1யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழவிருப்பதை நான் அறிவிக்கப் போகிறேன்.
2கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.
3ரூபன்! நீயே என் தலைமகன்; என் ஆற்றல் நீயே; என் ஆண்மையின் முதற்கனி நீயே; மாண்பிலும் வலிமையிலும் முதன்மை பெற வேண்டியவனும் நீயே!
4ஆனால், நீரைப்போல் நிலையற்றவனாய், முதன்மையைப் பெறமாட்டாய். ஏனெனில் உன் தந்தையின் மஞ்சத்தில் ஏறினாய்; ஆம், என் படுக்கையைத் தீட்டுப்படுத்தினாய்.
5சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன் பிறப்புகளே! அவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்!
6மனமே, அவர்களது மன்றத்தினுள் நுழையாதிரு! மாண்பே, அவர்களது அவையினுள் அமராதிரு! ஏனெனில் கோப வெறி கொண்டு அவர்கள் மனிதர்களைக் கொன்று குவித்தார்கள். வீம்புக்கென்று அவர்கள் எருதுகளை வெட்டி வதைத்தார்கள்.
7அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும். அவர்களது கொடுமையான கோபம் சபிக்கப்படும். அவர்களை யாக்கோபினின்று பிரிந்து போகச் செய்வேன். அவர்களை இஸ்ரயேலினின்று சிதறடிப்பேன்.
8யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர்.
9யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென, அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்?
10அரசுரிமை உடையவர் வரும்வரையில் மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபை விட்டுக் கொற்றம் மறையாது.
11அவன் திராட்சைக் செடியில் தன் கழுதையையும், செழுமையான திராட்சைக்கொடியில் தன் கழுதைக் குட்டியையும் கட்டுவான். திராட்சை இரசத்தில் தன் உடையையும் திராட்சைச் சாற்றில் தன் மேலாடையையும் தோய்த்திடுவான்.
12அவன் கண்கள் திராட்சை இரசத்தினும் ஒளியுள்ளவை; அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை.
13செபுலோன், கடற்கரையில் வாழ்ந்திடுவான்; அவன் கப்பல் துறையில் இருந்திடுவான்; அவனது எல்லை சீதோன் வரை பரவியிருக்கும்.
14இசக்கார், இரு பொதியின் நடுவே படுத்திருக்கும் வலிமைமிகு கழுதை போன்றவன்.
15அவன் இளைப்பாறும் இடம் நல்லதென்றும் நாடு மிக வசதியானதென்றும் காண்பான்; எனவே சுமை தூக்கத் தோள் சாய்ப்பான். அடிமை வேலைக்கு இணங்கிடுவான்.
16தாண், இஸ்ரயேலின் குலங்களில் ஒன்றாக, தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
17தாண், வழியில் கிடக்கும் பாம்பு ஆவான்; அவன் பாதையில் தென்படும் நாகம் போல, குதிரைமேல் இருப்பவன் மல்லாந்து விழும்படி அதன் குதிங்காலைக் கடித்திடுவான்.
18ஆண்டவரே! உமது மீட்பிற்காகக் காத்திருக்கிறேன்.
19காத்து, கொள்ளைக் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாவான். அவனும் அவர்களைத் துரத்தித் தாக்கிடுவான்.
20ஆசேரின் நிலம் ஊட்ட மிக்க உணவளிக்கும். மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்.
21நப்தலி, அழகிய மான்குட்டிகளை ஈனும் கட்டவிழ்ந்த பெண்மான் ஆவான்.
22யோசேப்பு, கனிதரும் கொடி ஆவான்; நீரூற்றருகில் மதில்மேல் படரும் கொடிபோல் கனி தருவான்.
23அவனுக்கு வில்லில் வல்லார் தொல்லை கொடுத்தார்; அவன்மீது அம்பெய்தார்; அவனிடம் பகை வளர்த்தார்.
24ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது; அவனுடைய புயங்கள் துடிப்புடன் இயங்கின; ஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார். இஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.
25உன் தந்தையின் இறைவனே உனக்குத் துணையிருப்பார்; எல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்; மேலே வானத்தினின்று வரும் ஆசியாலும் கீழே ஆழத்தினின்று வரும் ஆசியாலும் கொங்கைகளுக்கும் கருப்பைகளுக்கும் உரிய ஆசியாலும் அவர் உனக்கு ஆசி வழங்குவார்.
26தந்தையின் ஆசிகள், பழம் பெரும் மலைகளின் ஆசியிலும், என்றுமுள குன்றுகளின் வள்ளன்மையிலும், வலியவை; இவை அனைத்தும் யோசேப்பின் மீது இறங்கிடுக! தன் சகோதரரின் இளவரசனாய்த் திகழ்வோனின் நெற்றியில் அவை துலங்கிடுக!
27பென்யமின், பீறிக்கிழிக்கும் ஓநாய்க்கு ஒப்பானவன்; காலையில் வேட்டையாடிய இரையை அவன் விழுங்குவான்; மாலையில், கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வான்”.
28இவர்கள் அனைவரும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தார் ஆவர். இவற்றை மொழிந்து இவர்களின் தந்தை இவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய ஆசியை அளித்து வாழ்த்துரை வழங்கினார்.

யாக்கோபின் இறப்பு

29மேலும் அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்படவிருக்கிறேன். என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள்.
30அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தைக் கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார்.
31அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்; அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர். அங்கே தான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன்.
32அந்நிலமும் அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை.”
33யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின், தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

49:9 எண் 24:9; திவெ 5:5. 49:30 தொநூ 23:3-20. 49:31 தொநூ 25:9-10; 35:29. 49:33 திப 7:15.