அம்னோன்-தாமார்

1பின்னர் நிகழ்ந்தது: தாவீதின் மகன் அப்சலோமிற்குத் தாமார் என்ற சகோதரி இருந்தாள். அவள் பேரழகி. தாவீதின் இன்னொரு மகன் அம்னோன் அவள்மீது மோகம் கொண்டிருந்தான்.
2அம்னோன் தன் சகோதரி தாமாருக்காக மிகவும் ஏங்கி நோயுற்றான். அவள் கன்னியாக இருந்ததால், அவளிடம் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
3அம்னோனுக்கு யோனதாபு என்ற ஒரு நண்பன் இருந்தான். அவன் தாவீதின் சகோதரனான சிமயியின் மகன். யோனதாபு சூழ்ச்சி மிக்கவன்.
4“இளவரசே! நீர் நாளுக்கு நாள் சோர்ந்து போவதேன்? என்னிடம் சொல்லமாட்டீரோ?’ என்று கேட்க, அதற்கு அம்னோன், “என் சகோதரன் அப்சலோமின் சகோதரி மீது நான் மையல் கொண்டுள்ளேன்” என்று அவனிடம் கூறினான்.
5யோனதாபு அவனிடம் “உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நோயுற்றவர்போல் பாசாங்கு செய்யும். உம் தந்தை உம்மைக் காணவருவார். அவரிடம் ‘என் சகோதரி தாமாரைத் தயைகூர்ந்து அனுப்பி வையுங்கள். அவள் எனக்கு உணவு தரட்டும்; என் கண்முன்னே அவள் உணவு தயாரிக்கட்டும். நான் அதைக் கண்டு அவள் கையிலிருந்து உண்பேன்’ எனச் சொல்லும்" என்று யோனதாபு அவனுக்கு ஆலோசனை கூறினான்.
6அவ்வாறே, அம்னோன் படுத்துக்கொண்டு நோயுற்றவன்போல் பாசாங்கு செய்தான். அரசர் அவனைக் காணவந்த போது, அம்னோன் அவரிடம், “தயைகூர்ந்து என் சகோதரி தாமாரை அனுப்பி வையுங்கள், அவள் என் கண் முன்னே இரண்டொரு பணியாரங்கள் செய்தால், நான் அவள் கையிலிருந்து உண்பேன்” எனக் கூறினான்.
7தாவீது வீட்டுக்கு ஆளனுப்பி தாமாரை வரச்சொல்லி, “உடனே உன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குச் சென்று அவனுக்கு உணவு தயார் செய்” என்றார்.
8தாமார் தன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குச் சென்றாள். அவனோ படுத்திருந்தான். அவள் மாவு எடுத்து பிசைந்து அவன் கண்முன்னே பணியாரங்கள் சுட்டாள்.
9பிறகு, அவள் பாத்திரத்தைக்கொண்டு வந்து அவனுக்குப் பரிமாறினாள். அவன் உண்ண மறுத்தான். எல்லாரையும் என்னிடமிருந்து போகச் சொல்” என்று அம்னோன் கேட்க, எல்லாரும் அவனை விட்டுச் சென்றனர்.
10“உணவை உள்ளறைக்குக் கொண்டுவா. நான் உன் கையிலிருந்து உண்பேன்” என்று அம்னோன் தாமாரிடம் கூறினான். தாமார் சுட்ட பணியாரங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரன் அம்னோனிடம் படுக்கையறைக்குள் சென்றாள்.
11அவன் உண்பதற்காக அவற்றை அவள் எடுத்துக்கொண்டு அவனருகே சென்றபோது அவன் அவளைப் பிடித்து இழுத்து, “என் சகோதரியே! வா, என்னோடு படு” என்றான்.
12“வேண்டாம் சகோதரனே! என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏனெனில், இஸ்ரயேலில் இவ்வாறு நடப்பதில்லை. இந்த மடமையைச் செய்யாதே.
13எனது அவமானத்தை நான் எப்படிப் போக்குவேன்? நீயும் இஸ்ரயேலில் மதிக்கெட்ட ஒருவனாக இருப்பாய். தயைகூர்ந்து அரசரிடமே கேள். அவர் என்னை உனக்குக் கொடுக்க மறுக்கமாட்டார்” என்று அவள் அவனிடம் கெஞ்சினாள்.
14அவனோ அவளது குரலுக்கு செவிகொடுக்கவில்லை. அவளை விட வலிமைமிக்கவனாக இருந்ததால், அவன் அவளைக் கற்பழித்தான்.
15அதன்பிறகு, அம்னோன் அவளை மிகவும் அதிகமாக வெறுத்தான். அவன் எந்த அளவுக்கு அவள்மீது மோகம் கொண்டிருந்தானோ அந்த அளவுக்கு மிகுதியாக அவளை வெறுத்து, “எழுந்து சென்று விடு” என்று அவளிடம் கூறினான்.
16அவளோ, “வேண்டாம், என்னை அனுப்பிவிடும் கொடுமை, நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையை விடவும் மோசமானது” என்று கதறினாள். ஆனால், அவன் அவளுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை.
17தனக்குப் பணிவிடை செய்துவந்த இளைஞனை அவன் அழைத்து, “இந்தப் பெண்ணை என்னிடமிருந்து வெளியேற்று; அவள் சென்றதும் கதவைத் தாழிடு” என்று கூறினான்.
18பணியாளன் அவளை வெளியேற்றி, அவள் சென்றதும் கதவைத் தாழிட்டான். கன்னியராக இருந்த அரச மகளிரின் வழக்கப்படி அவள் பல்வண்ண, நீண்ட ஆடை அணிந்திருந்தாள்.
19தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினாள்; தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்; தன் தலைமீது கைவைத்து அழுதுகொண்டே சென்றாள்.
20அப்பொழுது, அவள் சகோதரன் அப்சலோம் அவளிடம், “இதை உனக்குச் செய்தது அம்னோனா? என் சகோதரி! இப்போது நீ அமைதியாய் இரு. அவன் உன் சகோதரன்! இதை மனதில் வைக்காதே” என்று கூறினான். தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டில் ஆறுதலின்றி வாழ்ந்தாள்.
21நடந்த இவ்வனைத்தையும் தாவீது கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டார்.
22அப்சலோம் அம்னோனுடன் நல்லதோ தீயதோ ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில், தன் சகோதரி தாமாரைக் கற்பழித்ததற்காக அப்சலோம் அம்னோனை வெறுத்தான்.

