கடவுளின் அன்பு
(தாவீதுக்கு உரியது)

1என் உயிரே!

ஆண்டவரைப் போற்றிடு!

என் முழு உளமே!

அவரது திருப்பெயரை ஏத்திடு!

2என் உயிரே!

ஆண்டவரைப் போற்றிடு!

அவருடைய கனிவான செயல்கள்

அனைத்தையும் மறவாதே!

3அவர் உன் குற்றங்களையெல்லாம்

மன்னிக்கின்றார்;

உன் நோய்களையெல்லாம்

குணமாக்குகின்றார்.

4அவர் உன் உயிரைப்

படுகுழியினின்று மீட்கின்றார்;

அவர் உனக்குப்

பேரன்பையும் இரக்கத்தையும்

மணிமுடியாகச் சூட்டுகின்றார்.

5அவர் உன் வாழ்நாளை நலன்களால்

நிறைவுறச் செய்கின்றார்;

உன் இளமை கழுகின் இளமையெனப்

புதிதாய்ப் பொலிவுறும்.

6ஆண்டவரின் செயல்கள் நீதியானவை;

ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும்

அவர் உரிமைகளை வழங்குகின்றார்.

7அவர் தம் வழிகளை

மோசேக்கு வெளிப்படுத்தினார்;

அவர் தம் செயல்களை

இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்.

8ஆண்டவர் இரக்கமும் அருளும்

கொண்டவர்;

நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

9அவர் எப்பொழுதும்

கடிந்து கொள்பவரல்லர்;

என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.

10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப

நம்மை நடத்துவதில்லை;

நம் குற்றங்களுக்கு ஏற்ப

நம்மைத் தண்டிப்பதில்லை.

11அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்

காட்டும் பேரன்பு

மண்ணினின்று விண்ணளவு போன்று

உயர்ந்தது.

12மேற்கினின்று கிழக்கு

எத்துணைத் தொலைவிலுள்ளதோ,

அத்துணைத் தொலைவிற்கு

நம் குற்றங்களை நம்மிடமிருந்து

அவர் அகற்றுகின்றார்.

13தந்தை தம் பிள்ளைகள்மீது

இரக்கம் காட்டுவதுபோல்

ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது

இரங்குகிறார்.

14அவர் நமது உருவத்தை அறிவார்;

நாம் தூசி என்பது

அவர் நினைவிலுள்ளது.

15மனிதரின் வாழ்நாள்

புல்லைப் போன்றது;

வயல்வெளிப் பூவென

அவர்கள் மலர்கின்றார்கள்.

16அதன்மீது காற்றடித்ததும்

அது இல்லாமல் போகின்றது;

அது இருந்த இடமே

தெரியாமல் போகின்றது.

17ஆண்டவரது பேரன்போ

அவருக்கு அஞ்சுவோர்மீது

என்றென்றும் இருக்கும்;

அவரது நீதியோ

அவர்களின் பிள்ளைகளின்

பிள்ளைகள்மீதும் இருக்கும்.

18அவருடைய உடன்படிக்கையைக்

கடைப்பிடித்து

அவரது கட்டளையின்படி நடப்பதில்

கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.

19ஆண்டவர் தமது அரியணையை

விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்;

அவரது அரசு

அனைத்தின்மீதும் பரவியுள்ளது.

20அவர்தம் சொற்கேட்டு நடக்கும்

வலிமைமிக்கோரே!

ஆண்டவரின் தூதர்களே!

அவரைப் போற்றுங்கள்.

21ஆண்டவரின் படைகளே!

அவர் திருவுளப்படி நடக்கும்

அவர்தம் பணியாளரே!

அவரைப் போற்றுங்கள்.

22ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும்

அனைத்துப் படைப்புகளே!

ஆண்டவரைப் போற்றுங்கள்!

என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!


103:8 யாக் 5:11.