ஜனவரி 15
ஜனவரி 15
எபிரேயர் 2: 5-12
துன்பங்களைத் தூங்குவோருக்கே மணிமகுடம் உண்டு
நிகழ்வு
ஒருகாலத்தில் கிரேக்க நாட்டில் உள்ள மாசிடோனியாவின் அரசராக இருந்தவர் பிலிப் என்ற அரசர். அவருக்கு ஒரு மகன் இருந்தார். அவர்தான் பின்னாளில் மாவீரர் அலெக்ஸாண்டர் என்று உயர்ந்தவர். கிரேக்க நாட்டு வழக்கப்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குருகுலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு போர்கலை, தற்காப்புக் கலை இன்னபிற கலைகளில் பயிற்றுவிக்கப் படுவார்கள். அதன்படி அலெக்ஸ்சாண்டரும் குருகுலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கற்றுக்கொடுக்கப்பட்ட எல்லாக் கலைகளிலும் அவர் முதல் மாணவனாய் தேறிவந்தார்.
இந்நிலையில் பயிற்சியின் முடிவில் அக்னிப் பரீட்சை என்றொரு போட்டி இருக்கும். இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற ஒருவர்தான் அரசராவதற்கான முழு தகுதியுடைவர் என சொல்லப்பட்டு வந்தது. இதில் மாணவர்கள் கையில் தீச்சட்டியை ஏந்தி, ஒரு குறிப்பிட்ட நேரம் வரைக்கும் இருக்கவேண்டும். போட்டிக்கு அலெக்ஸ்சாண்டரின் பெற்றோருக்கு சிறப்பு அழைப்புக் கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அக்னிப் பரீட்சைப் போட்டியானது தொடங்கியது. போட்டியில் பங்குபெற்ற எல்லா மாணவர்களுடைய கையிலும் தீச்சிட்டியானது கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் பொறுமையோடு தாங்கிக் கொண்டிருந்தார்கள்.
நேரம் ஆக ஆக, தீச்சட்டியின் சூடுதாங்காமல் பலர் தோற்றுப்போய் போட்டியிலிருந்து வெளியேறினார்கள். ஆனால், அலெக்ஸ்சாண்டரோ கடுமையான சூட்டையும் தாங்கிக்கொண்டு மிகப் பொறுமையாக இருந்தார். இதற்கிடையில் அவருடைய கையில் ஏந்தியிருந்த தீச்சட்டியிலிருந்து, திடிரென்று ஒரு நெருப்புத் துண்டு பறந்து அவர்மேல் விழுந்து, பற்றி எரியத் தொடங்கியது. இதைத் தொலையில் இருந்து பார்த்துக்கொண்திருந்த அலெக்ஸ்சாண்டரின் தாயார், துடித்துப்போய் அதை அணைப்பதற்காக எழுந்து சென்றார்.
அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த அலெக்ஸாண்டரின் தந்தையும் அரசருமான பிலிப், அவரைத் தடுத்து நிறுத்தி, “நீ ஒன்றும் செய்யவேண்டாம். நம் மகன் தனக்கு வந்த இந்த இக்கட்டான சூழநிலையை எப்படி எதிர்கொண்டு வெற்றிகொள்கிறான் என்று பார்ப்போம். ஒருவேளை இப்போது நீ அவனுக்கு உதவச் சென்றால், ‘எனக்குப் பிரச்சனை வருகிறபோதெல்லாம் என்னுடைய பெற்றோர் எனக்கு உதவிசெய்ய வருவார்கள்’ என்று அவன் தவறான எண்ணத்தோடு வளரக்கூடும். மாறாக, இப்போது நீ இப்படியே இருந்துவிட்டால் அவன் ‘எனக்கு வந்த பிரச்னையை நான்தான் சமாளித்து வெற்றிகொள்ளவேண்டும்’ என்று பிரச்னையை எதிர்கொண்டு வெற்றிகொள்வான்” என்றார். இதனால் தன் மகன்மீது விழுந்த நெருப்பினை அணைக்கச் சென்ற, அலெக்ஸ்சாண்டரின் தாயார் அப்படியே இருந்தவிட்டார்.
இதற்குப் பிறகு அலெக்ஸ்சாண்டர் தன்மீது விழுந்த நெருப்புத்துண்டு கொடுத்த வேதனையையும், தான் கையில் தாங்கியிருந்த தீச்சட்டி கொடுத்த சூட்டினையும் குறிப்பிட்ட நேரம்வரை தாங்கிக்கொண்டு போட்டியில் வெற்றிபெற்றார்.
இப்படி சிறுவயதிலே அலெக்ஸ்சாண்டருக்கு துன்பங்களைத் தாங்கிக்கொண்டு, அதிலிருந்து எழுந்துவரக்கூடிய மனதைரியம் இருந்ததால்தான், பின்னாளில் அவர் மாவீரராக உயர என்று சொன்னால் அது மிகையாகாது.
துன்பம் மாட்சிக்கு இட்டுச் செல்லும் ஒரு கருவி
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், “நாம் காண்பதோ சிறுதுகாலம் வானதூதரைவிட சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம்” என்கின்றார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பாவத்தின் பிடியிலும், சாவின் பிடியிலும் சிக்குண்டு கிடந்த மானிட சமூகத்தை மீட்டெடுத்து புதுவாழ்வு கொடுக்க, சாதாரண ஒரு மனிதரானார். அது மட்டுமல்லாமல், சிலுவையில் ஒரு கொலைக்குற்றவாளியைப் போன்று அறைந்து கொல்லப்பட்டார். ஆதலால் கடவுள் அவரை, எல்லாருக்கும் மேலாக உயர்த்தி, மாட்சியையும், மாண்பையும் முடியாகச் சூட்டினார். இதைத்தான் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியரும், பிலிப்பியருக்கு எழுதிய மடலில் தூய பவுலும் (பிலி 2:6-11) நமக்கு எடுத்துரைக்கின்றார்கள்.
ஆகையால், நம்முடைய வாழ்வில் வருகின்ற துன்பங்கள், சோதனைகள், அவமானங்கள் இவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு, நமது இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து முன்னேறிச் சென்றால், ஒருநாள் வெற்றியை மணிமுடியாக சூட்டிக்கொள்வோம் என்பது உறுதி.
சிந்தனை
“சாதனையாளனோ ஒவ்வொரு சிக்கலிலும் ஒரு பொறுப்பைக் காண்கிறான். சாதாரண மனிதனோ ஒவ்வொரு பொறுப்பிலும் ஒரு சிக்கலைக் காண்கிறான்” என்பார் வில்லியம் ஆர்தர்வார்ட் என்ற அறிஞர். நமது வாழ்வில் வரக்கூடிய சிக்கல்களாக இருக்கட்டும், பிரச்சனைகளாக இருக்கட்டும் அவற்றையெல்லாம் ஒரு வாய்ப்பாக, சவாலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து முன்னேறினோம் என்றால், ஒருநாள் நாம் உயர்ந்த இடத்தை அடைவோம் என்பது உறுதி. அதைவிடுத்து வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு மனம்வருந்திக் கொண்டிருந்தால், ஒருநாளும் உயர்வடைய முடியாது.
ஆகவே, நமது வாழ்வில் வரும் துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொள்வோம். இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.