ஆண்டவரிடம் நம்பிக்கை
(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)

1நான் ஆண்டவரிடம் அடைக்கலம்

புகுந்துள்ளேன்;

நீங்கள் என்னிடம், ‛பறவையைப் போல

மலைக்குப் பறந்தோடிப் போ;

2ஏனெனில், இதோ பார்!

பொல்லார் வில்லை வளைக்கின்றனர்;

நாணில் அம்பு தொடுக்கின்றனர்;

நேரிய உள்ளத்தார்மீது

இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்;

3அடித்தளங்களே தகர்க்கப்படும்பொழுது,

நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?’

என்று சொல்வது எப்படி?

4ஆண்டவர் தம் தூய கோவிலில்

இருக்கின்றார்; அவரது அரியணை

விண்ணுலகில் இருக்கின்றது;

அவர் கண்கள் உற்று நோக்குகின்றன;

அவர் விழிகள்

மானிடரைச் சோதித்தறிகின்றன.

5ஆண்டவர் நேர்மையாளரையும்

பொல்லாரையும் சோதித்தறிகின்றார்;

வன்முறையில் நாட்டங்கொள்வோரை

அவர் வெறுக்கின்றார்.

6அவர் பொல்லார்மீது கரிநெருப்பும்

கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்;

பொசுக்கும் தீக்காற்றே

அவர்கள் குடிக்கும் பானமாகும்.

7ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர்

நேரிய செயல்களை விரும்புகின்றார்;

அவர்தம் திருமுகத்தை

நேர்மையாளர் காண்பர்.