செதேக்கியா எரேமியாவிடம் ஆலோசனை கேட்டல்

1யோசியாவின் மகனும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்தவனுமான செதேக்கியா, யோயாக்கிமின் மகன் கோனியாவுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான்.
2அவனோ, அவனுடைய பணியாளரோ நாட்டு மக்களோ இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
3செலேமியாவின் மகன் எகுக்கலையும், மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவையும் அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் அனுப்பிவைத்து, ‘நம் கடவுளான ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்’ என்று அவரை வேண்டிக்கொண்டான்.
4அந்நாள்களில் மக்களிடையே எரேமியா தடையின்றி நடமாடிக் கொண்டிருந்தார். ஏனெனில், அவர் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.
5இதற்கிடையில் பார்வோனின் படை எகிப்தினின்று புறப்பட்டு வந்தது. எருசலேமை ஏற்கெனவே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இச்செய்தியைக் கேள்வியுற்றதும், எருசலேமைவிட்டுப் பின்வாங்கினர்.
6அப்பொழுது இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது;
7இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் அறிவுரையை நாடி உங்களை என்னிடம் அனுப்பிவைத்த யூதா அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியது; இதோ, உனக்குத் துணை புரிய வந்துள்ள பார்வோனின் படை தன் சொந்த நாடான எகிப்துக்கே திரும்பிப் போகும்.
8கல்தேயர் மீண்டும் வந்து இந்நகரைத் தாக்குவர்; அதனைக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவர்.
9ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கல்தேயர் நம்மை விட்டுத் திரும்பிப் போவது உறுதி என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் அவர்கள் திரும்பிப் போகவேமாட்டார்கள்.
10உங்களை எதிர்த்துப் போரிட்டு வரும் கல்தேயரின் படை முழுவதையும் நீங்கள் முறியடித்தாலும், அவர்களுள் தாக்குண்ட வீரர் மட்டுமே தம் கூடாரங்களில் எஞ்சியிருந்தாலும், அவர்களே கிளர்ந்தெழுந்து இந்நகரைத் தீக்கிரையாக்குவர்.

எரேமியா மீண்டும் சிறைப்படல்

11பார்வோன் படையெடுத்து வரவே, கல்தேயர் படை எருசலேமை விட்டுப் பின்வாங்கியது.
12அப்பொழுது எரேமியா, மக்கள் முன்னிலையில் பாகப் பிரிவினை செய்து கொள்ள, எருசலேமை விட்டுப் பென்யமின் நாட்டுக்குப் புறப்பட்டார்.
13அவர் பென்யமின் வாயிலை அடைந்தபொழுது அனனியாவின் பேரனும் செலேமியாவின் மகனுமான இரிய்யா என்னும் மெய்க்காப்பாளர் தலைவன் இறைவாக்கினர் எரேமியாவைத் தடுத்து, “நீ கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயல்கிறாய்” என்று கூறி, அவரைப் பிடித்தான்.
14அதற்கு எரேமியா, “அது பொய். நான் கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயலவில்லை” என்றார். அவர் சொன்னதை இரிய்யா கேட்கவில்லை. எனவே அவன் எரேமியாவைப் பிடித்து, தலைவர்களிடம் கொண்டு வந்து நிறுத்தினான்.
15தலைவர்கள் சினம் கொண்டு எரேமியாவை அடித்து, செயலர் யோனத்தானுடைய வீட்டில் அடைத்துவைத்தார்கள்; ஏனெனில் அவ்வீடு ஒரு சிறைக்கூடமாய் மாற்றப்பட்டிருந்தது.
16எரேமியா நிலவறைக் கூடத்திற்குள் சென்று அங்கே நெடுநாள் தங்கியிருந்தார்.
17அப்பொழுது அரசன் செதேக்கியா ஆளனுப்பி, எரேமியாவைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தான். தன் மாளிகையில் அவருடன் தனியாகப் பேசி, “ஆண்டவரிடமிருந்து வாக்கு ஏதேனும் உண்டா?” என்று வினவினான். அதற்கு எரேமியா, “ஆம், உண்டு. பாபிலோனிய மன்னனிடம் நீர் கையளிக்கப்படுவீர்” என்றார்.
18தொடர்ந்து எரேமியா அரசன் செதேக்கியாவிடம் கூறியது: “உமக்கோ உம் பணியாளருக்கோ இம்மக்களுக்கோ நான் செய்த தீங்குதான் என்ன? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்?
19“உங்கள்மீதோ இந்நாட்டின் மீதோ பாபிலோனிய மன்னன் படையெடுத்து வரமாட்டான் என்று அறிவித்த உங்கள் இறைவாக்கினர் இப்போது எங்கே?
20என் தலைவரே! என் அரசரே! தயவு செய்து எனக்குச் செவிகொடும்: என் விண்ணப்பத்தைக் கனிவாய் ஏற்றருளும். செயலர் யோனத்தானின் வீட்டுக்கு என்னை மீண்டும் அனுப்பி வைக்காதீர். அனுப்பினால் நான் அங்கேயே மடிந்து போவேன்.”
21பின்னர் அரசன் செதேக்கியா கட்டளையிடவே, எரேமியா காவல் கூடத்திற்கு மாற்றப்பட்டார். நகரின் அப்பம் அனைத்தும் தீரும்வரை அப்பக்காரர் தெருவினின்று ஓர் அப்பம் அவருக்கு நாள்தோறும் கொடுக்கப்பட்டுவந்தது. இவ்வாறு எரேமியா காவல்கூடத்தில் தங்கியிருந்தார்.

37:1 2 அர 24:17; 2 குறி 36:10.