துன்புறுவோரின் மன்றாட்டு
(துன்புறும் ஒருவர் மனம் தளர்ந்து ஆண்டவரை நோக்கித் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் மன்றாட்டு)

1ஆண்டவரே! என் மன்றாட்டைக்

கேட்டருளும்!

என் அபயக்குரல்

உம்மிடம் வருவதாக!

2நான் இடுக்கண் உற்ற நாளிலே

உமது முகத்தை மறைக்காதீர்!

உமது செவியை

என் பக்கமாகத் திருப்பியருளும்!

நான் மன்றாடும் நாளில்

விரைவாய் எனக்குப் பதிலளியும்!

3என் வாழ்நாள்கள்

புகையென மறைகின்றன;

என் எலும்புகள்

தீச்சூழையென எரிகின்றன.

4என் இதயம் புல்லைப்போலத்

தீய்ந்து கருகுகின்றது;

என் உணவையும்

நான் உண்ண மறந்தேன்.

5என் பெருமூச்சின் பேரொலியால்,

என் எலும்புகள்

சதையோடு ஒட்டிக் கொண்டன.

6நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்;

பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.

7நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்;

கூரைமேல் தனிமையாய் இருக்கும்

பறவைபோல் ஆனேன்.

8என் எதிரிகள் நாள்முழுதும்

என்னை இழித்துரைக்கின்றனர்;

என்னை எள்ளி நகையாடுவோர்

என் பெயரைச் சொல்லிப்

பிறரைச் சபிக்கின்றனர்.

9சாம்பலை நான்

உணவாகக் கொள்கின்றேன்;

என் மதுக்கலவையோடு

கண்ணீரைக் கலக்கின்றேன்.

10ஏனெனில், உமது சினத்திற்கும்

சீற்றத்திற்கும் உள்ளானேன்;

நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர்.

11மாலை நிழலைப்போன்றது

எனது வாழ்நாள்;

புல்லென நான் உலர்ந்து போகின்றேன்.

12ஆண்டவரே! நீர் என்றென்றும்

கொலுவீற்றிருக்கின்றீர்;

உமது புகழ் தலைமுறைதோறும்

நிலைத்திருக்கும்.

13நீர் எழுந்தருளி,

சீயோனுக்கு இரக்கம் காட்டும்;

இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.

14அதன் கற்கள்மீது

உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்;

அதன் அழிவை நினைத்துப்

பரிதவிக்கின்றனர்.

15வேற்றினத்தார்

ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;

பூவுலகின் மன்னர் யாவரும்

அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.

16ஏனெனில் ஆண்டவர்

சீயோனைக் கட்டியெழுப்புவார்;

அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.

17திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு

அவர் செவிகொடுப்பார்;

அவர்களின் மன்றாட்டை அவமதியார்.

18இனி வரவிருக்கும் தலைமுறைக்கென

இது எழுதி வைக்கப்படட்டும்;

படைக்கப்படவிருக்கும் மக்கள்

ஆண்டவரைப் புகழட்டும்.

19ஆண்டவர் தம் மேலுலகத்

திருத்தலத்தினின்று

கீழே நோக்கினார்;

அவர் விண்ணுலகினின்று

வையகத்தைக் கண்ணோக்கினார்.

20அவர் சிறைப்பட்டோரின்

புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;

சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை

விடுவிப்பார்.

21சீயோனில் ஆண்டவரின் பெயர்

போற்றப்படும்.

எருசலேமில் அவர்தம் புகழ்

அறிவிக்கப்படும்.

22அப்போது, மக்களினங்களும்

அரசுகளும் ஒன்றுதிரண்டு

ஆண்டவரை வழிபடுவர்.

23என் வாழ்க்கைப் பாதையின் நடுவில்

ஆண்டவர் என் வலிமையைக்

குன்றச் செய்தார்; அவர்

என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.

24நான் உரைத்தது; “என் இறைவா!

என் வாழ்நாளின் இடையில்

என்னை எடுத்துக் கொள்ளாதேயும்;

உமது காலம் தலைமுறை

தலைமுறையாய் உள்ளதன்றோ?

25முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு

அடித்தளமிட்டீர்;

விண்ணுலகம் உமது

கைவினைப் பொருள் அன்றோ!

26அவையோ அழிந்துவிடும்;

நீரோ நிலைத்திருப்பீர்;

அவையெல்லாம் ஆடைபோல்

பழமையாகும்;

அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்;

அவையும் மறைந்துபோம்.

27நீரோ மாறாதவர்!

உமது காலமும் முடிவற்றது.

28உம் அடியாரின் பிள்ளைகள்

பாதுகாப்புடன் வாழ்வர்;

அவர்களின் வழிமரபினர்

உமது திருமுன் நிலைத்திருப்பர்!


102:25-27 எபி 1:10-12.