1ஆண்டவரே! என் மன்றாட்டைக்
கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு
உரியவராய் இருப்பதால்,
உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும்
மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.
2தண்டனைத் தீர்ப்புக்கு
உம் அடியானை இழுக்காதேயும்;
ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும்
உமது திருமுன் நீதிமான் இல்லை.
3எதிரி என்னைத் துரத்தினான்;
என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்;
என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல்
என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.
4எனவே, என்னுள்ளே என் மனம்
ஒடுங்கிப் போயிற்று;
என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.
5பண்டைய நாள்களை
நான் நினைத்துக் கொள்கின்றேன்;
உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச்
சிந்தனை செய்கின்றேன்;
உம் கைவினைகளைப் பற்றி
ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
6உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்துகின்றேன்;
வறண்ட நிலம்
நீருக்காகத் தவிப்பது போல்
என் உயிர் உமக்காகத்
தவிக்கின்றது. (சேலா)
7ஆண்டவரே! விரைவாக
எனக்குச் செவிசாய்த்தருளும்;
ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது;
என்னிடமிருந்து உம் முகத்தை
மறைத்துக் கொள்ளாதேயும்;
இல்லையெனில், படுகுழி செல்வோருள்
ஒருவராகிவிடுவேன்.
8உமது பேரன்பை நான்
வைகறையில் கண்டடையச் செய்யும்;
ஏனெனில், உம்மீது
நம்பிக்கை வைத்துள்ளேன்;
நான் நடக்க வேண்டிய அந்த வழியை
எனக்குக் காட்டியருளும்;
ஏனெனில், உம்மை நோக்கி
என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.
9ஆண்டவரே!
என் எதிரிகளிடமிருந்து
என்னை விடுவித்தருளும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.
10உம் திருவுளத்தை நிறைவேற்ற
எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில், நீரே என் கடவுள்;
உமது நலமிகு ஆவி என்னைச்
செம்மையான வழியில் நடத்துவதாக!
11ஆண்டவரே!
உமது பெயரின் பொருட்டு
என் உயிரைக் காத்தருளும்!
உமது நீதியின் பொருட்டு என்னை
நெருக்கடியினின்று விடுவித்தருளும்.
12உமது பேரன்பை முன்னிட்டு
என் பகைவரை அழித்துவிடும்;
என் பகைவர் அனைவரையும்
ஒழித்துவிடும்;
ஏனெனில், நான் உமக்கே அடிமை!