1ஆண்டவருக்குப் புதியதொரு
பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு
செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.
2ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண்முன்னே
தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3இஸ்ரயேல் வீட்டாருக்கு
வாக்களிக்கப்பட்ட
தமது பேரன்பையும் உறுதிமொழியையும்
அவர் நினைவுகூர்ந்தார்.
உலகெங்குமுள அனைவரும்
நம் கடவுள் அருளிய
விடுதலையைக் கண்டனர்.
4உலகெங்கும் வாழ்வோரே!
அனைவரும் ஆண்டவரை
ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப்
புகழ்ந்தேத்துங்கள்.
5யாழினை மீட்டி
ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;
யாழினை மீட்டி இனிய குரலில்
அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6ஆண்டவராகிய அரசரின் முன்னே
எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி
ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.
7கடலும் அதில் நிறைந்தவையும்
உலகும் அதில் உறைபவையும்
முழங்கிடுக!
8ஆறுகளே! கைகொட்டுங்கள்;
மலைகளே! ஒன்றுகூடுங்கள்;
9ஆண்டவர் முன்னிலையில்
மகிழ்ந்து பாடுங்கள்;
ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்;
பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்;
மக்களினங்களை நேர்மையுடன்
ஆட்சி செய்வார்.