புகழ்ச்சிப் பாடல்

1அல்லேலூயா!

ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்;

ஆண்டவரின் ஊழியரே!

அவரைப் புகழுங்கள்.

2ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே!

நம் கடவுளின்

கோவில் முற்றங்களில் உள்ளவர்களே!

3ஆண்டவரைப் புகழுங்கள்!

ஏனெனில், அவர் நல்லவர்;

அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்;

ஏனெனில், அவர் இனியவர்.

4ஆண்டவர் யாக்கோபைத்

தமக்கென்று தேர்ந்துகொண்டார்;

இஸ்ரயேலைத் தமக்குரிய

தனிச்சொத்தாகத் தெரிந்தெடுத்தார்.

5ஆண்டவர் மேன்மைமிக்கவர்

என்பதை அறிவேன்;

நம் ஆண்டவர் எல்லாத்

தெய்வங்களுக்கும் மேலானவர்

என்பதும் எனக்குத் தெரியும்.

6விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும்

எல்லா ஆழ்பகுதிகளிலும்,

ஆண்டவர் தமக்கு விருப்பமான

யாவற்றையும் செய்கின்றார்.

7அவர் பூவுலகின்

கடையெல்லைகளிலிருந்து

மேகங்களை எழச்செய்கின்றார்.

மழை பெய்யும்படி

மின்னலை உண்டாக்குகின்றார்;

காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து

வெளிவரச் செய்கின்றார்.

8அவர் எகிப்தின்

தலைப்பேறுகளைத் தாக்கினார்;

மனிதர், கால்நடைகளின்

தலைப்பேறுகளை அழித்தார்.

9எகிப்து நாடே! உன் நடுவில்

பார்வோனையும் அவனுடைய

எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு,

அடையாளங்களையும்

அருஞ்செயல்களையும்

அவர் நிகழச் செய்தார்.

10அவர் பல்வேறு இனத்தவரைத்

தாக்கினார்;

வலிமைவாய்ந்த மன்னர்களைக்

கொன்றார்.

11எமோரியரின் மன்னனாகிய சீகோனையும்

பாசானின் மன்னனாகிய ஓகையும்

கானானின் எல்லா அரசுகளையும்

அழித்தார்;

12அவர்கள் நாட்டைத்

தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு

உரிமைச்சொத்தாக,

சொந்த உடைமையாகக் கொடுத்தார்.

13ஆண்டவரே! உமது பெயர் என்றுமுள்ளது;

ஆண்டவரே! உம்மைப்பற்றிய நினைவு

தலைமுறை தலைமுறையாக

நீடித்திருக்கும்.

14ஆண்டவர் தம் மக்களை

நீதியுடன் தீர்ப்பிடுவார்;

தம் அடியாருக்கு இரக்கம் காட்டுவார்.

15வேற்றினத்தார் வழிபடும் சிலைகள்

வெறும் வெள்ளியும் பொன்னுமே;

அவை மனிதரின் கையால்

செய்யப்பட்டவையே!

16அவற்றுக்கு வாய்கள் உண்டு;

ஆனால் அவை பேசுவதில்லை;

கண்கள் உண்டு;

ஆனால் அவை காண்பதில்லை;

17காதுகள் உண்டு;

ஆனால் அவை கேட்பதில்லை;

மூக்குகள் உண்டு;

ஆனால் அவை மூச்சுவிடுவதில்லை.

18அவற்றைச் செய்து வைப்பவரும்

அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும்

அவற்றைப் போலவே இருப்பார்கள்.

19இஸ்ரயேல் குடும்பத்தாரே!

ஆண்டவரைப் போற்றுங்கள்!

ஆரோன் குடும்பத்தாரே!

ஆண்டவரைப் போற்றுங்கள்!

20லேவி குடும்பத்தாரே!

ஆண்டவரைப் போற்றுங்கள்!

அவருக்கு அஞ்சி நடப்போரே!

அவரைப் போற்றுங்கள்!

21எருசலேமைத் தம் உறைவிடமாகக்

கொண்டிருக்கும் ஆண்டவர்

போற்றப்படுவாராக;

சீயோனிலிருக்கும் ஆண்டவர்

போற்றப்படுவாராக. அல்லேலூயா!