ஜனவரி 24
ஜனவரி 24
எபிரேயர் 7: 25 – 8:6
நமக்காகப் பரிந்துபேசும் இயேசு
நிகழ்வு
நகர்புறத்தில் இருந்த கலைக்கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வந்தான் தமிழ் என்ற மாணவன். சாதாரண ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும், படிப்பில் அவன் கெட்டிக்காரன். அதனாலேயே அவனை அவனுக்குப் பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு சமயம் மாணவன் தமிழினுடைய வகுப்பு மாணவி ஒருத்தியை வேறொரு வகுப்பைச் சார்ந்த மாணவன் ஒருவன் கிண்டல் செய்தான் என்பதற்காக, அவன் தன்னுடைய வகுப்புத் தோழர்கள் ஒருசிலரைச் சேர்த்துக்கொண்டு மாணவியைக் கிண்டல் செய்த மாணவனை நைய்யப் புடைத்தான். இதனால் அடிபட்ட மாணவன் தக்க தருணம் பார்த்து, தமிழையும் அவனோடு இருந்த அவனுடைய வகுப்புத் தோழர்களையும் பதிலுக்கு அடித்ததால் பிரச்சினை மிகவும் பெரிதானது. கடைசியில் தமிழ்தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கல்லூரியின் முதல்வர் முன்பாக நிறுத்தப்பட்டான்.
கல்லாரி முதல்வரோ தமிழிடம், “உன்னைப் போன்ற ஆட்களால்தான் இந்தக் கல்லூரிக்குக் கெட்ட பெயர் வருகிறது. பேசாமல் டீசியை வாங்கிக்கொண்டு வேறொரு கல்லூரியில் சேர்ந்துகொள். அப்போதுதான் உனக்குப் புத்திவரும்" என்று கத்திக்கொண்டு இருந்தார். கல்லூரி முதல்வர் தமிழை நோக்கி இவ்வாறு சத்தம் போட்டுக் கொண்டிருந்த நேரம் பார்த்து, தமிழின் வகுப்பு ஆசிரியர் ஜீவா உள்ளே நுழைந்தார். அவர் மாணவன் தமிழின்மீது மிக உயர்வான மதிப்பு வைத்திருந்தார். ஜீவாவின் மீதுகூட கல்லூரியின் முதல்வர் மிக உயர்வான மதிப்பு வைத்திருந்தார்.
கல்லூரியின் முதல்வர் தமிழை கடுமையாகத் திட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த பேராசிரியர் ஜீவா அவரிடம், "ஐயா நான் சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த தமிழ் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்படியொரு தவறைச் செய்துவிட்டான். இந்த ஒருமுறை மட்டும் இவனை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் இவன் எந்த ஒரு தவறும் செய்யாதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று அவர் தமிழுக்காகப் பரிந்து பேசினார். கல்லூரி முதல்வரும், பேராசிரியர் ஜீவா மாணவன் தமிழைக் குறித்து நல்லவிதமாய் சொன்னதன் பொருட்டு, அவனை அந்தக் கல்லூரியிலேயே தொடர்ந்து படிக்க அனுமதித்தார்.
இதற்குப் பின்பு வெளியே வந்த தமிழிடம் பேராசிரியர் ஜீவா வந்து, "தமிழ்! இன்று மாலை என்னை வந்து நீ தனியாகச் சந்தித்துவிட்டுப் போ. உன்னிடத்தில் நான் ஒருசில விஷயங்களைப் பேசவேண்டும்" என்றார். அவர் சொன்னது போன்றே, தமிழ் வகுப்பு முடிந்ததும் பேராசிரியர் ஜீவாவைப் போய் சந்தித்தான். அவர் அவனுக்கு நிறைய அறிவுரைகளைச் சொன்னார். தமிழும் அவர் சொன்னது எல்லாவற்றையும் மிகப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு விட்டு, அவரிடமிருந்து விடைபெறும்போது, "சார் இன்று நான் கல்லூரியில் இருப்பதே உங்களால்தான். நீங்கள் செய்த இந்த உதவியை என்றைக்கும் மறக்கமாட்டேன். அதே நேரத்தில் நீங்கள் சொன்னதுபோன்றே நான் பொறுப்பை உணர்ந்து படிப்பேன். சமுதாயத்தில் பெரிய மனிதனாக மாறுவேன்" என்று சூழுரைத்துவிட்டு புது உத்வேகத்துடன் அவரிடமிருந்து விடை பெற்றுச் செய்றான்.
எப்படி தமிழுக்காகப் பரிந்துபேச பேராசிரியர் ஜீவா இருந்தாரோ, அது போன்று நமக்காகப் பரிந்து பேச நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கிறார்.
நமக்காக பரிந்துபேச இருக்கும் இயேசு
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், "ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருவோரை அவர் முற்றிலும் மீட்க வல்லவராக இருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்" என்கிறார். ஆம், நம்முடைய தலைமைக் குருவாகிய இயேசு நம்முடைய வலுவின்மையைக் கண்டு மனமிரங்காதவர் அல்ல. அவர் நம்முடைய வலுவின்மையைக் கண்டு மனமிரங்குகிறவர், நமக்காகப் பரிந்து பேசுகிறவர். ஆகவே இத்தகைய ஒரு (நமக்கு ஏற்ற, தூய, மாசற்ற, வானங்களுக்கு மேல் உயர்த்தப்பட்ட) தலைமைக் குருவை இறைவன் நமக்குக் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
மேலும், இவரைப் போன்று நம்மிலும் வலுவற்ற நிலையில் உள்ளவர்களுக்காக நாம் இறைவனிடம் பரிந்து பேச வேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய தலையாய பணி ஆகும்.
சிந்தனை
இன்றைய சூழலில் வலுவற்ற நிலையில் உள்ளவர்கள் மீது மனமிரங்குகிறவர்கள் மிக குறைவு. ஆனால் இயேசு அப்படி அல்லாமல், நம்முடைய வறிய நிலைகண்டு நமக்காக மனமிரங்கினார். அவரைப் போன்று நாமும் வாழ்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.