உதவிக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, காத்தருளும்;

ஏனெனில் உலகில்

இறையன்பர்கள் அற்றுப் போயினர்;

மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.

2ஒருவர் அடுத்திருப்பாரிடம்

பொய் பேசுகின்றனர்;

தேனொழுகும் இதழால்

இருமனத்தோடு பேசுகின்றனர்.

3தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும்

ஆண்டவரே, துண்டித்துவிடுவீராக!

பெருமையடித்துக் கொள்ளும் நாவை

அறுத்துவிடுவீராக!

4‛எங்கள் நாவன்மை எங்கள் வலிமை;

எங்கள் பேச்சுத்திறனே

எங்கள் பக்கத் துணை;

எங்களுக்குத் தலைவர் வேறு யார்?’

என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!

5‛எளியோரின் புலம்பலையும்

வறியோரின் பெருமூச்சையும் கேட்டு

இப்பொழுதே எழுந்து வருகின்றேன்;

அவர்கள் ஏங்குகின்றபடி

*அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்*’

என்கின்றார் ஆண்டவர்.

6ஆண்டவரின் வாக்குறுதிகள்

கலப்பற்ற வாக்குறுதிகள்;

மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட

வெள்ளி போன்றவை;

ஏழுமுறை புடமிடப்பட்டவை.

7ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்;

இத்தகைய தலைமுறையிடமிருந்து

எம்மை என்றும் காப்பாற்றும்.

8பொல்லார் எம்மருங்கும்

உலாவருகின்றனர்; மானிடரிடையே

பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.


12:5 *…* ‘அவன் அவர்கள் மீது சீறுகின்றான்’ என்பது எபிரேய பாடம்.