14 மே 2022, சனி

“தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்”

பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம் சனிக்கிழமை


திருப்பாடல் 98: 1, 2, 3ab, 3ad-4 (3)

“தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்”

உறுதிமொழியை நினைவுகூர்ந்த ஆண்டவர்:


இடைக்காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் கொள்ளை நோய் பரவியபோது, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்துபோயினர். அடுத்து யார் இறப்பார் என்ற நிச்சயமற்ற சூழலில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் பாதுகாப்பான ஓர் இடத்தைத் தேடி புறப்பட முடிவுசெய்தது; ஆனால், அந்தக் குடும்பத்தில் இருந்த இளைஞன் மட்டும் அவர்களோடு போகாமல், ‘என்ன நடந்தாலும் நான் இங்கேதான் இருப்பேன்’ என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தான். இதனால் அந்த குடும்பம் அவனைத் தனியாக விட்டுவிட்டு, பாதுகாப்பான இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றது.

தனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றிருந்த வேளையில், அவன் இறைவனிடம் வேண்டிவிட்டுத் திருவிவிலியத்தைப் புரட்டினான். அப்போது அவனுடைய பார்வையில், “உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும் எதுவும் உம்மை அணுகாது” (திபா 91:7) என்ற இறைவார்த்தை கண்ணில் பட்டது. அந்த இறைவார்த்தையை ஆண்டவர் தந்த வாக்குறுதியாய் ஏற்றுக்கொண்டு, அவன் மக்கள் நடுவில் பணியாற்றினான். கொள்ளை நோய் முடிவும் மட்டும் அவனுக்கு எதுவுமே ஆகவில்லை.

ஆம், இந்த நிகழ்வில் வரும் இளைஞனை ஆண்டவர் பாதுகாப்பதாய் இறைவார்த்தை மூலம் உறுதிமொழி அளித்தார். அவர் சொன்னது போன்றே ஆண்டவர் அவனைப் பாதுகாத்தார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “தமது பேரன்பையும் உறுதிமொழியையும் ஆண்டவர் நினைவுகூர்ந்தார்” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

“ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்” என்ற வார்த்தைகளோடு தொடங்குகின்றது இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 98. எதற்காக ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடவேண்டும் என்ற தெளிவினை பின்வரும் இறைவார்த்தை பகுதி நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

அனைத்து உலகின் அரசராம் ஆண்டவர் வியத்தகு செயல்கள் செய்துள்ளார். குறிப்பாக இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். அதற்காக அவர்கள் ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடவேண்டும் என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்.

இன்றைக்குப் பலர் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர். ஆண்டவரோ வாக்குப் பிறழாதவர். அவரது பேரன்பு எந்நாளும் அவரால் தேர்ந்துகொண்டவர்களோடு இருக்கும். அதனால் அவருக்கு புதியதொரு பாடல் பாடுவது தகுதியும் நீதியும் ஆகும்.

சிந்தனைக்கு:

 புதியதொரு வாழ்வினைத் தந்தவருக்குப் புதிய பாடல் பாடுவது பொருத்தமானது.

 நம்மேல் மாறாத அன்புகொண்டிருக்கும் ஆண்டவரைப் போற்றுவோம்.

 ஆண்டவருக்கு நிகர் யாருமே இல்லை. அதனால் வல்ல இறைவனைவிட்டு நாம் நீங்காதிருப்போம்.

இறைவாக்கு:

‘ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்’ (திபா 103: 17) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நம்மீது பேரன்பு கொண்டிருக்கும் ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.