சாவினின்று தப்பியவர் பாடியது

1அல்லேலூயா! ஆண்டவர்மீது

அன்புகூர்கின்றேன்;

ஏனெனில், எனக்கு இரங்குமாறு

நான் எழுப்பிய குரலை

அவர் கேட்டருளினார்.

2அவரை நான் மன்றாடிய நாளில்,

எனக்கு அவர் செவிசாய்த்தார்.

3சாவின் கயிறுகள்

என்னைப் பிணித்துக் கொண்டன;

பாதாளத்தின் துன்பங்கள்

என்னைப் பற்றிக் கொண்டன;

துன்பமும் துயரமும்

என்னை ஆட்கொண்டன.

4நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்;

‛ஆண்டவரே! என் உயிரைக்

காத்தருளும்’ என்று கெஞ்சினேன்.

5ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்;

நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.

6எளிய மனத்தோரை

ஆண்டவர் பாதுகாக்கின்றார்;

நான் தாழ்த்தப்பட்டபோது

எனக்கு மீட்பளித்தார்.

7‛என் நெஞ்சே! நீ மீண்டும்

அமைதிகொள்; ஏனெனில்,

ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்’.

8என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;

என் கண் கலங்காதபடியும்

என் கால் இடறாதபடியும் செய்தார்.

9உயிர் வாழ்வோர் நாட்டில், நான்

ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

10‛மிகவும் துன்புறுகிறேன்!’ என்று

சொன்னபோதும்

நான் நம்பிக்கையோடு இருந்தேன்.

11‛எந்த மனிதரையும் நம்பலாகாது’ என்று

என் மனக்கலக்கத்தில்

நான் சொன்னேன்.

12ஆண்டவர் எனக்குச் செய்த

எல்லா நன்மைகளுக்காகவும்

நான் அவருக்கு

என்ன கைம்மாறு செய்வேன்?

13மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,

ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.

14இதோ! ஆண்டவருடைய மக்கள்

அனைவரின் முன்னிலையில்

அவருக்கு என் பொருத்தனைகளை

நிறைவேற்றுவேன்.

15ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு

அவரது பார்வையில்

மிக மதிப்புக்குரியது.

16ஆண்டவரே! நான் உண்மையாகவே

உம் ஊழியன்; நான் உம் பணியாள்;

உம் அடியாளின் மகன்;

என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

17நான் உமக்கு

நன்றிப் பலி செலுத்துவேன்;

ஆண்டவராகிய உம் பெயரைத்

தொழுவேன்;

18இப்பொழுதே உம் மக்கள்

அனைவரின் முன்னிலையில்

ஆண்டவரே! உமக்கு என்

பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;

19உமது இல்லத்தில் முற்றங்களில்,

எருசலேமின் நடுவில்,

ஆண்டவரே! உமக்கு என்

பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

அல்லேலூயா!