ட சொற்களைக் கேட்டார்கள்:
2ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இந்நகரில் தங்கியிருப்பவன் வாள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவற்றால் மடிவான். கல்தேயர் பக்கம் தப்பிச் செல்பவனோ பிழைத்துக்கொள்வான். அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளாய் இருக்கும். அவன் உயிர் பிழைப்பான்.
3ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனது படையிடம் இந்நகர் கையளிக்கப்படுவது உறுதி. அவனும் அதைக் கைப்பற்றிக் கொள்வான்.
4பின்னர் தலைவர்கள் அரசனைப் பார்த்து, “இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை” என்றார்கள்.
5அதற்கு அரசன் செதேக்கியா, “நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே” என்றான்.
6எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல்கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.
7அரண்மனையில் இருந்த அரசவையோருள் ஒருவரான எபேது மெலேக்கு என்ற எத்தியோப்பியர் எரேமியா பாழ்ங்கிணற்றில் தள்ளப்பட்டதை அறியவந்தார். அப்பொழுது அரசன் பென்யமின் வாயிலில் அமர்ந்திருந்தான்.
8எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி,
9“என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது” என்று கூறினார்.
10அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபெது மெலேக்கை நோக்கி, “உன்னோடு மூன்று* பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு” என்று கட்டளையிட்டான்.
11எனவே எபேது மெலேக்கு ஆள்களைத் தம்மோடு அழைத்துக் கொண்டு அரச அரண்மனையின் கருவூலத்திற்குக் கீழே சென்றார். அங்கிருந்து பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் எடுத்து, கயிற்றில் கட்டி, கிணற்றில் கிடந்த எரேமியாவிடம் இறக்கினார்.
12எத்தியோப்பியரான எபேது மெலேக்கு எரேமியாவிடம், “இந்தப் பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் உம் அக்குள்களுக்கும் கயிற்றுக்கும் இடையே வைத்துக் கொள்ளும்” என்று வேண்டினார். எரேமியாவும் அவ்வாறே செய்தார்.
13பின்னர் அவர்கள் எரேமியாவைக் கயிற்றால் வெளியே தூக்கினார்கள். அதன்பின் எரேமியா காவல்கூடத்தில் தங்கி இருந்தார்.

செதேக்கியா எரேமியாவிடம் மீண்டும் ஆலோசனை கேட்டல்

14அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் ஆளனுப்பி, அவரை ஆண்டவர் இல்லத்தின் மூன்றாம் வாயிலுக்கு வரவழைத்தான். அரசன் எரேமியாவை நோக்கி, “நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். நீர் என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது” என்று சொன்னான்.
15எரேமியா செதேக்கியாவை நோக்கி, “நான் உள்ளதைச் சொன்னால் நீர் என்னைத் திண்ணமாய்க் கொன்றுபோடமாட்டீரா? நான் உமக்கு அறிவுரை கூறினாலும் நீர் கேட்கமாட்டீரே!” என்றார்.
16அதற்கு அரசன் செதேக்கியா “நமக்கு இந்த உயிர் கொடுத்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் உம்மைக் கொல்லமாட்டேன். உமது உயிரைப் பறிக்கத்தேடும் இம்மனிதர் கையிலும் உம்மை ஒப்புவிக்க மாட்டேன்” என்று எரேமியாவுக்கு மறைவாக ஆணையிட்டுக் கூறினான்.
17எரேமியா செதேக்கியாவிடம் கூறியது: “படைகளின் கடவுளும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீர் உடனே பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் சரணடைந்தால், உயிர் வாழ்வீர். இந்நகர் தீக்கிரையாகாது. நீரும் உம் வீட்டாரும் பிழைத்துக்கொள்வீர்கள்.
18பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் நீர் சரணடையாவிட்டால், இந்நகர் கல்தேயரிடம் கையளிக்கப்படும்; அவர்கள் அதைத் தீக்கிரையாக்குவார்கள். நீரோ அவர்களது கைக்குத் தப்பமாட்டீர்”.
19அப்பொழுது அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, “கல்தேயரிடம் ஏற்கெனவே சரணடைந்துள்ள யூதா நாட்டவர் மட்டில் எனக்கு அச்சமாய் உள்ளது. நான் அவர்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களது பழிப்புக்கு ஆளாவேன்” என்றான்.
20அதற்கு எரேமியா, “இல்லை, நீர் கையளிக்கப்படமாட்டீர்; நான் உமக்கு எடுத்துரைக்கும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடும். அது உமக்கு நலம் பயக்கும். நீரும் உயிர் பிழைப்பீர்.
21நீர் சரணடைய மறுப்பீராகில், இவ்வாறு நடக்குமென ஆண்டவர் எனக்குக் காட்டியுள்ளார்;
22யூதா அரசனின் அரண்மனையில் எஞ்சியிருக்கும் பெண்கள் எல்லாரும் பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் ‘நம்பிக்கைக்குரிய உம் நண்பர்கள் உம்மை வஞ்சித்து அடக்கி விட்டார்கள்; உம் கால்களைச் சேற்றில் அமிழச்செய்து உம்மைவிட்டு அகன்று போனார்கள்’ எனக் கூறுவார்கள்.
23உம் மனைவியர், மக்கள் அனைவரும் கல்தேயரிடம் கொண்டுபோகப்படுவார்கள்; நீரோ அவர்கள் கைக்குத் தப்பமாட்டீர். மாறாக, பாபிலோனிய மன்னனால் நீர் பிடிபடுவீர். இந்நகர் தீக்கிரையாகும்” என்றார்.
24அதற்குச் செதேக்கியா எரேமியாவிடம், “நாம் பேசிக் கொண்டது யாருக்கும் தெரியவேண்டாம். அப்படியானால் நீர் சாவுக்குள்ளாகமாட்டீர்.
25நான் உம்மோடு பேசினதாகத் தலைவர்கள் கேள்வியுற்று, உம்மிடம் வந்து, ‘நீர் அரசரிடம் என்ன கூறினீர்? அரசர் உம்மிடம் என்ன சொன்னார்? எங்களிடம் எதையும் மறைக்காதீர். நாங்கள் உம்மைக் கொல்ல மாட்டோம்’ என்று சொன்னால்,
26‘நான் மடிந்துபோகாதவாறு யோனத்தான் வீட்டிற்கு என்னை மீண்டும் அனுப்பிவைக்க வேண்டாம் என்று நான் அரசனை வேண்டிக்கொண்டேன்’ என்று நீர் அவர்களிடம் சொல்லி விடும்” என்றான்.
27பின்னர் தலைவர்கள் அனைவரும் எரேமியாவிடம் வந்து, அவரை வினவியபொழுது, அரசன் சொல்லியிருந்தபடியே அவர் பதில் உரைத்தார். எனவே அத்தோடு அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். பேசியதை யாரும் ஒட்டுக்கேட்கவில்லை.
28எருசலேம் கைப்பற்றப்பட்ட நாள்வரை எரேமியா காவல் கூடத்திலேயே இருந்தார்.

38:28 எசே 33:21.
38:10 * "முப்பது" என்பது எபிரேய பாடம்.