அப்சலோம் எருசலேமுக்கு அழைத்து வரப்படல்
1அரசரின் உள்ளம் அப்சலோமின் மீது அன்பு கொண்டிருந்ததை செரூயாவின் மகன் யோவாபு அறிந்திருந்தான்.
2தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கிருந்து கூர்ந்த அறிவுடைய ஒரு பெண்ணை யோவாபு தன்னிடம் கூட்டிவரச்சொல்லி, அவளிடம், “நீ துக்கம் கொண்டாடுபவளைப் போல் நடி; இழவு ஆடைகளை அணிந்து கொள்; நறுநெய் பூசிக்கொள்ளாதே; இறந்தவனுக்காகப் பல நாள்கள் இழவு கொண்டாடுகிறவளைப்போல் நீ இருக்க வேண்டும்.
3பின் அரசரிடம் சென்று அவரிடம் நீ இவ்வாறு பேச வேண்டும்” என்று கூறி, அவள் என்ன பேச வேண்டும் என்றும் யோவாபு சொல்லிக்கொடுத்தார்.
4தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசரிடம் சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கி, “அரசே காப்பாற்றும்” என்று கதறினாள்.
5“உனக்கு என்ன வேண்டும்?” என்று அரசர் அவளிடம் கேட்டார்.
6“நான் ஒரு கைம்பெண். என் கணவர் இறந்துவிட்டார். உம் அடியவளுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். இருவரும் திறந்த வெளியில் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லாததால் ஒருவன் மற்றவனைத் தாக்கிக் கொன்று விட்டான்.
7இதோ! உம் அடியவளுக்கு எதிராக என் குடும்பத்தார் அனைவரும் எழும்பி, ‘தன் சகோதரனைக் கொன்றவனைக் கொடுத்து விடு. அவன் சகோதரனின் உயிருக்காக நாங்கள் அவனைக் கொல்ல வேண்டும்’, என்று கூறுகின்றனர். இவ்வாறு, அவர்கள் எனக்கு இருக்கும் ஒரு வாரிசையும் அவர்கள் அழித்து எனக்கு எஞ்சியுள்ள ஒளியையும் அணைத்து, இவ்வுலகில் என் கணவனுக்குப் பெயரும் வழிமரபும் இல்லாமல் செய்து விடுவார்கள்” என்று அவள் சொன்னாள்.
8“நீ உன் வீட்டுக்குச் செல். உனக்காக நான் கட்டளை பிறப்பிப்பேன்” என்று அரசர் அப்பெண்ணிடம் கூறினார்.
9பின் தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசரிடம், “என் தலைவராம் அரசே! என் குற்றம் என்மீதும் என் தந்தையின் வீட்டின்மீதும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமற்று இருக்கட்டும்” என்று கூறினாள்.
10“உன்னிடம் யார் எதைச் சொன்னாலும் அவனை என்னிடம் கொண்டுவா, அவன் உன்னை இனித்தொடவே மாட்டான்” என்று அரசர் கூறினார்.
11“இரத்தப் பழி வாங்க விழைவோர் இனிக் கொல்லாமல் இருக்கவும் என் மகன் சாகாமல் இருக்கவும் அரசராகிய நீர் ஆண்டவராகிய கடவுளிடம் மன்றாடுவீர்” என்று அவள் சொன்னாள். “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உன் மகனின் ஒரு முடி கூடத் தரையில் விழாது” என்று அவர் பதிலளித்தார்.
12பிறகு அப்பெண், “உம் அடியவள் என் தலைவராம் அரசரிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி தாரும்” என்ற கேட்க, அவரும் “சொல்” என்று பதிலளித்தார்.
13அவள் சொன்னது: “கடவுளின் மக்களுக்கு எதிராக இத்தகைய எண்ணத்தை நீர் கொண்டிருப்பது ஏன்? தம்மால் துரத்தப்பட்டவனை அரசர் திரும்ப அழைக்காமல் இருப்பதனால் இந்தத் தீர்ப்பு அவரையே குற்றவாளி ஆக்குகிறது!
14நாம் இறப்பது உறுதி. தரையில் சிந்தப்பட்டு மீண்டும் சேகரிக்க முடியாத நீரைப் போன்றவர்கள் நாம். ஆனால், துரத்தப்பட்டவனைப் பொறுத்த மட்டில், அவன் தம்மிடமிருந்து விலகிவிடாதபடி கடவுள் திட்டமிடுகிறார்; அவன் உயிரை எடுக்க மாட்டார்.
15இதை என் தலைவராம் அரசரிடம் நான் கூறவந்தபோது, மக்கள் என்னை அச்சுறுத்தினர்; உமது அடியவளோ, ‘நான் அரசரிடம் போவேன். ஒருவேளை அரசர் தம் அடியவளின் வார்த்தைக்குச் செவிகொடுப்பார்.
16அரசர் செவி கொடுத்து, என்னையும் என் மகனையும் கடவுளின் உரிமைச்சொத்தினின்று அழிக்க வருபவனின் கையினின்று தம் அடியவளைக் காப்பாற்றுவார்’ என்று எண்ணினேன்.
17ஏனெனில், உம் அடியவள் எண்ணப்படி, என் தலைவராம் அரசரின் வார்த்தை எனக்கு அமைதி தரும்; கடவுளின் தூதரைப் போல் என் தலைவராம் அரசர் நன்மையும் தீமையும் புரிந்துகொள்வார். ஆண்டவராம் கடவுள் உம்மோடு இருப்பார்” என்று கூறினாள்.
