நாடுகடத்தப்பட்டோரின் புலம்பல்

1பாபிலோனின் ஆறுகளருகே

அமர்ந்து, நாங்கள்

சீயோனை நினைத்து அழுதோம்.

2அங்கிருந்த அலரிச் செடிகள் மீது,

எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.

3ஏனெனில், அங்கு எங்களைச்

சிறையாக்கினோர்

எங்களைப் பாடும்படி கேட்டனர்;

எங்களைக் கடத்திச் சென்றோர்

எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு

கேட்டனர்.

‛சீயோனின் பாடல்களை

எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர்.

4ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை

அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?

5எருசலேமே! நான் உன்னை மறந்தால்

என் வலக்கை சூம்பிப்போவதாக!

6உன்னை நான் நினையாவிடில்,

எனது மகிழ்ச்சியின் மகுடமாக

நான் எருசலேமைக் கருதாவிடில்,

என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!

7ஆண்டவரே!

ஏதோமின் புதல்வருக்கு எதிராக,

எருசலேம் வீழ்ந்த நாளை

நினைத்துக் கொள்ளும்!

‘அதை இடியுங்கள்; அடியோடு

இடித்துக் தள்ளுங்கள்’ என்று

அவர்கள் எவ்வாறெல்லாம்

சொன்னார்கள்!

8பாழாக்கும் நகர் பாபிலோனே!

நீ எங்களுக்குச் செய்தவற்றை

உனக்கே திருப்பிச் செய்வோர்

பேறுபெற்றோர்!

9உன் குழந்தைகளைப் பிடித்து,

பாறையின்மேல் மோதி அடிப்போர்

பேறுபெற்றோர்!


137:8 திவெ 18:6.