08 ஏப்ரல் 2020, புதன்

எசாயா 50: 4-9

புனித வாரம் புதன்கிழமை

எசாயா 50: 4-9

“கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை”

நிகழ்வு


இளைஞன் ஒருவன் பல ஆண்டுகள் கழித்து, ஊரில் இருந்த தன்னுடைய தாத்தாவின் வீட்டிற்குச் சென்றிருந்தான். அவன் சிறுவனாக இருக்கும்பொழுது, தாத்தா அவனைப் பார்த்திருந்தார். இப்பொழுது அவன் அடையாளமே தெரியாத அளவுக்கு வளர்ந்திருப்பதைக் கண்டு, அவர் மிகவும் வியப்படைந்தார். தாத்தாவும் பேரனும் வாஞ்சையோடு பேசிக்கொண்டிருக்கையில், பேரன் அதாவது, இளைஞன் அற்புதமான ஒரு பாடல் காற்றில் மிதந்து வருவதைக் கேட்டான். முதலில் யாரோ ஒருவர் பாடுகின்றார் போலும் என்று விட்டுவிட்டான். மீண்டும் மீண்டுமாக அதே குரல் காற்றில் மிதந்து வருவதைக் கேட்ட அவன், அக்குரல் எங்கிருந்து வருகின்றது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அப்பொழுதுதான் வீட்டின் மூலையில் இருந்த கிளிக்கூண்டிலிருந்த கிளியிடமிருந்து வருவதை அறிந்தான்.

இந்த உண்மையை அறிந்ததும், அவன் தன்னுடைய தாத்தாவிடம், “தாத்தா! இந்தக் கிளி இப்படி அற்புதமாகப் பாடுகின்றதே...! அது எப்படி...?” என்றான். உடனே தாத்தா அவனிடம், “நான் கொடுத்த பயிற்சியினால்தான் இந்தக் கிளி இப்படி அற்புதமாகப் பாடுகின்றது?” என்றார். “கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்கள்” என்று பேரன் தாத்தாவிடம் கேட்டபொழுது, அவர் அவனிடம், “இந்தக் கிளியை எனக்குத் தெரிந்தவர் ஒருவர் பரிசளித்தார். இதை நான் வீட்டுக்குக் கொண்டுவந்த சில நாள்களிலேயே, இந்த கிளி நாம் என்னென்ன பேசுகின்றோமோ, அதை அப்படியே பேசக்கூடிய கிளி என்பதை உணர்ந்துகொண்டேன். அதனால் இதற்குப் பாடல்கள் கற்றுக்கொடுத்தால், இன்னும் நன்றாக இருக்கும் என்று முடிவுசெய்தேன். அதன்படி இதற்குப் பாடல்கள் கற்றக் கொடுக்கத் தொடங்கினேன்.

பகல் நேரங்களில் இதற்கு நான் பாடல்கள் கற்றுத்தரும்பொழுது வெளியே இருந்து கேட்ட சத்தத்தினால், இதனுடைய கவனம் சிதறுவதை உணர்ந்தார், இதனால் நான் இதற்கு இரவுநேரங்களில், அதுவும் குறிப்பாக வீட்டிலிருக்கின்ற எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டுப் பாடல்கள் கற்றுத்தரத் தொடங்கினேன். தொடக்கத்தில் இது இருட்டைக் கண்டதும் பதறியது; மிகவும் சிரமப்பட்டது. நாள்கள் செல்லச் செல்ல இதற்கு இருட்டுக்கு பழகிவிட்டது. மட்டுமல்லாமல், இதனுடைய முழுக்கவனமும் நான் கற்றுத் தருகின்ற பாடலில் குவிந்தது. இதனால் இதனிடமிருண்டு அற்புதமான பாடல்கள் வரத்தொடங்கின. இன்று இந்தக் கிளி இவ்வளவு அற்புதமாகப் பாடுகின்றது என்றால், அதற்கு முக்கியமான காரணம், இது அனுபவித்த சிரமங்களும் துன்பங்களும்தான்” என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற ‘அற்புதக் கிளி’ அற்புதமாகப் பாடல்கள் பாடியது என்றால், அதற்கு முக்கியமான காரணம், அது அனுபவித்த துன்பங்களும் சிரமங்களும்தான். இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்படுகின்ற துன்புறும் ஊழியர், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றார் எனில், அவர் இறைவனால் உன்னத நிலைக்கு உயர்த்தப்படப் போகிறார் என்பதே அர்த்தம். ஆகவே, துன்புறும் ஊழியனைக் குறித்துச் சொல்லும் இன்றைய முதல் வாசகம், நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

துன்பங்களை விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட ஊழியர்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், துன்புறும் ஊழியனைக் குறித்த மூன்றாவது பாடலைப் பதிவு செய்கின்றது. மற்ற மூன்று பாடல்களும் கீழ்கண்ட பகுதிகளில் உள்ளன: எசா 42: 1-9; 49: 1-6; 52: 13- 53: 12. இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற துன்புறும் ஊழியரைக் குறித்த பாடல், தனக்கு வருகின்ற துன்பங்களைத் துன்புறும் ஊழியர் விருப்பத்தோடு ஏற்றுக்கொள்வதைக் குறித்து வாசிக்கின்றோம். குறிப்பாக இவர் அடிப்போர்க்கு முதுகையும் தாடியைப் பிடுங்குவோர்க்குத் தாடையையும் நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் தன்னுடைய முகத்தை மறைக்காதவராக இருக்கின்றார். இவ்வாறு இவர் தனக்கு வருகின்ற துன்பங்களை விருப்பத்தோடும் அதே நேரத்தில் கீழ்ப்படிதலோடும் ஏற்றுக்கொள்கின்றார் (யோவா 5: 19; பிலி 2:8).

துன்புறும் ஊழியரோடு இருக்கும் ஆண்டவர்

துன்புறும் ஊழியர் தனக்கு வந்த துன்பங்களைப் பொறுமையோடும் விருப்பத்தோடும் கீழ்ப்படிதலோடும் தாங்கிக் கொண்ட அதே வேளையில், இறைவன் தன்னோடு இருக்கின்றார் என்பதை உணர்ந்தவராக இருக்கின்றார். ஆம், இறையடியார்களை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை. அதைத்தான் இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் வரக்கூடிய, ‘என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்’ என்ற வார்த்தைகள் எடுத்துரைப்பனவாக இருக்கின்றன. நற்செய்தியில் இயேசு கூட, “நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார்” (யோவா 16: 32) என்று இதையேதான் கூறுகின்றார். ஆகையால், இறைப்பணியைச் செய்யக்கூடியவர்கள், பணிவாழ்வில் துன்பங்கள் வருகின்றன என எண்ணாமல், இறைவன் துணையாய் இருக்கின்றார் என்ற உணர்வோடு இறைப்பணியைச் செய்வது நல்லது.

சிந்தனை

அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்’ (1 பேது 1:7) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் நம்முடைய நம்பிக்கையின் பொருட்டு வருகின்ற துன்பங்களைப் பொறுமையோடும் விருப்பத்தோடும் தாங்கிக்கொண்டு இறைவனுக்கு உகந்த வழியில் தொடர்ந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்