ஜனவரி 30
ஜனவரி 30
எபிரேயர் 10: 11-18
மன்னிப்போம், மறப்போம்
நிகழ்வு
Forgive and Forget என்ற நூலில் அதன் ஆசிரியர், லெவிஸ் ஸ்மெட்ஸ் என்பவர் குறிப்பிடுகின்ற ஒரு நிகழ்வு.
ஹிட்லரின் நாசிப் படையில் பணியாற்றி வந்த படைவீரர் ஒருவர், ஒரு மருத்துவ மனையில், இறக்கும் தருவாயில் இருந்தார். அவர் அங்கு பணியாற்றி வந்த ஒரு செவிலியிடம், “என்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டதை உணர்கின்றேன். நான் சாவதற்கு முன்பாக, என்னால் துப்பாக்கியால் சுடப்பட்டு, இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற ஒரு யூதரிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும். அப்படி அவர் வந்து என்னை மன்னித்தால்தான் என்னுடைய ஆன்மா அமைதியில் இளைப்பாறும்... இதற்கு நீங்கள் ஏற்பாடு செய்வீர்களா?” என்று கேட்டார்.
அந்த செவிலியும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அந்தப் படைவீரர் குறிப்பிட்ட யூதரைக் கூட்டிக்கொண்டுவந்தார். படைவீரர் படுக்கையில் படுத்திருக்க, யூதர் அவருக்கு முன்பாக வந்து நின்றார். அப்போது படைவீரர் அந்த யூதரிடம், “ஐயா! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்... உங்களுடைய இந்த நிலைக்குக் காரணமே நான்தான். அதனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் என்னுடைய ஆன்மா அமைதியில் இளைப்பாறும்” என்றார். இதைக் கேட்ட அந்த யூதர் படைவீரரைக் கோபவெறியோடு பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
இதனால் அந்த நாசிப் படையைச் சார்ந்த படைவீரர், தன்னால் பாதிக்கப்பட்ட அந்த யூதர் தன்னை மன்னிக்கவில்லையே என்ற மனவருத்தத்தோடு இறந்துபோனார்.
தன்னை துப்பாக்கியால் சுட்ட படைவீரரை, எப்படி அந்த யூதர் கடைசி வரைக்கும் மன்னிக்காமல் இருந்தாரோ, அதுபோன்றுதான் நாமும் நமக்கெதிராகத் தவறு செய்தவர்களை மன்னிக்காமல், உள்ளத்தில் பகைமையோடும் குரோதத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, ஆண்டவராகிய கடவுள் மன்னிப்பதில் தாராள மனத்தவராகவும் குற்றங்களை நினைவில் கொள்ளாதவராகவும் இருக்கின்றார். அவர் எந்தளவுக்கு குற்றங்களை மன்னிப்பதில் தாரளமாக இருக்கின்றார் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
தீச்செயல்களையும் பாவங்களையும் நினைவுகூராத இறைவன்
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர், “அவர்களது தீச்செயலையும் அவர்களுடைய பாவங்களையும் இனிமேல் நினைவுகூர மாட்டேன்” என்று தூய ஆவியார் கூறுவதாக எழுதுகின்றார். இதைக் குறித்து நாம் இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
விவிலியம் முழுமைக்கும் நாம் படித்துப் பார்க்கின்றபோது, இறைவன் மன்னிப்பதில் தாராளமானவர் என்ற செய்தியை உணர்ந்து கொள்ளலாம். குறிப்பாக எசாயா புத்தகம் 55:7 ல், மன்னிப்பதில் இறைவன் தாராள மனத்தினர் என்றும், சீராக்கின் ஞான நூல் 16:11 ல் மன்னிப்பதில் அவர் வல்லவர் என்றும் சொல்லப்பட்டப்படுகின்றது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது, இறைவன் நம்மை அளவு கடந்த விதமாய் மன்னிக்கின்றார் என்ற செய்தியை உறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற தீச்செயல்களையும் பாவங்களையும் நினைவுகூராத இறைவன்’ என்ற வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி நமக்கு எழலாம்.
தொடக்கத்தில் நாம் பார்த்த மன்னிக்க மனமில்லாத அந்த யூதரைப் போன்று, இன்றைக்குப் பலர் தனக்கு எதிராக துரோகம், கெடுதல் போன்றவற்றைச் செய்தவர்களை மன்னிக்க மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை மன்னித்தாலும் அதனை மறக்கமுடியாமல், அதையே நினைத்து மனத்திற்குள் புழுங்கிக்கொண்டு இருக்கிறவர்கள் ஏராளம். ஆனால், ஆண்டவரோ நம்முடைய பாவங்களை எல்லாம் மன்னிப்பவராக மட்டுமல்லாமல், அதை மறந்துபோனவராக, நினைவில் கொள்ளாதவராக இருக்கின்றார். இதுதான் மனிதர்கள் மன்னிப்பதற்கும் இறைவன் மன்னிப்பதற்கும் உள்ள வித்தியாசமாக இருக்கின்றது. மனிதனுடைய மன்னிப்பு மடுவளவு என்றால், இறைவனின் மன்னிப்பு மலையளவாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மன்னிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகின்றார். ‘மற்றவர்கள் செய்த குற்றத்தை நாம் மன்னித்தால்தான், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிப்பார்’எ என்கிறார் (மத்6:14) ஆகவே, நாம் தீமை செய்பவர்களை மன்னிப்பவர்களாக, மன்னிப்பதோடு மட்டுமல்லாமல், அதனை மறக்கின்றவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்.
சிந்தனை
மன்னிப்பு என்பது விண்ணகத்திற்கு நாம் செல்வதற்கான ஒரு கயிறு போன்றது. ஒருவேளை நாம் பிறருடைய குற்றங்களை மன்னிக்காதுபோனால், நம்மால் விண்ணகத்திற்கு ஏறிச் செல்லமுடியாது” என்பார் ஜார்ஜ் ஹெர்பர்ட் என்ற அறிஞர். இதுதான் உண்மை. எப்போது நாம் பிறரை மன்னித்து, அதை அப்படியே மறந்து போகின்றோமோ, அப்போது இறைவன் நமது குற்றங்களை மன்னித்து, அதை நினைவில் கொள்ளாது விடுகின்றார்.
ஆகவே, இறைவனைப் போன்று நாமும் மன்னிப்பதில் தாராள உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.