1அப்பொழுது யோசேப்பு, தம் தந்தையின் முகத்தின் மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார்.
2பின்பு, தம் தந்தையின் உடலை மருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர்.
3இதற்கு நாற்பது நாள்கள் தேவைப்பட்டன. ஏனெனில், ஒரு சடலத்திற்கு முறையான பாதுகாப்புச் செய்ய நாற்பது நாள்கள் தேவைப்படும். எகிப்தியர் அவருக்காக எழுபது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.
4துக்க நாள்கள் முடிந்த பின், யோசேப்பு பார்வோன் வீட்டாரிடம், “உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருக்கிறது என்றால், பார்வோனின் செவிகளில் இவ்வாறு சொல்லுங்கள்;
5என் தந்தை, ‘நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆகவே, நான் எனக்காகக் கானான் நாட்டில் வெட்டி வைத்துள்ள கல்லறையில் என்னை நீ அடக்கம் செய்’ என்று சொல்லி என்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டார். ஆகவே, இப்பொழுது நான் அங்கே போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு விடை கொடுங்கள்” என்றார்.
6பார்வோன், “நீர் உறுதிமொழி கொடுத்துள்ளபடியே உம் தந்தையை அடக்கம் செய்யப் போய்வாரும்” என்றான்.
7ஆகவே, யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்யச் செல்கையில், பார்வோனின் அலுவலர், குடும்பப் பெரியோர், எகிப்து நாட்டுப் பெரியோர் அனைவரும் அவருடன் சென்றனர்.
8யோசேப்பின் வீட்டார், அவர் சகோதரர், அவர் தந்தை வீட்டார் அனைவரும் அவருடன் சென்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் மட்டும் கோசேன் பகுதியில் விட்டுச் சென்றனர்.
9தேர்களும் குதிரை வீரர்களும் அவருடன் சென்றார்கள். இப்படியாக மிகப்பெரிய பரிவாரம் அவரைப் புடை சூழ்ந்து சென்றது.
10அவர்கள் யோர்தான் நதிக்கு அப்பால் இருந்த கோரேன் அத்தத்து என்ற இடத்திற்கு வந்ததும் அங்கே ஓலமிட்டுக் கதறி ஒப்பாரி வைத்துப் பெரிதும் புலம்பினர். யோசேப்பு தம் தந்தைக்காக ஏழுநாள் புலம்பல் சடங்கு நடத்தினார்.
11அங்கே கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு, “இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு” என்றனர். ஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு ‘ஆபேல் மிஸ்ராயிம்’ என்ற பெயர் வழங்கலாயிற்று.
12இப்படியாக அவருடைய புதல்வர் அவர் கட்டளைப்படியே அவருக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்தனர்.
13அவருடைய புதல்வர் அவரைக் கானான் நாட்டிற்கு எடுத்துச் சென்று மம்ரேக்கு எதிரில் மக்பேலா என்ற நிலத்தில் இருந்த குகையில் அடக்கம் செய்தனர். இந்த இடத்தை ஆபிரகாம் தமக்கென்று கல்லறை நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக எப்ரோன் என்ற இத்தியனிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்.
14யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்தபின், அவரும் அவர் சகோதரரும் அவருடன் அவர் தந்தையை அடக்கம் செய்யச் சென்றிருந்த அனைவரும் எகிப்திற்குத் திரும்பினர்.

யோசேப்பு தம் சகோதரருக்கு அளித்த உறுதிமொழி

15அப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு, “யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி, இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழி வாங்குவார்” என்று எண்ணினர்.
16எனவே, அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: “உம் தந்தை இறப்பதற்குமுன், ‘உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள்’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
17ஆகவே, இப்பொழுது உம்தந்தையின் கடவுளுடைய அடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்.” அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார்.
18அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து, “நாங்கள் உம் அடிமைகள்” என்றனர்.
19யோசேப்பு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்; நான் கடவுளுக்கு இணையானவனா?
20நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால், கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்.
21ஆகவே, இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்” என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்; அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார்.

யோசேப்பின் இறப்பு

22யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.
23எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.
24யோசேப்பு தம் சகோதரரிடம், “நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆனால், கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபுக்குத் தாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்” என்றார்.
25மீண்டும் யோசேப்பு, “கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது, நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்” என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார்.
26யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார். அவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர்.

50:5 தொநூ 47:29-31. 50:13 தொநூ 23:16-18. 50:25 விப 13:19; யோசு 24:33; எபி 11:22.