1கடவுளே! மௌனமாய் இராதேயும்;
பேசாமல் இராதேயும்;
இறைவனே! அமைதியாய் இராதேயும்.
2ஏனெனில், உம் எதிரிகள்
அமளி செய்கின்றார்கள்;
உம்மை வெறுப்போர்
தலைதூக்குகின்றார்கள்.
3உம் மக்களுக்கு எதிராக
வஞ்சகமாய்ச் சதி செய்கின்றார்கள்;
உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச்
சூழ்ச்சி செய்கின்றார்கள்.
4அவர்கள் கூறுகின்றார்கள்;
‛ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு
ஒழித்திடுவோம்;
இஸ்ரயேலின் பெயரை
எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.’
5அவர்கள் ஒருமனப்பட்டுச்
சதி செய்கின்றார்கள்;
உமக்கு எதிராக
உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
6ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர்,
மோவாபியர், அக்ரியர்,
7கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர்,
பெலிஸ்தியர் மற்றும்
தீர்வாழ் மக்களே அவர்கள்.
8அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு,
லோத்தின் மைந்தருக்கு
வலக்கையாய் இருந்தனர். (சேலா)
9மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே
சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல,
அவர்களுக்கும் செய்தருளும்.
10அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்;
அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள்.
11ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்ததுபோல்
அவர்களின் உயர்குடி மக்களுக்கும்
செய்தருளும்!
செபாருக்கும் சல்முன்னாவுக்கும்
செய்ததுபோல் அவர்களின்
தலைவர்களுக்கும் செய்தருளும்.
12ஏனெனில், ‛கடவுளின் மேய்ச்சல் நிலத்தை
நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்’
என்று அவர்கள் கூறினார்கள்.
13என் கடவுளே! சூறாவளியில் புழுதியென,
காற்றில் பதரென
அவர்களை ஆக்கியருளும்.
14நெருப்பு காட்டை எரிப்பது போலவும்,
தீக்கனல் மலைகளைச்
சுட்டெரிப்பது போலவும்
அவர்களுக்குச் செய்தருளும்.
15உமது புயலால்
அவர்களைத் துரத்திவிடும்!
உமது சூறாவளியால்
அவர்களைத் திகிலடையச் செய்யும்.
16ஆண்டவரே, மானக்கேட்டினால்
அவர்கள் முகத்தை மூடும்;
அப்பொழுதுதான் அவர்கள்
உமது பெயரை நாடுவார்கள்.
17அவர்கள் என்றென்றும்
வெட்கிக் கலங்குவார்களாக!
நாணமுற்று அழிந்து போவார்களாக!
18‛ஆண்டவர்’ என்னும்
பெயர் தாங்கும் உம்மை,
உலகனைத்திலும் உன்னதரான உம்மை,
அவர்கள் அறிந்து கொள்வார்களாக!