அப்சலோம் கலகம் செய்தல்

1அதற்குப் பின்னர், அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரைகளையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான்.
2அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாயிலின் பாதை அருகே நிற்பான்; யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்புக் கேட்க வந்தால், அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, “நீ எந்நகரிலிருந்து வருகிறாய்?” என்று கேட்பான். அவன், “உம் அடியான் இந்த நகரிலிருந்து இஸ்ரயேலின் இந்தக் குலத்தினின்றும் வருகிறேன்” என்று பதில் சொல்லுவான்.
3அப்போது அப்சலோம், “உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால், அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை.
4நான் மட்டும் இந்நாட்டில் நீதிபதியாக இருந்தால், வழக்குள்ளவர்கள் அனைவரும் என்னிடம் வருவார்கள். நானும் அவர்களுக்கு நீதி வழங்குவேன்” என்பான்.
5யாரேனும் அவனை வணங்குவதற்காக நெருங்கினால், தன் கையை நீட்டி அவனைத் தழுவி முத்தமிடுவான்.
6அரசரிடம் வழக்கை முன்னிட்டு வந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் அப்சலோம் இவ்வாறு செய்து இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டான்.
7நான்கு* ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் அப்சலோம் அரசரிடம்,” நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும்.
8உமது அடியான், சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்தபோது, ‘ஆண்டவர் என்னை எருசலேமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன்’ என்று ஒரு நேர்ச்சை செய்தேன்” என்றான்.
9“நலமாய்ச் சென்று வா” என்று அரசர் அவனிடம் கூற, அவனும் புறப்பட்டு எபிரோனுக்குச் சென்றான்.
10பின் அப்சலோம் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்கும் இரகசியத் தூதர் மூலம் “நீங்கள் எக்காள முழக்கம் கேட்டவுடன் ‘அப்சலோம் எபிரோனில் அரசர் ஆகிவிட்டார்’ என்று முழங்குங்கள்” என்று சொல்லியனுப்பினான்.
11எருசலேமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர்; வஞ்சகமின்றி, இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமுடன் சென்றனர்.
12அப்சலோம் பலி செலுத்தியபோது, தாவீதின் ஆலோசகனான கீலோவியன் அகிதோபலை அவனது நகர் கீலோலிருந்து வருமாறு சொல்லியனுப்பினான். சதி வலுவடைந்தது; அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது.

