1குறித்த காலத்தை எல்லாம் வல்லவர்

ஏன் வெளிப்படுத்தவில்லை?

அவரை அறிந்தோரும்

ஏன் அவர் தம் நாள்களைக் காணவில்லை?

2தீயோர் எல்லைக்கல்லை

எடுத்துப்போடுகின்றனர். மந்தையைக்

கொள்ளையிட்டு மேய்கின்றனர்.

3அனாதையின் கழுதையை

ஓட்டிச் செல்கின்றனர்.

விதவையின் எருதை

அடகாய்க் கொள்கின்றனர்.

4ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர்.

நாட்டின் வறியோர்

ஒன்றாக ஒளிந்து கொள்கின்றனர்.

5ஏழைகள் உணவுதேடும் வேலையாய்க்

காட்டுக் கழுதையெனப்

பாலைநிலத்தில் அலைகின்றனர்;

பாலைநிலத்தில் கிடைப்பதே

அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்.

6கயவரின் கழனியில் அவர்கள்

சேகரிக்கின்றனர்;

பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில்

அவர்கள் பொறுக்குகின்றனர்.

7ஆடையின்றி இரவில்

வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்;

வாடையில் போர்த்திக் கொள்ளப்

போர்வையின்றி இருக்கின்றனர்;

8மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்;

உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்;

9தந்தையிலாக் குழந்தையைத்

தாயினின்று பறிக்கின்றனர்;

ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.

10ஆடையின்றி வெற்றுடலாய் அலைகின்றனர்;

ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் தூக்குகின்றனர்.

11ஒலிவத் தோட்டத்தில்

எண்ணெய் ஆட்டுகின்றனர்;

திராட்சை பிழிந்தும்

தாகத்தோடு இருக்கின்றனர்.

12நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது;

காயமடைந்தோர் உள்ளம்

உதவிக்குக் கதறுகின்றது; கடவுளோ

அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.

13இன்னும் உள்ளனர் ஒளியை எதிர்ப்போர்;

இவர்கள் அதன் வழியை அறியார்;

இவர்கள் அதன் நெறியில் நில்லார்.

14எழுவான் கொலைஞன் புலரும் முன்பே;

ஏழை எளியோரைக் கொன்று குவிக்க;

இரவில் திரிவான் திருடன் போல.

15காமுகனின் கண்

கருக்கலுக்காய்க் காத்திருக்கும்;

கண்ணெதுவும் என்னைக் காணாது

என்றெண்ணி;

முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!

16இருட்டில் வீடுகளில் கன்னம் இடுவர்;

பகலில் இவர்கள் பதுங்கிக் கிடப்பர்;

ஒளியினை இவர்கள் அறியாதவரே!

17ஏனென்றால் இவர்களுக்கு நிழல்

காலைபோன்றது; சாவின் திகில்

இவர்களுக்குப் பழக்கமானதே!

18வெள்ளத்தில் விரைந்தோடும்

வைக்கோல் அவர்கள்;

பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது;

அவர்தம் திராட்சைத் தோட்டத்தை

எவரும் அணுகார்.

19வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்;

தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.

20தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்;

புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும்.

அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.

21ஏனெனில், மகவிலா மலடியை

இழிவாய் நடத்தினர்; கைம்பெண்ணுக்கு

நன்மையைக் கருதினாரில்லை.

22இருப்பினும், கடவுள் தம் வலிமையால்

வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்;

அவர்கள் தம் வாழ்வில்

நம்பிக்கையோடு இருந்தாலும்

நிலைக்கமாட்டார்கள்.

23அவர் அவர்களைப்

பாதுகாப்புடன் வாழவிடுகிறார்;

அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்;

இருப்பினும் அவரது கண்

அவர்கள் நடத்தைமேல் உள்ளது.

24அவர்கள் உயர்த்தப்பட்டனர்;

அது ஒரு நொடிப்பொழுதே;

அதன்பின் இல்லாமற் போயினர்;

எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்;

கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.

25இப்படி இல்லையெனில்,

என்னைப் பொய்யன் என்றோ,

என் மொழி தவறு என்றோ,

எண்பிப்பவன் எவன்?