அரசரின் வெற்றிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1நெருக்கடி வேளையில்

உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக!

யாக்கோபின் கடவுளது பெயர்

உம்மைப் பாதுகாப்பதாக!

2தூயகத்திலிருந்து அவர் உமக்கு

உதவி அனுப்புவாராக!

சீயோனிலிருந்து அவர் உமக்குத்

துணை செய்வாராக!

3உம் உணவுப் படையலை எல்லாம்

அவர் நினைவில் கொள்வாராக!

உமது எரி பலியை

ஏற்றுக்கொள்வாராக! (சேலா)

4உமது மனம் விரும்புவதை

அவர் உமக்குத் தந்தருள்வாராக!

உம் திட்டங்களை எல்லாம்

நிறைவேற்றுவாராக!

5உமது வெற்றியைக் குறித்து

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக!

நம் கடவுளின் பெயரால்

வெற்றிக்கொடி நாட்டுவோமாக!

உம் விண்ணப்பங்களையெல்லாம்

ஆண்டவர் நிறைவேற்றுவாராக!

6ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு

வெற்றி தருகின்றார்.

தமது தூய வானத்திலிருந்து

அவருக்குப் பதிலளிக்கின்றார்.

வெற்றியளிக்கும் தமது வலக்கையின்

ஆற்றலைக் காட்டுகின்றார் என்று

இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன்.

7சிலர் தேர்ப்படையிலும்,

சிலர் குதிரைப்படையிலும்

பெருமை கொள்கின்றனர்;

நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின்

பெயரில் பெருமை கொள்கின்றோம்.

8அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்;

நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.

9ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்;

நாங்கள் கூப்பிடும் வேளையில்

எங்களுக்குப் பதிலளியும்.