நாட்டின் நலனுக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)

1ஆண்டவரே! உமது நாட்டின்மீது

அருள் கூர்ந்தீர்;

யாக்கோபினரை முன்னைய

நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.

2உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்;

அவர்களின் பாவங்கள் அனைத்தையும்

மறைத்துவிட்டீர். (சேலா)

3உம் சினம் முழுவதையும்

அடக்கிக் கொண்டீர்;

கடும் சீற்றம் கொள்வதை

விலக்கிக் கொண்டீர்.

4எம் மீட்பராம் கடவுளே!

எங்களை முன்னைய

நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;

எங்கள்மீது உமக்குள்ள சினத்தை

அகற்றிக்கொள்ளும்.

5என்றென்றுமா எங்கள்மேல் நீர்

சினம் கொள்வீர்?

தலைமுறைதோறுமா

உமது கோபம் நீடிக்கும்?

6உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு,

எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?

7ஆண்டவரே, உமது பேரன்பை

எங்களுக்குக் காட்டியருளும்;

உமது மீட்பையும்

எங்களுக்குத் தந்தருளும்.

8ஆண்டவராம் இறைவன்

உரைப்பதைக் கேட்பேன்;

தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு

நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;

அவர்களோ மடமைக்குத்

திரும்பிச் செல்லலாகாது.

9அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு

அவரது மீட்பு அண்மையில் உள்ளது

என்பது உறுதி; நம் நாட்டில்

அவரது மாட்சி குடிகொள்ளும்.

10பேரன்பும் உண்மையும்

ஒன்றையொன்று சந்திக்கும்;

நீதியும் நிறைவாழ்வும்

ஒன்றையொன்று முத்தமிடும்.

11மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;

விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.

12நல்லதையே ஆண்டவர் அருள்வார்;

நல்விளைவை நம்நாடு நல்கும்.

13நீதி அவர்முன் செல்லும்;

அவர்தம் அடிச்சுவடுகளுக்கு

வழி வகுக்கும்.