29 மே 2020, வெள்ளி

திருத்தூதர் பணிகள் 25: 13-21

பாஸ்கா காலம் ஏழாம் வாரம் வெள்ளிக்கிழமை

திருத்தூதர் பணிகள் 25: 13-21

பவுல்மீது குற்றம் சுமத்திய யூதர்கள்

நிகழ்வு


இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பிரபல பத்திரிகையாளர் பிலிப் ஹோவர்ட் (Philip Howard 1933-2014). இவர் தன்னுடைய ஐம்பதாவது வயதில், தன் தந்தை பீட்டர் ஹோவர்டிடம், “அப்பா! நான் ஒரு மறைப்பணியாளராக மாறி, கடவுளுடைய வார்த்தையை எடுத்துரைக்கலாம் என்று நினைக்கின்றேன். இது குறித்து நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

இதற்கு இவருடைய தந்தை, “இந்த வயதில் உனக்கு ஒரு மறைப்பணியாளராக மாறி, கடவுளுடைய வார்த்தையை எடுத்துரைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கின்றதே! அதே நினைத்து நான் பெருமைப்படுகின்றேன். அதே நேரத்தில் நீ ஒரு மறைப்பணியாளராக மாறுவதற்கு முன்பாக, மூன்று நடைமுறை உண்மைகளை உன்னுடைய மனத்தில் வைத்துக்கொள். ஒன்று, நீ யாரிடம் கடவுளிடம் வார்த்தையை அறிவிக்கின்றாயோ, அவர்களே உன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள்; அதைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். இரண்டு, நீ கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கின்றபொழுது, உனக்குப் பிடிக்காதவர்கள் உன்னைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள். அதையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். மூன்று, நீ உன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் செலுத்தி மக்கள் நடுவில் பணிசெய்வாய். அதற்காக எவரும் உன்னைப் பாராட்டமாட்டார். இந்த மூன்று நடைமுறை உண்மைகளையும் ஏற்றுக்கொண்டு, மறைப்பணி செய்யவேண்டும் என்று நீ நினைத்தால் செய்; இல்லையென்றால் விட்டுவிடு” என்றார்.

தன் தந்தை சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போன பிலிப் ஹோவர்ட், மறைப்பணி செய்வது ஒன்றும் அவ்வளவு செயலில்லை என்று, மறைப்பணியாளராக வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டார்.

ஆம், மறைப்பணி செய்வது ஒன்றும் எளிதான செயல் கிடையாது; மிகவும் கடினமான செயல். மறைப்பணியைச் செய்கின்றபொழுது அல்லது கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைக்கின்றபொழுது, மக்கள் அவதூறு பரப்புவார்கள்... கேலி கிண்டல் செய்வார்கள்... பாராட்டுவதற்கு மனமில்லாமல் இருப்பார்கள். இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவரால் சிறந்த முறையில் மறைப்பணியைச் செய்யமுடியும். இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்து வந்த பவுலின்மீது யூதர்கள் குற்றம் சுமத்துவது தொடர்பாக வாசிக்கின்றோம். இப்படிப்பட்ட சவால்களுக்கு நடுவில் பவுல் எப்படிப் பணி செய்தார் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அகிரிப்பா பெஸ்தைச் சந்தித்தல்

இன்றைய முதல் வாசகம், தன்னிடம் மரியாதை நிமித்தமாக வந்த அக்ரிப்பாவிடம் பெஸ்து, தன்னுடைய காவலில் இருந்த பவுலைக் குறித்துச் சொல்வதாக இருக்கின்றது. இந்த அக்ரிப்பா. பெரிய ஏரோதின் பேரன், முதலாம் அக்ரிப்பாவின் மகன். இவன் வடகிழக்குப் பாலஸ்தினை ஆண்டு வந்தான். அப்படிப்பட்டவன் தன்னுடைய சகோதரி பெர்க்கியுவோடு, உரோமையின் ஆளுநராக இருந்த பெஸ்துவைச் சந்திக்க வருகின்றான். அவ்வாறு சந்திக்க வருகின்றபொழுதுதான், பெஸ்து தன்னுடைய காவலில் இருந்த பவுலைக் குறித்தும் கொடிய குற்றம் எதுவும் இல்லாதபொழுதும் யூதர்கள் அவருக்கு எதிராக குற்றம் சுமத்துவதையும் குறித்து அக்ரிப்பாவிடம் எடுத்துக்கூறுகின்றான்..

பெஸ்து பவுலைக் குறித்து அக்ரிப்பாவிடம் இவ்வாறு சொல்லும்பொழுது, ஒரு முக்கியமான செய்தியையும் சொல்கின்றார். அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு உயிரோடு இருக்கின்றார் என்று சாதித்து வந்த பவுல்

பெஸ்து அக்ரிப்பாவிடம் பவுலைக் குறித்துச் சொல்கின்றபொழுது, ‘இயேசு உயிரோடு இருப்பதாக பவுல் சாதித்து வருகின்றார்’ என்கிறார். ஆம், இறைப்பணியைச் செய்துவந்த பவுல், தனக்கு வாய்ப்புக் கிடைக்கின்றபொழுதெல்லாம் உயிர்த்த ஆண்டவரைப் பற்றி எடுத்துரைத்து வந்தார். இதனாலேயே யூதர்களில் இருபிரிவினராக இருந்த பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது (திப 22: 6-11).

பவுல், உயிர்த்த ஆண்டவரைப் பற்றி அறிவித்து வந்தது, நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், நாமும் உயிர்த்த ஆண்டவரைப் பற்றி, நமக்கு வாய்ப்புக் கிடைக்கின்றபொழுதெல்லாம் நம்முடைய வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்வாலும் அறிவிக்க வேண்டும் என்பதாகும். நாம் நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் உயிர்த்த ஆண்டவருக்குச் சான்று பகற்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே’ (எரேமி 1:7) என்பார் ஆண்டவர். எரேமியா இறைவாக்கினரிடம் ஆண்டவர் இவ்வாறு சொன்னதற்குப் பிறகு, அவர் எப்படிக் கடவுளின் வார்த்தையை அஞ்சாமல், கலக்கமுறாமல் மக்களுக்கு அறிவித்தாரோ, பவுல் எப்படி கடவுளின் வார்த்தையை யாருக்கும் அஞ்சாமல் அறிவித்தாரோ, அதுபோன்று நாமும் கடவுளின் வார்த்தையை அஞ்சாமல் அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்