1ஆண்டவரே, உமது வல்லமையில்
அரசர் பூரிப்படைகின்றார்;
நீர் அளித்த வெற்றியில்
எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
2அவர் உள்ளம் விரும்பியதை
நீர் அவருக்குத் தந்தருளினீர்;
அவர் வாய்விட்டுக் கேட்டதை
நீர் மறுக்கவில்லை. (சேலா)
3உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி
நீர் அவரை எதிர்கொண்டீர்;
அவர் தலையில்
பசும்பொன்முடி சூட்டினீர்.
4அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்;
நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை
அவருக்கு அளித்தீர்.
5நீர் அவருக்கு வெற்றியளித்ததால்
அவரது மாட்சிமை பெரிதாயிற்று;
மேன்மையையும் மாண்பையும்
அவருக்கு அருளினீர்,
6உண்மையாகவே,
எந்நாளும் நிலைத்திருக்கும்
ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;
உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன்
கண்டு களிக்கச் செய்தீர்.
7ஏனெனில், அரசர் ஆண்டவரில்
நம்பிக்கை வைக்கின்றார்;
உன்னதரின் பேரன்பினால்
அவர் அசைவுறாதிருப்பார்.
8உமது கை உம் எதிரிகளையெல்லாம்
தேடிப்பிடிக்கும்; உமது வலக்கை
உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.
9நீர் காட்சியளிக்கும்பொழுது,
அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்;
ஆண்டவர் சினங்கொண்டு
அவர்களை அழிப்பார்;
நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.
10அவர்கள் தலைமுறையைப்
பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்;
அவர்கள் வழிமரபை
மனு மக்களிடமிருந்து எடுத்து விடுவீர்.
11உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,
சதித்திட்டம் தீட்டினாலும்,
அவர்களால் வெற்றி பெற இயலாது.
12நீரோ அம்புகளை நாணேற்றி
அவர்களது முகத்தில் எய்வீர்;
அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.
13ஆண்டவரே, உமது வலிமையோடு
எழுந்து வாரும்;
நாங்கள் உமது வல்லமையைப்
புகழ்ந்து பாடுவோம்.