நன்றிப் புகழ் மாலை

1ஆண்டவருக்கு நன்றி

செலுத்துங்கள்.

ஏனெனில் அவர் நல்லவர்;

என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2‛என்றென்றும் உள்ளது

அவரது பேரன்பு’ என

இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

3‛என்றென்றும் உள்ளது

அவரது பேரன்பு’ என

ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!

4‛என்றென்றும் உள்ளது

அவரது பேரன்பு’ என

ஆண்டவருக்கு அஞ்சுவோர்

அனைவரும் சாற்றுவார்களாக!

5நெருக்கடியான வேளையில் நான்

ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்;

ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து

என்னை விடுவித்தார்.

6ஆண்டவர் என் பக்கம் இருக்க

நான் ஏன் அஞ்ச வேண்டும்?

மனிதர் எனக்கு எதிராக

என்ன செய்ய முடியும்?

7எனக்குத் துணை செய்யும் ஆண்டவர்

என் பக்கம் உள்ளார்;

என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக்

கண்ணாரக் காண்பேன்.

8மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட,

ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

9உயர்குடியினர் மீது

நம்பிக்கை வைப்பதைவிட,

ஆண்டவரிடம்

அடைக்கலம் புகுவதே நலம்!

10வேற்றினத்தார் அனைவரும்

என்னைச் சூழ்ந்து கொண்டனர்;

ஆண்டவர் பெயரால்

அவர்களை அழித்துவிட்டேன்.

11எப்பக்கமும் அவர்கள் என்னைச்

சுற்றி வளைத்துக்கொண்டனர்;

ஆண்டவர் பெயரால்

அவர்களை அழித்துவிட்டேன்.

12தேனீக்களைப்போல் அவர்கள்

என்னைச் சூழ்ந்து கொண்டனர்;

நெருப்பிலிட்ட முட்களைப்போல்

அவர்கள் சாம்பலாயினர்;

ஆண்டவரின் பெயரால் அவர்களை

அழித்துவிட்டேன்.

13அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி

வீழ்த்த முயன்றனர்; ஆனால்,

ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.

14ஆண்டவரே என் ஆற்றல்;

என் பாடல்; என் மீட்பும் அவரே.

15நீதிமான்களின் கூடாரங்களில்

வெற்றியின் மகிழ்ச்சிக்குரல்

ஒலிக்கின்றது;

ஆண்டவரது வலக்கை

வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

16ஆண்டவரது வலக்கை

உயர்ந்தோங்கி உள்ளது;

ஆண்டவரது வலக்கை

வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

17நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;

ஆண்டவரின் செயல்களை

விரித்துரைப்பேன்;

18கண்டித்தார், ஆண்டவர்

என்னைக் கண்டித்தார்; ஆனால்

சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.

19நீதிமான்கள் செல்லும் வாயில்களை

எனக்குத் திறந்து விடுங்கள்;

அவற்றினுள் நுழைந்து நான்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.

20ஆண்டவரது வாயில் இதுவே!

இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.

21என் மன்றாட்டை நீர் கேட்டதால்,

எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,

உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

22கட்டுவோர் புறக்கணித்த கல்லே

கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!

நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

24ஆண்டவர் தோற்றுவித்த

வெற்றியின் நாள் இதுவே;

இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

25ஆண்டவரே! மீட்டருளும்!

ஆண்டவரே! வெற்றிதாரும்!

26ஆண்டவரின் பெயரால் வருபவர்

ஆசி பெற்றவர்!

ஆண்டவரது இல்லத்தினின்று

உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27ஆண்டவரே இறைவன்;

அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்;

கிளைகளைக் கையிலேந்தி

விழாவினைத் தொடங்குங்கள்;

பீடத்தின் கொம்புகள்வரை

பவனியாகச் செல்லுங்கள்.

28என் இறைவன் நீரே!

உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்;

என் கடவுளே!

உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.

29ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;

ஏனெனில், அவர் நல்லவர்;

என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.


118:1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 107:1; 136:1; எரே 33:11. 118:6 எபி 13:6. 118:14 விப 15:2; எசா 12:2. 118:22 லூக் 20:17; திப 4:11; 1 பேது 2:7. 118:22-23 மத் 21:42; மாற் 12:10-11. 118:25 மத் 21:9; மாற் 11:9; யோவா 12:13. 118:26 மத் 21:9; 23:39; மாற் 11:9; லூக் 18:35; 19:38; யோவா 12:13.