1யோபு அதற்கு உரைத்த மறுமொழி:

2இன்றுகூட என் முறைப்பாடு

கசப்பாயுள்ளது;

நான் வேதனைக் குரல் எழுப்பியும்,

என் மேல் அவரது* கை பளுவாயுள்ளது.

3அவரை எங்கே கண்டுபிடிக்கலாமென

நான் அறிய யாராவது உதவுவாரானால்,

நான் அவர் இருக்கையை அணுகுவேன்.

4என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்;

என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.

5அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என

அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு

என்ன சொல்வார் என்பதையும்

நான் புரிந்து கொள்வேன்.

6மாபெரும் வல்லமையுடன்

அவர் என்னோடு வழக்காடுவாரா?

இல்லை; அவர் கண்டிப்பாக

எனக்குச் செவி கொடுப்பார்.

7அங்கே நேர்மையானவன்

அவரோடு வழக்காடலாம்;

நானும் என் நடுவரால்

முழுமையாக விடுவிக்கப்படுவேன்.

8கிழக்கே நான் சென்றாலும்

அவர் அங்கில்லை;

மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.

9இடப்புறம் தேடினும்

செயல்படுகிற அவரைக் காணேன்;

வலப்புறம் திரும்பினும்

நான் அவரைப் பார்த்தேனில்லை.

10ஆயினும் நான் போகும் வழியை

அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால்,

நான் பொன்போல் துலங்கிடுவேன்.

11அவர் அடிச்சுவடுகளை

என் கால்கள் பின்பற்றின;

அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை.

12அவர் நா உரைத்த ஆணையினின்று

நான் விலகவில்லை;

அவர்தம் வாய்மொழிகளை

அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.

13ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால்,

யாரால் மாற்ற முடியும்? ஏனெனில்,

எதை அவர் விரும்புகிறாரோ

அதை அவர் செய்கிறார்.

14ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை

அவர் நிறைவேற்றுவார்;

இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.

15ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்;

அவரைப்பற்றி நினைக்கையில்

திகிலடைகின்றேன்.

16இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்;

எல்லாம் வல்லவர் என்னைக்

கலங்கச் செய்தார்.

17ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது;

காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.


23:2 ‘எனது’ என்பது எபிரேய பாடம்.