திருக்கோவிலுக்காக ஏங்குதல்
(பாடகர் தலைவர்க்கு: ‛காத்து’ நகர்ப் பண்; கோராகியரின் புகழ்ப்பா)

1படைகளின் ஆண்டவரே!

உமது உறைவிடம் எத்துணை

அருமையானது!

2என் ஆன்மா ஆண்டவரின்

கோவில் முற்றங்களுக்காக

ஏங்கித் தவிக்கின்றது;

என் உள்ளமும் உடலும்

என்றுமுள இறைவனை

மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.

3படைகளின் ஆண்டவரே!

என் அரசரே! என் கடவுளே!

உமது பீடங்களில்

அடைக்கலான் குருவிக்கு

வீடு கிடைத்துள்ளது;

தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்

சிட்டுக் குருவிகளுக்குக்

கூடும் கிடைத்துள்ளது.

4உமது இல்லத்தில் தங்கியிருப்போர்

நற்பேறு பெற்றோர்;

அவர்கள் எந்நாளும் உம்மைப்

புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். (சேலா)

5உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர்

பேறு பெற்றோர்;

அவர்களது உள்ளம்
சீயோனுக்குச் செல்லும்

நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.

6வறண்ட ‛பாக்கா’ பள்ளத்தாக்கை

அவர்கள் கடந்து செல்கையில்,

அது நீருற்றுகள் உள்ள இடமாக

மாறுகின்றது;

முதல் பருவமழை அதனை

நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.

7அவர்கள் நடந்து செல்கையில்

மேலும் மேலும்

வலிமை பெறுகின்றார்கள்;

பின்பு, சீயோனின் தெய்வங்களின்

இறைவனைக் காண்பார்கள்.

8படைகளின் ஆண்டவரே,

என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!

யாக்கோபின் கடவுளே,

எனக்குச் செவிசாய்த்தருளும்! (சேலா)

9எங்கள் கேடயமாகிய கடவுளே,

கண்ணோக்கும்!

நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக்

கனிவுடன் பாரும்!

10வேற்றிடங்களில் வாழும்

ஆயிரம் நாள்களினும்

உம் கோவில் முற்றங்களில் தங்கும்

ஒருநாளே மேலானது;

பொல்லாரின் கூடாரங்களில்

குடியிருப்பதினும்,

என் கடவுளது இல்லத்தின்

வாயிற்காவலனாய் இருப்பதே

இனிமையானது.

11ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர்

நமக்குத் கதிரவனும்

கேடயமுமாய் இருக்கின்றார்;

ஆண்டவர் அருளையும்

மேன்மையையும் அளிப்பார்;

மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு

நன்மையானவற்றை வழங்குவார்.

12படைகளின் ஆண்டவரே!

உம்மை நம்பும் மானிடர்

நற்பேறு பெற்றோர்!