என்றுமுள பேரன்பு வாழியவே!

1ஆண்டவருக்கு நன்றி

செலுத்துங்கள்;

ஏனெனில் அவர் நல்லவர்.

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

2தெய்வங்களின் இறைவனுக்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

3தலைவர்களின் தலைவருக்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

4தாம் ஒருவராய் மாபெரும்

அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

5வான்வெளியை

மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

6கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

7பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

8பகலை ஆள்வதற்கெனக்

கதிரவனை உருவாக்கியவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

9இரவை ஆள்வதற்கென

நிலாவையும் விண்மீன்களையும்

உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

10எகிப்தின் தலைப்பேறுகளைக்

கொன்றழித்தவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

11அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை

வெளிக்கொணர்ந்தவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

12தோளின் வலிமையாலும்

ஓங்கிய புயத்தாலும் அதைச்

செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

13செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

14அதன் நடுவே இஸ்ரயேலை

நடத்திச் சென்றவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

15பார்வோனையும் அவன் படைகளையும்

செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

16பாலை நிலத்தில் தம் மக்களை

வழிநடத்தியவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

17மாபெரும் மன்னர்களை வெட்டி

வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

18வலிமைமிகு மன்னர்களைக்

கொன்றழித்தவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

19எமோரியரின் மன்னன் சீகோனைக்

கொன்றழித்தவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

20பாசானின் மன்னன் ஓகைக்

கொன்றழித்தவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

21அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு

உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

22அதைத் தம் அடியார்களாகிய

இஸ்ரயேலர்க்கு

உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

23தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு

கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

24நம் எதிரிகளினின்று நம்மை

விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

25உடல்கொண்ட அனைத்திற்கும்

உணவூட்டுபவர்க்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.

26விண்ணுலகின் இறைவனுக்கு

நன்றி செலுத்துங்கள்;

என்றும் உள்ளது அவரது பேரன்பு.


136:1 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; எரே 33:11. 136:5 தொநூ 1:1. 136:6 தொநூ 1:2. 136:7-9 தொநூ 1:16. 136:10 விப 12:29. 136:11 விப 12:51. 136:13-15 விப 14:21-29. 136:19 எண் 21:21-30. 136:20 எண் 21:31-35.