16 பிப்ரவரி 2020, ஞாயிறு

திருப்பலி முன்னுரை

பொதுக்காலம் 06ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை


‘திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றவே வந்தேன்’ என நம்மிடம் இயேசு கூறுவதை உணர்ந்து, அப்பணியில் நம்மையும் பங்கெடுத்துக் கொள்ள இன்றைய ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.

சட்ட திட்டங்களால் மட்டும் வீட்டுக்கும் நாட்டுக்கும் பயனில்லை. அவற்றின் உண்மைத் தன்மையை உணர்ந்து, முழு உள்ளத்தோடு கடைப்பிடிக்கும் போது தான் பயன் தருகிறது. கடைப்பிடிக்கக்கூடிய சட்டங்களைத் தீட்டி, கட்டுப்படுத்தாமல் கருத்திற் கொண்டு ஒழுகுவோம்.

இன்றைய முதல் வாசகத்தில், ‘ஆண்டவரின் ஞானம் பெரிது, ஆற்றல்மிக்க ஆண்டவர் அனைத்தையும் காண்கிறார்’ என்று மொழிகிறது சீராக்கின் ஞான ஆகமம். இச்சிந்தனை மக்கள் மனங்களில் மழுங்கிப் போனதால் தான் இச்சமூகத்தில் எண்ணற்ற அவலங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததில்லை. இவ்வார்த்தைகளை விவிலியப் பக்கங்களுக்குள் படித்து விடாமல், வாழும் உள்ளங்களில் பதித்துக் கொள்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ கடைப்பிடிக்க வேண்டிய நற்செயல்களை இயேசு அன்பாய் அறிவிக்கிறார். வாள் கொண்டு வீழ்த்துவதை விட வாய் கொண்டு வீழ்த்துவது அதிக வலியைத் தரும். எனவே நம் வாயில் இருந்து தீய வார்த்தைகள் புறப்பட வேண்டாம். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது பண்பாடு. இன்றைய வளர்ந்து வரும் நாகரீகம் நம் பண்பாட்டைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஆடைகளில் தொடங்கி இறைவன் அருவருக்கும் செயல்களான விபச்சாரம் வரை நாகரீகமாகி விட்ட்து. எனவே இவ்வுலகில் இறை பயத்தோடு, இனிய குணத்தோடு, தீமைக்குப் பணியாத வலிய மனத்தோடு, பிறரை அன்பு செய்யும் முழு மனத்தோடு வாழ்வை மேற்கொள்வோம். இச்சிந்தனைகளை மனதில் கொண்டு இப்பலியில் பங்கேற்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

1. ‘திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்’ என்றவரே எம் இறைவா!
எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை மற்றும் திருஅவை பணியாளர்கள் அனைவரும் உம் அழைப்பின் மேன்மையை உணர்ந்து, திருச்சட்டத்தின் படி நடந்து, மக்கள் மனங்களில் இறைவன் விரும்பும் சட்டத்தை விதைத்து, வளர்க்கவும், நல்வழிப்படுத்தும் ஆயர்களாக செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. ‘உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்’ என்றவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் அதிகாரப்போக்கினாலும், நெறியற்ற சட்டங்களாலும் நாட்டை ஆளுகை செய்வதை கைவிட்டு, பொருளாதார மேம்பாட்டினை அடைய நடவடிக்கை எடுக்கவும், மக்கள் அனைவருக்கும் ஏற்ற சட்டங்களையும், வரியையும் செயல்படுத்தவும், மக்கள் அமைதியுடன் வாழ வழி ஏற்படுத்த நல்லறிவு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. ‘மிகுதியாகப் பேசாதீர்கள்’ என அறிவுறுத்துபவரே எம் இறைவா!
எங்கள் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் பிறரை மகிழ்விப்பதாய் இருக்கவும், வார்த்தைகளில் வர்ண ஜாலம் செய்வதை விட நற்செயல்கள் செய்வதில் அக்கறை கொள்ளவும், அனைவரிடமும் அன்போடு நடந்து, உறவைப் பேணி வளர்த்து, உமக்கு பிரியமாக நடக்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. ‘உலக இச்சைகளை அகற்றுங்கள்’ என்றவரே எம் இறைவா!
எம் இளைய சமுதாயத்தினரை ஆசீர்வதியும். அவர்களின் ஆன்ம பலத்தை அதிகரித்து, தவறான காரியங்களில் மனதை செலுத்தாமலும், ஈடுபடாமலும், ஆடம்பர காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும், அடிப்ப்டை வசதி இன்றி தவிப்பவர்களுக்கு உதவிட முன் வரவும், நல் ஞானம் தந்து வளர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

5. நன்மைகளின் நாயகனே எம் இறைவா!
நல் விளைச்சலுக்காக நன்றி. அறுவடைக்காக காத்திருக்கும் இவ்வேளையில் தகுந்த கால சூழல் நிலவி, மக்கள் நிறைவடையவும், குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும், மக்கள் இறை பாதையை உணரவும், தேர்வை சந்திக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுத தேவையான ஞானம் பெறவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உம் அருளால் பெற்று மகிழவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

வாசகங்கள்



பிற நாட்கள்