18அதன்பின் தாவீது அப்பெண்ணிடம் மறுமொழியாக, “நான் உன்னிடம் கேட்பது எதற்கும் மறைக்காமல் பதில் சொல்!” என்றார். அதற்கு அவள், “தயைகூர்ந்து என் தலைவராம் அரசர் கேட்கட்டும்” என்றாள்.
19“இதிலெல்லாம் உன்னோடு யோவாபுக்குப் பங்கு உண்டு அல்லவா?” என்று அரசர் தாவீது கேட்டார். “என் தலைவராம் அரசே! உம் உயிர் மேல் ஆணை! என் தலைவராம் அரசரின் வார்த்தையிலிருந்து யாரும் வலமோ இடமோ திரும்ப முடியாது. உம் அடியான் யோவாபுதான் என்னைப் பணித்தவர். அவரே இச்சொற்கள் அனைத்தையும் உம் அடியவளுக்குச் சொல்லித் தந்தவர்.
20உம் அடியான் யோவாபு தற்போதைய நிலை மாற வேண்டுமென இதைச் செய்தார். ஆனால், கடவுளின் தூதருக்கு நிகரான பேரறிவுகொண்ட என் தலைவர் உலகில் நடக்கும் அனைத்தையும் அறிவார்” என்று அப்பெண் கூறினாள்.
21அப்போது அரசர் யோவாபை அழைத்து, “இதைச் செய்தவன் நீயே. போ! இளைஞன் அப்சலோமைக் கூட்டிவா” என்றார்.
22யோவாபு முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து, வணங்கி, அரசரை வாழ்த்தி, “என் தலைவராம் அரசே! உம் அடியானின் சொற்படி அரசர் செய்துவிட்டார். இதிலிருந்து நான் உன் கண்முன் கருணை பெற்றுவிட்டேன் என்று உம் அடியான் அறிவான்” என்று கூறினார்.
23யோவாபு எழுந்து கெசூருக்குச் சென்று அப்சலோமை எருசலேமுக்குச் கூட்டி வந்தார்.
24‘அவன் தன் வீட்டுக்கே திரும்பட்டும். என் முகத்தில் அவன் விழிக்கக்கூடாது” என்று அரசர் கூற, அப்சலோம் தன் வீட்டுக்குத் திரும்பினான். அரசரின் முகத்தில் அவன் விழிக்கவில்லை.
அப்சலோம் தாவீதுடன் ஒப்புரவாதல்
25இஸ்ரயேல் அனைத்திலும் அப்சலோமைப்போல் புகழ்பெற்ற அழகன் வேறு எவனும் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனில் எந்தக் குறையும் இல்லை.
26அவன் முடிவெட்டிக்கொள்ளும்போது — ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தலைக்குப் பாரமாயிருந்ததால், அவன் முடி வெட்டிக் கொள்வான் — அது அரச அளவையின் படி இரண்டு கிலோவுக்கு* மேலாக இருக்கும்.
27அப்சலோமுக்கு மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தன. தாமார் என்று பெயர்கொண்ட ஒரு மகளும் இருந்தாள். அவள் பேரழகியாக இருந்தாள்.
28அப்சலோம் எருசலேமில் ஈராண்டுகள் வாழ்ந்தான்; ஆனால், அரசன் முகத்தில் விழிக்கவில்லை.
29அப்சலோம் யோவாபை அரசரிடம் அனுப்புவதற்காக அவனைத் தன்னிடம் வரும்படி அழைத்தான். ஆனால், யோவாபு அவனிடம் செல்ல விரும்பவில்லை, இரண்டாம் முறை ஆளனுப்பியும் யோவாபு செல்ல விரும்பவில்லை,
30அப்போது அவன் தன் பணியாளரிடம், “கவனியுங்கள், யோவாபின் வயல் என் வயலுக்கு அருகே உள்ளது. அங்கே வாற்கோதுமை விளைந்துள்ளது. நீங்கள் சென்று அதற்குத் தீ வையுங்கள” என்றான். அப்சலோமின் பணியாளர் அவ்வயலுக்குத் தீ வைத்தனர்.
31பின் யோவாபு புறப்பட்டு அப்சலோம் வீட்டுக்குச் சென்று அவனிடம், “உன் பணியாளர் என் வயலுக்குத் தீ வைத்தது ஏன்?’ என்று கேட்டார்.
32அதற்கு அப்சலோம் யோவாபிடம் கூறியது: ‘நான் கெசூரிலிருந்து இங்கு வந்தது ஏன்? நான் அங்கேயே இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்’ என்று அரசரிடம் கேட்க விரும்புகிறேன். இதற்காக உம்மை அவரிடம் அனுப்ப, உமக்கு ஆளனுப்பினேன். நான் இப்போது அரசனின் முகத்தில் விழிக்க வழிசெய்யும். ஏனெனில், ஏதாவது குற்றம் இருப்பின் அவர் என்னைக் கொல்லட்டும்”.
33யோவாபு அரசரிடம் சென்று இதைத் தெரிவித்தார்; அவர் அப்சலோமை அழைத்து வரச் செய்தார். அவன் அரசரிடம் சென்று முகம் குப்புற அரசர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினான். அரசர் அப்சலோமை முத்தமிட்டார்.
14:17 2 சாமு 19:27.