22 சனவரி 2019, செவ்வாய்

ஜனவரி 22

ஜனவரி 22

 

எபிரேயர் 6:10-20

 

   தளர்ச்சியை விட்டுவிட்டு, நம்பிக்கையோடும் பொறுமையோடும் வாழ்வோம்

 

நிகழ்வு

 

         ஒருசமயம் சாத்தான் பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பை விடுத்தது. “இத்தனை நாளும் நான் செய்துவந்த இந்தத் தொழிலை விட்டுவிட்டு, வேறொரு தொழிலைப் பார்க்கப் போகிறேன்.  அதனால் என்னுடைய தொழிலுக்கு நான் பயன்படுத்திய கருவிகளை எல்லாம் ஏலத்துக்கு விடப்போகிறேன். தேவைப்படுவோர் வாங்கிக்கொள்ளவும்”.

 

சாத்தான் விடுத்த இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பலர் சாத்தான் பயன்படுத்திய தொழில் கருவிகளை வாங்க போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கருவிகளில் தன்னலம், ஆணவம், வெறுப்பு, கோபம், பொறாமை, பேராசை, பதவி வெறி, சாதி வெறி, மதவெறி என்று பல்வேறு தொழில் கருவிகள் இருந்தன. இவற்றின் விலையோ மக்கள் ஓரளவுக்கு வாங்கக்கூடிய அளவில்தான் இருந்தன.           ஆனால் இவற்றுக்குப் பின்னால் மிகவும் தேய்ந்துபோய், அதே நேரத்தில் விலை அதிகமாக இருந்த ஒரு கருவி காணப்பட்டது.

 

அதைப் பார்த்துவிட்டு ஒருவர் சாத்தானிடம், ‘இது என்ன கருவி, தேய்ந்துபோய் இருக்கின்ற இந்தக் கருவிக்கு மட்டும் ஏன் விலை இவ்வளவு அதிகமாக உள்ளது?, இதன் இரகசியம்தான் என்ன?” என்று கேட்டார். அதற்கு சாத்தான் அவரிடம், “இந்த கருவிக்குப் பெயர் ஊக்கத்தைக் கெடு அல்லது அதைரியமூட்டு (Discouragement) என்பதாகும். என்னிடத்தில் உள்ள மற்ற எல்லாக் கருவிகளும் செயல்படுகிறதோ இல்லையோ, இந்தக் கருவி கட்டாயம் செயல்படும். அந்தளவுக்கு இந்தக் கருவிக்கு சக்தி இருக்கின்றது. என்னுடைய இந்தக் கருவி ஒருவரிடத்தில் செயல்படும் பட்சத்தில், அவர் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் வீழ்த்திவிடுவேன்” என்றது.

 

இப்படிச் சொல்லிவிட்டு சாத்தான் தொடர்ந்து சொன்னது, “இந்த உலகத்தில் இருக்கின்ற பெரும்பாலான பேர் என்னுடைய இந்தக் கருவிக்குப் பலியாகி, மனம் தளர்ந்து போய், மீண்டும் எழமுடியாமல் இருப்பவர்கள்தான். அதனால்தான் இந்தக் கருவி இப்படித் தேய்ந்து போய் இருக்கின்றது, விலையும் மிக அதிகமாக இருக்கின்றது’.

 

ஆம், ஊக்கம் கெட்டு, மனம்தளர்ந்து, நம்பிக்கை இழந்துபோய் இருக்கின்ற ஒருவர் தன்னுடைய வாழ்வில் முன்னுக்கு வருவது மிகக் கடிதம்தான். இத்தகைய சூழலில் இன்றைய முதல் வாசகம் என்ன செய்தியைச் சொல்கிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

 

மனம் தளராதே, நம்பிக்கை இழக்காதே!

 

         எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், “நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதிபெறும்பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தை இறுதிவரைக் காட்டவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். இவ்வாறு நீங்கள் தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குகளை உரிமைப்பேறாகப் பெற்றவர்களைப் போல் வாழுங்கள்” என்கின்றார். அதாவது நாம் மனந்தளர்ந்து போகாமலும் நம்பிக்கையை இழக்காமலும் இறுதிவரை முழு ஆர்வத்தோடு இருக்கவேண்டும் என்று எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் நமக்கு எடுத்துச் சொல்கின்றார்.

 

இன்று நம்முடைய நம்பிக்கை வாழ்விலும் வரி, அன்றாட வாழ்விலும் சரி, நம்பிக்கைத் தளர்ச்சி என்பது மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இறைவனிடத்தில் ஒரு தேவைக்காக ஒருமுறையோ அல்லது இருமுறையோ வேண்டுகின்றோம். அது கிடைக்கவில்லை என்றதும், இறைவனை அப்படியே மறந்துவிட்டு, நம்முடைய சொந்த வழியில் நடக்கத் தொடங்கிவிடுவோம். அதுபோன்றுதான் நம்முடைய அன்றாட வாழ்விலும், நாம் மேற்கொண்ட ஏதோ ஒரு முயற்சி தோல்வி அடைந்ததும், நம்முடைய அத்தனை முயற்சிகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு மூலையில் முடங்கிப் போய்விடுகின்றோம். நம்மை இப்படித் தளர்வுறச் செய்கின்ற, நம்பிக்கையை இழக்கச் செய்கின்ற எண்ணங்களைத் தவிர்த்து நம்பிக்கையோடும் பொறுமையோடும் வாழவேண்டும் என்றுதான் இறைவன் இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நமக்கு அழைப்புத் தருகின்றார்.

 

நாம் ஒருபோதும் மனந்தளர்ந்து போகக்கூடாது என்பதற்காக விவிலியத்தில் வருகின்ற ஒரு மிகச் சிறந்த உதாரணம்தான் யாக்கோபு ஓர் இரவில் ஆடவர் ஒருவரோடு போரிட்ட நிகழ்வாகும் (தொநூ 32:26). யாக்கோபு அந்த ஆடவரோடு இரவு முழுவதும் போரிடுகின்றார், கடைசியில், ‘நீ எனக்கு ஆசிர் வழங்கினாலொழிய நான் உம்மைப் போகவிடமாட்டேன்” என்று சொல்லி யாக்கோபு அவரிடமிருந்து ஆசி பெறுகின்றார். நாமும் மனந்தளராமல் இருந்தால், ஒருநாள் வெற்றியைப் பெறுவோம் என்பது உறுதி.

 

சிந்தனை

 

இன்று நம்முடைய மனதை தளர்வுறச் செய்ய, நம்முடைய நம்பிக்கையை இழக்கச் செய்ய, சாத்தான் மிகத் தந்திரமாக வேலைபார்த்துக் கொண்டிருக்கின்றது. நாம் மனவுறுதியோடு நின்று சாத்தானின் தந்திரங்களை வெற்றிகொள்வதுதான் சிறப்பானது.

 

ஆகவே, மனந்தளராமல், நம்பிக்கையை இழக்காமல், ஆண்டவர்மீது இறுதிவரை பற்றுக்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.