அனைத்து உலகின் தலைவர்

1ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;

பூவுலகம் மகிழ்வதாக!

திரளான தீவு நாடுகள்

களிகூர்வனவாக!

2மேகமும் காரிருளும்

அவரைச் சூழ்ந்துள்ளன;

நீதியும் நேர்மையும்

அவரது அரியணையின் அடித்தளம்.

3நெருப்பு அவர்முன் செல்கின்றது;

சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச்

சுட்டெரிக்கின்றது.

4அவர்தம் மின்னல்கள்

பூவுலகை ஒளிர்விக்கின்றன;

மண்ணுலகம் அதைக் கண்டு

நடுங்குகின்றது.

5ஆண்டவர் முன்னிலையில்,
அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,

மலைகள் மெழுகென உருகுகின்றன.

6வானங்கள் அவரது நீதியை

அறிவிக்கின்றன;

அனைத்து மக்களினங்களும்

அவரது மாட்சியைக் காண்கின்றன.

7உருவங்களை வழிபடுவோரும்

சிலைகள் பற்றிப்

பெருமையடித்துக் கொள்வோரும்

வெட்கத்துக்கு உள்ளாவர்;

அனைத்துத் தெய்வங்களே!

அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.

8ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை
சீயோன் கேட்டு மகிழ்கின்றது;

யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன.

9ஏனெனில், ஆண்டவரே!

உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்;

தெய்வங்கள் அனைத்திற்கும்

மேலானவர் நீரே!

10தீமையை வெறுப்போர்மீது

ஆண்டவர் அன்புகூர்கின்றார்.

அவர்தம் பற்றுமிகு அடியார்களின்

உயிரைப் பாதுகாக்கின்றார்;

பொல்லாரின் கையினின்று

அவர்களை விடுவிக்கின்றார்.

11நேர்மையாளருக்கென ஒளியும்

நேரிய உள்ளத்தோர்க்கென

மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.

12நேர்மையாளர்களே!

ஆண்டவரில் களிகூருங்கள்;

அவரது தூய்மையை நினைந்து

அவரைப் புகழுங்கள்.