1ஆண்டவரே, எத்தனை நாள்
என்னை மறந்திருப்பீர்?
இறுதிவரை மறந்துவிடுவீரோ?
இன்னும் எத்தனை நாள்
உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?
2எத்தனை நாள் வேதனையுற்று
எனக்குள் போராடுவேன்?
நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது;
எத்தனை நாள் என் எதிரி
எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?
3என் கடவுளாகிய ஆண்டவரே,
என்னைக் கண்ணோக்கி
எனக்குப் பதில் அளித்தருளும்;
என் விழிகளுக்கு ஒளியூட்டும்.
4அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில்
ஆழ்ந்து விடமாட்டேன்; என் எதிரி,
‛நான் அவனை வீழ்த்திவிட்டேன்’
என்று சொல்லமாட்டான்;
நான் வீழ்ச்சியுற்றேன் என்று
என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.
5நான் உமது பேரன்பில் நம்பிக்கை
வைத்திருக்கின்றேன்;
நீர் அளிக்கும் விடுதலையால்
என் இதயம் களிகூரும்.
6நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;
ஏனெனில், அவர் எனக்கு
நன்மை பல செய்துள்ளார்.