23 மே 2020, சனி

திருத்தூதர் பணிகள் 18: 23-28

பாஸ்கா காலம் ஆறாம் வாரம் சனிக்கிழமை

திருத்தூதர் பணிகள் 18: 23-28

ஒருவர் மற்றவரை ஊக்கப்படுத்துவோம்

நிகழ்வு


அமெரிக்காவில், இளம் வயதில் அமைச்சரான ஒருவர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் அவருடைய முறை வந்தபொழுது, அவர் எழுந்து நின்று பேசத் தொடங்கினார். இதற்கு முன்பு ஒரு கூட்டத்திலும் பேசிய அனுபவம் கிடையாது... பெரிய பெரிய மனிதர்களெல்லாம் அங்கு இருந்தார்கள்... இவையெல்லாம் அவரை அறியாமல், அவருக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தின. அதனால் அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. இதை எல்லாரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

அப்பொழுது அந்த இளம் அமைச்சருக்குப் பக்கத்தில் இருந்த, வயதில் மூத்த ஓர் அமைச்சர் ஒரு காகிதத்தில், “You Will Do” என்ற வார்த்தைளை எழுதிக் கொடுத்தார். அதைப் பார்த்துவிட்டு, அந்த இளம் வயது அமைச்சர், தன்னிடம் தயக்கத்தையும் நடுக்கத்தையும் போக்கி, மிகவும் நம்பிக்கையோடு பேசி எல்லாருடைய பாராட்டையும் பெற்றார்.

இந்த நிகழ்வில் வரும் இளம்வயது அமைச்சர் தடுமாறிபொழுது, அவருக்குப் பக்கத்தில் இருந்த வயதில் மூத்த அமைச்சர் எப்படி நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் அவரைப் உற்சாகப்படுத்தினாரோ, அப்படி இன்றைய முதல் வாசகத்தில் வரும் பவுலும் பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் திருஅவையில் இருந்தவர்களையும் அப்பொல்லோவையும் உற்சாகப்படுத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தான் ஏற்படுத்திய திருஅவையை உற்சாகப்படுத்திய பவுல்

பிற இனத்தாரின் இறைவாக்கினர் என அழைக்கப்படும் பவுல் இரண்டு திருத்தூது பயணங்களை மேற்கொண்ட பிறகு அந்தியோக்கிற்கு வந்து, அங்கு சில காலம் செலவிட்டபின், அங்கிருந்து புறப்பட்டுக் கலாத்தியா, பிரிகியா போன்ற பகுதிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று, அங்கிருந்த இறைமக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார்.

பவுல் மேற்கொண்ட இப்பணி மிகவும் பாராட்டப்பட வேண்டிய பணி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், பவுல் தான் சென்ற இடங்களிலெல்லாம் திருஅவையை அல்லது இறைமக்களைக் கட்டி எழுப்பிவிட்டு, அவர்களை அப்படியே மறந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் இறைநம்பிக்கையில் மிக உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவர்களை மீண்டுமாகச் சந்தித்து அவர்களை நம்பிக்கையில் மேலும் உறுதிப்படுத்துகின்றார். பவுல் ஏற்படுத்திய திருஅவையில் இருந்தவர்கள், வெளியே இருந்தும் உள்ளே இருந்தும் பிரச்சனைகளை சந்தித்திருக்கக்கூடும். அதனால் அவர்கள் நம்பிக்கை தளர்ந்திருக்கக்கூடும். இதை உணர்ந்தவராகத்தான் பவுல், தான் ஏற்படுத்திய திருஅவையில் இருந்தவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார்.

அப்பொல்லோவை ஊக்கப்டுத்திய பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும்

இன்றைய முதல் வாசகத்தின் முதல் பகுதி, பவுல் தான் ஏற்படுத்திய திருஅவையில் இருந்தவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தியதைப் பற்றி சொல்கின்றது என்றால், இரண்டாவது பகுதி, பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் எபேசு நகரைச் சார்ந்த அப்பொல்லோவை நம்பிக்கையில் உறுதிப்படுத்தியை எடுத்துச் சொல்கின்றது.

இந்த அப்பொல்லா சொல்வன்மை மிக்கவராகவும்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவராகவும்; ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவராகவும் இருந்தார்; ஆனால், அவர் யோவானின் திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அதனால் பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்து கடவுளின் நெறியைத் திட்டவட்டமாய் அவருக்கு அறிவிக்கின்றார்கள். மட்டுமல்லாமல், அப்பொல்லோ அக்காயாவிற்குப் போக விரும்பியபொழுது, பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அங்கிருந்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அப்பொல்லாவை ஊக்கப்படுத்தி, ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். இவ்வாறு பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும், கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அப்போல்லாவை ஊக்கப்படுத்துபவர்களாவும் உற்சாகப்படுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.

பவுலும் பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் திருஅவையில் இருந்தவர்களை உற்சாகப்படுத்தியது, நமக்கொரு முக்கியமானதோர் அழைப்பினைத் தருகின்றது. அது என்னவெனில், ஒருவர் மற்றவரை உற்சாகப்படுத்தவேண்டும் என்பதுதான். உரோமானியக் கவியான ஓவித் (BC 43- AD 18) இவ்வாறு கூறுவார்: “பந்தயத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை அதன் உரிமையாளர் உற்சாகப்படுத்தினால், அது இன்னும் வேகமாக ஓடித் தன் இலக்கை வெகு விரைவாக அடையும்.”

ஆம், உற்சாகமான வார்த்தைகளுக்கு எப்பொழுதும் வலிமை உண்டு. ஆகவே, நாம் பவுலும் பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் எப்படித் திருஅவையில் இருந்தவர்களை ஊக்க மூட்டினார்களோ, அப்படி நாம் நம்மோடு இருப்பவர்களை ஊக்கமூட்டி, அவர்களை நம்பிக்கையில் மேலும் வளர்த்தெடுப்போம்.

சிந்தனை

‘தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்’ (எசா 35:3) என்று கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை உரைப்பார். நாம் தளர்ந்து போன கைகளையும் கால்களையும் மட்டுமல்ல, தளர்ந்து போன உள்ளங்களையும் உறுதிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்