கடவுளின் ஆற்றலும் யோபின் மாசின்மையும்

1யோபு தமது உரையைத்

தொடர்ந்து கூறியது:

2என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை!

அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்;

எல்லாம் வல்லவர் எனக்கு

வாழ்வைக் கசப்பாக்கினார்.

3என் உடலில் உயிர் இருக்கும்வரை,

என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை,

4என் உதடுகள் வஞ்சகம் உரையா;

என் நாவும் பொய்யைப் புகலாது.

5நீங்கள் சொல்வது சரியென

ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

சாகும்வரையில்

என்வாய்மையைக் கைவிடவும் மாட்டேன்.

6என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்;

விடவே மாட்டேன்; என் வாழ்நாளில்

எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.

7என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்;

என் எதிரிகள்

நேர்மையற்றோராகக் கருதப்படட்டும்.

8கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து,

அவர்களின் உயிரைப் பறிக்கும்போது,

அவர்களுக்கு என்ன நம்பிக்கை?

9அவர்கள்மேல் கேடுவிழும்போது

இறைவன் அவர்களின் கூக்குரலைக் கேட்பாரா?

10எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை

அவர்கள் நாடுவார்களா?

கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா?

11இறைவனின் கைத்திறனை

நான் உங்களுக்குக் கற்பிப்பேன்;

எல்லாம் வல்லவரின் திட்டங்களை

மறைக்கமாட்டேன்.

12இதோ! நீங்கள் யாவருமே

இதைக் கண்டிருக்கின்றீர்கள்;

பின், ஏன் வறட்டு வாதம் பேசுகின்றீர்கள்?

13இதுவே கொடிய மனிதர்

இறைவனிடமிருந்து பெறும் பங்கு;

பொல்லாதவர்

எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து.

14அவர்களின் பிள்ளைகள் பெருகினும்

வாளால் மடிவர்; அவர்களின் வழிமரபினர்

உண்டு நிறைவடையார்.

15அவர்களின் எஞ்சியோர் நோயால் மடிவர்;

அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார்.

16மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்;

அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்.

17ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்;

மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர்.

18சிலந்தி கூடு கட்டுவதுபோலும்,

காவற்காரன் குடில் போடுவதுபோலும்

அவர்கள் வீடு கட்டுகின்றனர்.

19படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்;

ஆனால் இனி அவ்வாறு இராது;

கண் திறந்து பார்க்கின்றனர்;

செல்வம் காணாமற் போயிற்று.

20திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்;

சுழற்காற்று இரவில்

அவர்களைத் தூக்கிச் செல்லும்.

21கீழைக் காற்று

அவர்களை அடித்துச் செல்லும்;

அவர்களின் இடத்திலிருந்து

அவர்களைப் பெயர்த்துச் செல்லும்;

22ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்;

அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர்.

23அவர்களைப் பார்த்து

அது கைகொட்டி நகைக்கும்;

அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்.