தாவீது எருசலேமினின்று தப்பியோடல்

13அப்போது தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, “அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டார்” என்று கூறினான்.
14தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், “வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில், அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்” என்றார்.
15அதற்கு அரச அலுவலர், “எம் தலைவராம் அரசரின் ஏவல்களுக்காகவே உம் அடியார்கள் காத்திருக்கிறோம்” என்று அரசரிடம் கூறினர்.
16அரசரும் அவருடன் அவர் வீட்டார் அனைவரும் வெளியேறினர். ஆனால், வீட்டைக் காக்கும்படி தம் வைப்பாட்டியர் பத்துப் பேரை அரசர் விட்டுச் சென்றார்.
17அரசரும் அவர் மக்கள் அனைவரும் வெளியேறி சிறிது தூரம் சென்று ஓரிடத்தில் நின்றார்கள்.
18அவர்தம் அனைத்து அலுவலரும் அவர்முன் அணிவகுத்துச் சென்றனர். காத்திலிருந்து அவர்பின் வந்த அறுநூறு பேர் — கெரேத்தியர், பெலேத்தியர், கித்தியர் ஆகியோர் அனைவரும் — அரசருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனர்.
19அப்போது அரசர் கித்தியன் இத்தாயிடம், “நீ ஏன் எங்களோடு வருகிறாய்? திரும்பிச்சென்று அரசனோடு தங்கு. ஏனெனில், நீ ஓர் அந்நியன்; நாடு கடத்தப்பட்டவன்.
20நீ நேற்று வந்தவன்; இன்று நான் உன்னை எங்களோடு அலையச் செய்யலாமா? கால் போன போக்கிலே நான் போகின்றேன், திரும்பிச் செல். உன் சகோதரர்களையும் கூட்டிச் செல். உண்மையுள்ளவரின் பேரன்பு உன்னோடு இருப்பதாக” என்று கூறினார்.
21இத்தாய் அதற்கு மறுமொழியாக, “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவராம் அரசர்மேல் ஆணை! வாழ்வாகட்டும், சாவாகட்டும். என் தலைவராம் அரசர் எங்கிருப்பாரோ, அங்கே உம் அடியானும் இருப்பான்” என்று அரசரிடம் கூறினான்.
22தாவீது இத்தாயிடம், ‘சரி’ முன்னே செல்’ என்று சொல்ல, கித்தியனான இத்தாயும் அவனோடு அவன் ஆள்களும் சிறுவர் சிறுமியர் அனைவரும் முன்சென்றனர்.
23மக்கள் யாவரும் கடந்து சென்றதைக் கண்டு, நாடு முழுவதும் புலம்பிற்று. அரசர் கிதரோன் அருவியைக் கடந்தார். மக்கள் அனைவரும் பாலை நிலத்தை நோக்கிச் சென்றனர்.
24இதோ! சாதோக்கும் அவரோடு லேவியர் அனைவரும் கடவுளின் உடன்படிதக்கைப் பேழையைச் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் அனைவரும் நகரைக் கடக்கும்வரை கீழே வைத்திருந்தனர். அபியத்தார் அங்கே வந்தார்.
25அரசர் சாதோக்கை நோக்கி,“‘கடவுளின் பேழையை நகருக்குத் திருப்பி எடுத்துச் செல். ஆண்டவரின் பார்வையில் எனக்குக் கருணைகிடைத்தால், அவர் என்னைத் திருப்பிக் கொணர்ந்து அதனையும் அதன் உறைவிடத்தையும் நான் காணச் செய்வார்.
26‘உன் மீது எனக்கு விருப்பமில்லை’ என்று அவர் கூறினால், இதோ நான் இருக்கிறேன்! அவர் விருப்பப்படியே எனக்குச் செய்யட்டும்” என்று கூறினார்.
27மேலும், அரசர் குருவாகிய சாதோக்கை நோக்கி, “நீரும் திருக்காட்சியாளர்தாமே. நீரும் உம்மோடு இருக்கும் இரு புதல்வரும், உம் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும் நலத்துடன் நகருக்குத் திரும்புங்கள்.
28நான் பாலைநிலத்தின் எல்லைப் பகுதிகளில், உன்னிடமிருந்து எனக்குச் செய்தி வரும்வரை காத்திருப்பேன்” என்றார்.
29அவ்வாறே, சாதோக்கும் அபியத்தாரும் கடவுளின் பேழையோடு எருசலேம் திரும்பி, அங்கேயே தங்கிவிட்டார்கள்.
30தாவீது அழுதுகொண்டே ஒலிவமலை ஏறிச்சென்றார். தலையை மூடிக்கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடிருந்த மக்கள் அனைவரும் தம் தலையை மூடிக்கொண்டு அழுதுகொண்டே ஏறிச் சென்றனர்.
31அப்சலோமுடன் இருக்கும் சதிகாரருள் அகிதோபாலும் ஒருவன் என்று கூறப்பட்டபோது, தாவீது, “ஆண்டவரே! உம்மை வேண்டுகிறேன். அகிதோபல் மூடத்தனமான ஆலோசனையை அளிப்பானாக!” என்றார்.
32மக்கள் கடவுளைத் தொழுத மலையுச்சிக்குத் தாவீது வந்து சேர்ந்தார். அப்போது அர்க்கியனான ஊசாய் கிழிந்த ஆடையோடும் புழுதிபடிந்த தலையோடும் அவரைச் சந்தித்தான்.
33தாவீது அவனிடம், “நீ என்னோடு வந்தால் எனக்குச் சுமையாக இருப்பாய்.
34ஆனால், நீ நகருக்குத் திரும்பினால், அப்சலோமிடம், “அரசே, உம் அடியான் யான் முன்பு உம் தந்தைக்கு பணியாளாக இருந்ததுபோல இனி உமக்கும் பணியாளனாக இருப்பேன்” எனச் சொல்லி, எனக்காக அகிதோபலின் ஆலோசனையை முறியடிக்க முடியும்.
35அங்குக் குரு சாதோக்கும் அபியத்தாரும் உன்னோடு இருக்கின்றனர் அல்லவா? அரச மாளிகையிலிருந்து நீ கேட்கின்ற அனைத்தையும் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் எடுத்துச் சொல்.
36அவர்களோடு அவர்களின் இரு புதல்வர்களும், அதாவது சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் இருக்கின்றனர். நீ கேட்ட அனைத்தையும் அவர்கள் வழியாக எனக்குச் சொல்லியனுப்பு” என்று கூறினார்.
37தாவீதின் நண்பன் ஊசாய் நகருக்குள் சென்று கொண்டிருந்தபோது, அப்சலோம் எருசலேமுக்குள் நுழைந்தான்.

15:7 ‘நாற்பது’ என்பது எபிரேய பாடம்.