அனைத்து உலகின் அரசர்
(ஆசாபின் புகழ்ப்பா)

1தெய்வீக சபையில் கடவுள்

எழுந்தருளியிருக்கின்றார்;

தெய்வங்களிடையே அவர்

நீதித்தீர்ப்பு வழங்குகின்றார்.

2‛எவ்வளவு காலம் நீங்கள்

நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்?

எவ்வளவு காலம் பொல்லாருக்குச்

சலுகை காட்டுவீர்கள்? (சேலா)

3எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும்

நீதி வழங்குங்கள்;

சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும்

நியாயம் வழங்குங்கள்!

4எளியோரையும் வறியோரையும்

விடுவியுங்கள்!

பொல்லாரின் பிடியினின்று

அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!

5உங்களுக்கு அறிவுமில்லை;

உணர்வுமில்லை;

நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்;

பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே

அசைந்துவிட்டன.

6‛நீங்கள் தெய்வங்கள்;

நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.

7ஆயினும், நீங்களும்

மனிதர்போன்று மடிவீர்கள்;

தலைவர்களுள் ஒருவர் போல

வீழ்வீர்கள்’ என்றேன்.

8கடவுளே, உலகில் எழுந்தருளும்,

அதில் நீதியை நிலைநாட்டும்;

ஏனெனில், எல்லா நாட்டினரும்

உமக்கே சொந்தம்.


82:6 யோவா 10:34.