எப்ராயிம், மனாசேக்கு யாக்கோபு ஆசி வழங்குதல்

1இந்நிகழ்ச்சிகளுக்குப்பின், “உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார்” என்று யோசேப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், தம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
2“இதோ உம் மகன் யோசேப்பு உம்மைக் காண வந்திருக்கிறார்” என்று அறிவிக்கப்பட்டவுடன், யாக்கோபு பெருமுயற்சி செய்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.
3யாக்கோபு யோசேப்பை நோக்கி, “எல்லாம் வல்ல இறைவன் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற இடத்தில் எனக்குக் காட்சியளித்து ஆசி வழங்கி,
4‘நான் உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன். உன்னைத் திரளான மக்கள் கூட்டமாக ஆக்குவேன். இந்நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் வழிமரபினர்க்கும் என்றுமுள உடைமையாகத் தருவேன்’ என்று வாக்களித்தார்.
5ஆகையால், நான் எகிப்திற்கு வந்து உன்னிடம் சேர்வதற்கு முன்பே உனக்கு இந்நாட்டில் பிறந்த இரு மைந்தரும் என் புதல்வர்களாய் இருப்பார்கள். ரூபன், சிமியோன் போன்று எப்ராயிமும் மனாசேயும் என்னுடையவர்களே.
6இவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் ஏனைய புதல்வர்கள் உன்னுடையவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்கள் மூத்த சகோதரர்களின் பெயர் வரிசையில் சேர்க்கப்பட்டு, அவர்களது உரிமையில் பங்கு பெறுவர்.
7ஏனெனில், நான் பதானைவிட்டு வரும்பொழுது, வழியில் ராகேல் கானான் நாட்டில் இறந்து என்னைத் துயரத்தில் ஆழ்த்தினாள். அப்பொழுது நான் எப்ராத்துக்கு அருகில் இருந்தேன். எப்ராத்துக்கு அதாவது பெத்லகேமுக்குப் போகும் வழியில் அவளை அடக்கம் செய்தேன்” என்றார்.
8பின்னர், அவர் யோசேப்பின் புதல்வர்களைக் கண்டு, “இவர்கள் யார்?” என்று கேட்டார்.
9யோசேப்பு தம் தந்தையிடம், “இந்நாட்டில் கடவுள் எனக்குத் தந்தருளின மைந்தர்கள் இவர்கள்தாம்” என்று சொல்ல, அவர், “அவர்களை என் அருகில் கொண்டு வா; நான் அவர்களுக்கு ஆசி வழங்குகிறேன்” என்றார்.
10ஏனெனில், வயது முதிர்ச்சியினால் இஸ்ரயேலின் பார்வை மங்கிப்போக, அவர் எதையும் காண முடியாதவராய் இருந்தார். யோசேப்பு அவர்களை அவர் அருகில் கொண்டுவந்தவுடன் அவர் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டார்.
11பின்னர், இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, “உன் முகத்தை நான் காண மாட்டேன் என்றே நினைத்தேன்; ஆனால், உன் வழிமரபையும் கூட நான் காணும்படி கடவுள் அருள்செய்தார்” என்றார்.
12பின்னர், யோசேப்பு அவர்மடியிலிருந்த தம் பிள்ளைகளை இறக்கிவிட்டு, தரையில் முகம் குப்புறவிழுந்து வணங்கினார்.
13பின்பு, யோசேப்பு எப்ராயிமைத் தம் வலக்கையால் இஸ்ரயேலுக்கு இடப்புறமும், மனாசேயைத் தம் இடக்கையால் இஸ்ரயேலுக்கு வலப்புறமும் இருக்கும்படி அழைத்து வந்து இருவரையும் அவர் அருகில் நிறுத்தினார்.
14ஆனால், இஸ்ரயேல் தம் கைகளைக் குறுக்காக நீட்டி வலக்கையை இளையவன் எப்ராயிமின் தலைமீதும் இடக்கையை தலைமகன் மனாசேயின் தலைமீதும் மாற்றி வைத்தார்.

15அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கிக் கூறியது:

“என் தந்தையரான ஆபிரகாமும்

ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன்

நடந்து வந்தனரோ

அந்தக் கடவுளே இன்று வரை

என் வாழ்நாள் முழுவதும்

எனக்கு ஆயராக விளங்கிவருகிறார்.

16அந்தக் கடவுள், என்னை எல்லாத்

தீமையினின்றும் மீட்ட தூதர்,

இச்சிறுவர்களுக்கு

ஆசி வழங்குவாராக! மேலும்,

என் பெயரும், என் தந்தையரான

ஆபிரகாம், ஈசாக்கின் பெயர்களும்

இவர்கள் மூலம் நிலைநிற்பனவாக!

மண்ணுலகில் இவர்கள்

பெருந்திரளாகப் பல்குவார்களாக!”

17தம் தந்தை வலக்கையை எப்ராயிம் தலைமேல் வைத்திருந்தது யோசேப்புக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர் எப்ராயிம் தலைமேலிருந்த தம் தந்தையின் கையை மனாசேயின் தலைமேல் வைக்கும்படி எடுக்க முயன்றார்.
18யோசேப்பு தம் தந்தையை நோக்கி, “தந்தையே! இது சரியன்று; இவன் தான் தலைமகன். இவன் தலையின் மேல் உமது வலக்கையை வையும்” என்றார்.
19ஆனால், அவர் தந்தை மறுத்து, “தெரியும் மகனே, எனக்குத் தெரியும். இவனும் ஒரு மக்களினமாகப் பல்கிப் பெருகுவான். ஆனால், இவன் தம்பி இவனிலும் பெரியவன் ஆவான். அவன் வழிமரபினர் மக்களினங்களாகப் பெருகுவர்” என்று கூறினார்.
20மேலும், அவர் அன்று அவர்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது:

“‘எப்ராயிம், மனாசேயைப்போல்

உன்னையும் கடவுள்

வளரச் செய்வாராக’ என்று உங்கள்

பெயரால் இஸ்ரயேல் ஆசி வழங்கும்.”

இவ்வாறு அவர் எப்ராயிமை மனாசேக்கு

முன் வைத்தார்.

21பின்பு, இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, “இதோ நான் சாகப் போகிறேன். கடவுள் உங்களோடு இருப்பார். உங்கள் மூதாதையரின் நாட்டிற்கு உங்களை அவர் திரும்பவும் நடத்திச் செல்வார்.
22நான் என் வாளாலும் வில்லாலும் எமோரியரிடமிருந்து கைப்பற்றிய செக்கேம் பகுதியை, உன் சகோதரரை விட உயர்ந்தவன் என்ற முறையில், உனக்கே தருகிறேன்” என்றார்.

48:3-4 தொநூ 28:13-14. 48:7 தொநூ 35:16-19. 48:20 எபி 11:21.