அப்சலோம் பழி தீர்த்தல்

23ஈராண்டுகள் கழிந்தபிறகு அப்சலோம் எப்ராயின் அருகே பாகால் ஆட்சோரில் ஆடுகளுக்கு முடிகத்தரித்தான். அப்போது அப்சலோம் இளவரசர் அனைவரையும் அழைத்திருந்தான்.
24அப்சலோம் அரசரிடம் வந்து, “இதோ! அடியேன் ஆடுகளுக்கு முடிகத்தரிக்கிறேன். அரசரும் அவருடைய பணியாளரும் தயைகூர்ந்து அடியேனோடு வாருங்கள்” என்றான்.
25அரசர் அப்சலோமிடம், ‘என் மகன் அப்சலோம்! வேண்டாம், நாம் அனைவரும் செல்ல வேண்டாம். உனக்கு நாங்கள் சுமையாக இருக்க வேண்டாம்” என்று கூறினார். அவன் அவரை வலியுறுத்தியும் அவர் செல்ல விரும்பாமல், அவனுக்கு ஆசியளித்தார்.
26பின் அப்சலோம், “இல்லாவிடில் என் சகோதரன் அம்னோன் எங்களோடு செல்லட்டும்” என்று கேட்க, அரசர், “அவன் உன்னோடு ஏன் செல்ல வேண்டும்?” என்று அவனிடம் வினவினார்.
27அவன் அவரை வற்புறுத்தியதால் அம்னோனையும் இளவரசர் அனைவரையும் அவனோடு அரசர் அனுப்பி வைத்தார்.
28அப்சலோம் தம் பணியாளரிடம், “அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்; ‘அம்னோனைத் தாக்குங்கள்’ என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள்” என்று கூறினான்.
29அப்சலோமின் பணியாளர் அவன் கட்டளையிட்டவாறே அம்னோனுக்குச் செய்தார்கள். இளவரசர் அனைவரும் அவரவர் தம் கழுதைகளில் ஏறித் தப்பி ஓடினர்.
30அவர்கள் திரும்பிச் செல்கையில் அப்சலோம் இளவரசர் அனைவரையும் கொன்றதாகவும் அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை என்றும் தாவீதுக்குச் செய்தி கிடைத்தது.
31அரசர் எழுந்து தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு தரையில் படுத்தார். அங்கே நின்றுகொண்டிருந்த பணியாளர் அனைவரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர்.
32தாவீதின் சகோதரன் சிமயாவின் மகன் யோனதாபு, “உம் புதல்வர்களாகிய இளவரசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்கள் என்று என் தலைவர் நினைக்க வேண்டாம். ஏனெனில், அம்னோன் மட்டுமே இறந்துள்ளான். தன் சகோதரி தாமார் கற்பழிக்கப்பட்ட நாளிலிருந்து அப்சலோம் தன் எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான்.
33ஆகவே, என் தலைவராம் அரசர், இளவரசர் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்துக் கவலைப்படவேண்டாம்; ஏனெனில், அம்னோன் மட்டுமே இறந்துள்ளான்” என்று கூறினான்.
34இதற்கிடையில் அப்சலோம் ஓட்டம் பிடித்தான். அப்போது அரண்மனைக் காவலன் தன் கண்களை உயர்த்திப் பார்த்தபொழுது, இதோ, திரளான மக்கள் மலையோரமாகப் பின்னால் இருந்த சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.
35அப்போது யோனதாபு அரசரிடம், “பாருங்கள், இளவரசர் வந்துவிட்டனர்; நான் சொன்னது போலவே நிகழ்ந்துவிட்டது” என்றான்.
36அவன் பேசி முடிக்கும்போது இளவரசரும் வந்து, ஓலமிட்டு அழுதனர். அரசரும் பணியாளர் அனைவரும் வெகுவாய்ப் புலம்பி அழுதனர்.
37தப்பியோடிய அப்சலோம் கெசூர் அரசன் அம்மிகூதின் மகள் தல்மாயிடம் சென்றடைந்தான். தாவீது தம் மகனுக்காக நாள்தோறும் புலம்பிக் கொண்டிருந்தார்.
38கெசூருக்குத் தப்பி ஓடிய அப்சலோம் அங்கே மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான்.
39அம்னோனின் மறைவு பற்றிய கவலை நீங்கியபின், அரசர் தாவீது அப்சலோமைக் காணும் ஏக்கத்தில் இருந்தார்.

13:37 2 சாமு 3:3.