தாவீது-சீபா

1தாவீது மலை உச்சியைக் கடந்து சிறிது தொலை சென்றதும், மெபிபோசேத்தின் பணியாளன் சீபா அவரைச் சந்திக்க வந்தான். அவன் இருநூறு அப்பங்கள், நூறு உலர்ந்த திராட்சை அடைகள், நூறு அத்திப் பழ அடைகள், ஒரு தோற்பை திராட்சை இரசம் ஆகியவற்றைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு வந்தான்.
2“இதெல்லாம் என்ன?” என்று சீபாவை அரசர் கேட்க, “கழுதைகள் அரச வீட்டார் சவாரி செய்யவும், அப்பமும் அத்திப்பழமும் இளைஞர்கள் உண்ணவும், திராட்சை இரசம் பாலைநிலத்தில் களைப்புறுவோர் குடிக்கவும் தான்” என்று சீபா பதிலளித்தான்.
3“உன் தலைவர் சவுலின் பேரன் எங்கே?” என்றுமீண்டும் தாவீது வினவ, “அவர் எருசலேமிலேயே தங்கியிருக்கிறார். ஏனெனில், அவர் ‘இன்று இஸ்ரயேல் வீட்டார் என் பாட்டனாரின் அரசை எனக்குத் திருப்பித் தருவார்’ என எண்ணுகிறார்” என்று சீபா, அரசரிடம் கூறினான்.
4“இதோ! மெபிபோசேத்தின் உடைமையெல்லாம் உன்னுடையதே” என்று அரசர் சீபாவிடம் கூற, “நான் பணிவோடு வணங்குகிறேன்; என் தலைவராம் அரசே! உம் கண்முன் நான் கருணை பெறுவேனாக” என்று சீபா அரசருக்கு மறுமொழி கூறினான்.

தாவீது-சிமயி

5தாவீது பகூரிம் வந்தபோது, சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவரை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான்.
6அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும், எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள்மீதும் கல்லெறிந்தான்.
7சிமயி பழித்துக் கூறியது: “இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ!.
8நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் உன்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் உன் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்”.
9அப்போது செரூயாவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து, “இச்செத்த நாய் என் தலைவராம் அரசரைப் பழிப்பதா? இதோ நான் சென்று அவனது தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதி தாரும்” என்றான்.
10அதற்கு அரசர், “செரூயாவின் மக்களே! இதைப்பற்றி நீங்கள் கவலைக் கொள்ள வேண்டாம். அவன் பழிக்கட்டும்! ஒருவேளை ‘தாவீதைப் பழி!’ என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால், ‘இவ்வாறு நீ ஏன் செய்தாய்?’ என்று யார் சொல்ல முடியும்” என்றார்.
11மீண்டும் தாவீது அபிசாயிடமும் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: “இதோ! எனக்குப் பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில், ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார்.
12ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தைக் காண்பார். இன்று அவன் பழித்துப் பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார்”.
13தாவீது தன் ஆள்களோடு பயணத்தைத் தொடர்ந்தார். சிமயி அவருக்கு எதிராகப் பழித்துரைத்து, கல்லெறிந்து, புழுதியை வாரித் தூற்றிக்கொண்டு மலையோரமாகச் சென்றான்.
14அரசரும் அவரோடிருந்த மக்கள் அனைவரும் யோர்தானை வந்தடைந்தனர். அங்கே அவர் இளைப்பாறினார்.

எருசலேமில் அப்சலோம்

15இதற்கிடையில், அப்சலோமும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேம் வந்தடைந்தனர். அகிதோபலும் அவனோடு இருந்தான்.
16தாவீதின் நண்பனான அர்க்கியன் ஊசாய் அப்சலோமிடம் சென்று, “வாழ்க அரசர்! வாழ்க அரசர்!” என்று வாழ்த்தினான்.
17அப்சலோம் ஊசாயை நோக்கி, “உன் நண்பருக்கு நீ காட்டும் விசுவாசம் இதுதானா? நீ ஏன் உன் நண்பரோடு செல்லவில்லை?” என்று கேட்டான்.
18அதற்கு ஊசாய் அப்சலோமிடம் கூறியது: “இல்லை! ஆண்டவரும் இந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் யாரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களோ அவருக்காகவே நான் இருப்பேன்; அவரோடுதான் நான் தங்குவேன்.
19நான் யாருக்கு பணிபுரிய வேண்டும்? அவருடைய மகனுக்கு அல்லவா? உன் தந்தைக்கு நான் பணிபுரிந்தது போலவே நான் உனக்கும் பணிபுரிவேன்”.
20அப்சலோம் அகிதோபலிடம், “நான் என்ன செய்யலாம் என்பது பற்றி அறிவுரை கூறு” என்று கேட்டான்.
21அகிதோபல் அப்சலோமிடம், “உன் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச் சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உறவு கொள். நீ உன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாய் என்று இஸ்ரயேலர் அனைவரும் கேள்விப்படுவர். உன்னோடு இருப்பவர் அனைவரின் கை ஓங்கும்” என்றான்.
22அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. இஸ்ரயேலர் அனைவரும் அறிய, அப்சலோம் தன் தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.
23அந்நாள்களில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காகக் கருதப்பட்டது. இவ்வாறுதான், தாவீதும் அப்சலோமும் அகிதோபலின் அனைத்து ஆலோசனைகளையும் கருதினர்.

16:1 2 சாமு 9:9-10. 16:3 2 சாமு 19:26-27. 16:22 2 சாமு 12:11-12.