பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே! தீயோரிடமிருந்து

என்னை விடுவியும்;

வன்செயல் செய்வோரிடமிருந்து

என்னைப் பாதுகாத்தருளும்.

2அவர்கள் தம் மனத்தில்

தீயனவற்றை திட்டமிடுகின்றனர்;

நாள்தோறும் சச்சரவுகளைக்

கிளப்பி விடுகின்றனர்.

3அவர்கள் பாம்பெனத் தம் நாவைக்

கூர்மையாக்கிக்கொள்கின்றனர்;

அவர்களது உதட்டில் உள்ளது

விரியன் பாம்பின் நஞ்சே! (சேலா)

4ஆண்டவரே! தீயோரின் கையினின்று

என்னைக் காத்தருளும்;

கொடுமை செய்வோரிடமிருந்து

என்னைப் பாதுகாத்தருளும்;

அவர்கள் என் காலை

வாரிவிடப் பார்க்கின்றார்கள்.

5செருக்குற்றோர் எனக்கெனக்

கண்ணியை மறைவாக வைக்கின்றனர்;

தம் கயிறுகளால்

எனக்கு சுருக்கு வைக்கின்றனர்; (சேலா)

6நானோ ஆண்டவரை நோக்கி

இவ்வாறு வேண்டினேன்;

நீரே என் இறைவன்!

ஆண்டவரே! உம் இரக்கத்திற்காக

நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.

7என் தலைவராகிய ஆண்டவரே!

எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே!

போர் நடந்த நாளில் என் தலையை

மறைத்துக் காத்தீர்!

8ஆண்டவரே! தீயோரின் விருப்பங்களை

நிறைவேற்றாதேயும்; அவர்களின்

சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும்.

இல்லையெனில், அவர்கள் ஆணவம்

கொள்வார்கள். (சேலா)

9என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன்

நடக்கின்றார்கள்;

அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை

அவர்கள்மேலே விழுவதாக!

10நெருப்புத் தழல்

அவர்கள்மேல் விழுவதாக!

மீளவும் எழாதபடி படுகுழியில்

தள்ளப்படுவார்களாக!

11புறங்கூறும் நாவுடையோர் உலகில்

நிலைத்து வாழாதிருப்பராக!

வன்செயல் செய்வாரைத்

தீமை விரட்டி வேட்டையாடுவதாக!

12ஏழைகளின் நீதிக்காக

ஆண்டவர் வழக்காடுவார் எனவும்

எளியவர்களுக்கு நீதி வழங்குவார்

எனவும் அறிவேன்.

13மெய்யாகவே, நீதிமான்கள்

உமது பெயருக்கு

நன்றி செலுத்துவார்கள்;

நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.


140:3 உரோ 3:13.