1ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
மக்களினத்தார் கலங்குவராக!
அவர் கெருபுகள்மீது
வீற்றிருக்கின்றார்;
மண்ணுலகம் நடுநடுங்குவதாக!
2சீயோனில் ஆண்டவர்
மேன்மையுடன் விளங்குகின்றார்;
எல்லா இனத்தார் முன்பும்
மாட்சியுடன் திகழ்கின்றார்.
3மேன்மையானதும்
அஞ்சுதற்கு உரியதுமான
அவரது பெயரை
அவர்கள் போற்றுவார்களாக!
அவரே தூயவர்.
4வல்லமைமிக்க அரசரே!
நீதியை நீர் விரும்புகின்றீர்;
நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்;
யாக்கோபினரிடையே
நீதியையும் நேர்மையையும்
நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்.
5நம் கடவுளாகிய ஆண்டவரைப்
பெருமைப்படுத்துங்கள்;
அவரது அரியணைமுன்
தாள் பணிந்து வணங்குங்கள்;
அவரே தூயவர்!
6மோசேயும் ஆரோனும்
அவர்தம் குருக்கள்;
அவரது பெயரால் மன்றாடுவோருள்
சாமுவேலும் ஒருவர்;
அவர்கள் ஆண்டவரை நோக்கி
மன்றாடினர்; அவரும்
அவர்களுக்குச் செவிசாய்த்தார்.
7மேகத் தூணிலிருந்து
அவர்களோடு பேசினார்;
அவர்கள் அவருடைய
ஒழுங்கு முறைகளையும்
அவர் அவர்களுக்குத் தந்த
நியமங்களையும் கடைப்பிடித்தார்கள்.
8எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்;
மன்னிக்கும் கடவுளாக
உம்மை வெளிப்படுத்தினீர்;
ஆயினும், அவர்களுடைய
தீச்செயல்களுக்காய்
நீர் அவர்களைத் தண்டித்தீர்.
9நம் கடவுளாகிய ஆண்டவரைப்
பெருமைப்படுத்துங்கள்;
அவரது திருமலையில்
அவரைத் தொழுங்கள்.
ஏனெனில், நம் கடவுளாகிய
ஆண்டவரே தூயவர்.